பக்கம் எண் :

1005.

     நாட நீறிடா மூடர்கள் கிடக்கும்
          நரக இல்லிடை நடப்பதை ஒழிக
     ஊடல் நீக்கும்வெண் நீறிடும் அவர்கள்
          உலவும் வீட்டிடை ஓடியும் நடக்க
     கூட நன்னெறி ஈதுகாண் கால்காள்
          குமரன் தந்தைஎம் குடிமுழு தாள்வோன்
     ஆட அம்பலத் தமர்ந்தவன் அவன்தான்
          அருட்க டல்படிந் தாடுதற் பொருட்டே.

உரை:

     கால்களே, யாரும் நாடுதலையுடைய திருநீற்றையணியாத மூட மக்கள் இருக்கும் நரகம் போன்ற இல்லங்கட்கு ஒன்று வேண்டிச் செல்வதைக் கைவிடுக; கருத்து மாற்றத்தைப் போக்கும் திருவெண்ணீற்றை யணியும் பெருமக்கள் வாழும் வீடுகட்கு நடந்தேயன்றி ஓடியும் அடைக. மிக்க நன்னெறியாவது இதுவாகும்; குமரவேட்குத் தந்தையாவானும், எங்கள் குடி முழுதும் இனிது வாழ அருள்பவனும், நடம் புரியவேண்டித் திருவம்பலத் திருந்தவனுமாகிய சிவபெருமானுடைய திருவருளாகிய கடலில் மூழ்கியாடுதற் பொருட்டு, எ.று.

     நாடல் - விரும்புதல், தன்னை அணிபவர் பலருக்கும் நலம் பல தருவது பற்றித் திருநீற்றை “நாடல் நீறு” என்றும், இத்தன்மை வாய்ந்த நீற்றின் நலம் அறிந்து அணியும் திறமில்லாதவரை “மூடர்கள்” என்றும், அவர்கள் உறைவது வீடாயினும் நரகவேதனையே நிலவுதல் விளங்க, “நரக இல்லிடை நடப்பதை ஒழிக” என்றும் உரைக்கின்றார். கருத்து வேற்றுமையால் ஒருவர் உள்ளத்தே ஊடல் தோன்றுதலால் ஒற்றுமை பயக்கும் வெண்ணீற்றினை “ஊடல் நீக்கும் வெண்ணீறு” என்று இயம்புகின்றார். நிலையின்றி நீங்குமிடமாயின் ஓடியடைதல் தகும்; இஃது அன்னதன்றி நிலைத்த இடமாதல்பற்றி, வேண்டா எனினும், சிறப்பித்தல் வேண்டி “ஓடியும் நடக்க” என உவந்து உரைக்கின்றார். கூட என்றது, ஈண்டு மிகுதிப்பொருட்டு; உலகியல் வழக்கு, “பத்து வினாடி கூடப் பேசினான்” என்றாற்போல. குடியிற் பிறந்தார் அனைவர்க்கும் வேண்டுவன நல்கி ஆளுமாறு தோன்ற, “குடிமுழு தாள்வோன்” என்று கூறுகின்றார். நீறணியும் நல்லறத்தின் பயனாக, அம்பலத் திறைவன் நல்கும் அருள் வெள்ளத்தில் மூழ்கி யின்புறுவது உறுதி என்பது இதனாற் பெறப்பட்டது.

     இதனால், நீறணிபவர் வாழும் நல்வீட்டை விரைந்தோடி யணைக; அது கால்கட்குரிய செய்கடன்களில் சிறப்புடையது; இது சிவ புண்ணியத் தேற்றம் என விளக்கியவாறு.

     (9)