பக்கம் எண் :

102.

    கோவேநல் தணிகைவரை யமர்ந்த ஞானக்
        குலமணியே குகனே சற்குருவே யார்க்கும்
    தேவேயென் விண்ணப்பம் ஒன்று கேண்மோ
        சிந்தைதனி னினைக்க வருள்செய்வாய் நாளும்
    பூவேயு மயன்திருமால் புலவர் முற்றும்
        போற்றுமெழிற் புரந்தர னெப்புவியு மோங்கச்
    சேவேறும் பெருமானிங் கிவர்கள் வாழ்த்தல்
        செய்துவக்கும் நின்னிரன்டு திருத்தாள் சீரே.

உரை:

     திருத்தணிகை மலையில் எழுந்தருளும் ஞான வடிவாகிய உயர்ந்த மணிபோல்பவனே, குகனே, மெய்ம்மையான குருவே, எத்திறத்தோர்க்கும் தெய்வமே, எளியேனது விண்ணப்பம் ஒன்றைக் கேட்டருள்க. தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் திருமாலும் பிற தேவர்கள் அனைவரும் ஒழிவின்றிப் பரவும் அழகிய இந்திரனும், நிலவுலகத்து எந்நாட்டவரும் ஓங்குமாறு எருதேறும் பெருமானாகிய சிவனும் ஆகிய இவர்கள் யாவரும் இனிது வாழ்த்தல் செய்யும் நின்னுடைய திருவடிகள் இரண்டின் பெருமைகளை யான் என் சிந்தையில் நினைந்திட அருள் புரிவாயாக, எ. று.

     மாணிக்கமணி போற் சிவந்த திருமேனி யுடையனாதலால் முருகனைக் “குலமணியே” என்று குறிக்கின்றார். குகன்-அன்பர் மனமாகிய குகையில் தங்குபவன். மெய்ஞ்ஞான மாகிய உள்ளீடின்றிக் குரு வடிவில் தோன்றும் போலிகளை விலக்குதற்குச் “சற்குருவே” என்றும், தேவருலகத்துத் தேவதேவ னென்றற்கு, “யார்க்கும் தேவே” என்றும் இசைக்கின்றார். புலவர் - தேவர்கள். தேவர்கட்கு வேந்தனாதல் பற்றி இந்திரனைப் “புலவர் முற்றும் போற்றும் எழில் புரந்தரன்” என்று சிறப்பிக்கின்றார். சிவன் எருதேறி வருவது நிலவுலகத்தவர் உண்பன இனிது விளைத்துண்டு வாழ்தல் குறித்தது எனற்கு “எப்புவியும் ஓங்கச் சேவேறும் பெருமாள்” என்று சிவனைப் புகழ்கின்றார். சே - எருது. சூரனைத் தலைவனாகக் கொண்ட அசுரர்களின் கொடுமையினின்றும் காத்தளித்த திருவருட் செயலை விதந்து, முருகன் திருவடிகளை “இங்கு இவர்கள் வாழ்த்தல் செய்துவக்கும் நின் இரண்டு திருத்தாள்” என்றும், பிறரை வாழ்வித்து அவரது இனிய நல்வாழ்வு கண்டு மனமகிழும் மாண்புடையனாதலால் முருகனை, “வாழ்த்தல் செய்து உவக்கும் இரண்டு திருவடிகள்” என்றும் ஏத்துகின்றார். உலக வாழ்வில் பல்வேறு காட்சிகளைத் தந்தலைக்கும் பொறி புலன்களாலும், அவற்றின் ஈர்ப்பால் உளவாகும் ஆசைகளாலும் அலைப்புண்டு எப்போதும் அலமரும் மனத்தால் நல்லது நினைத்தற்கு ஒன்றாமை பற்றி, “நின் இரண்டு திருத்தாள் சீர் சிந்தைதனில் நினைக்க அருள் செய்வாய்” என முறையிடுகின்றார். “நின்பால் அன்பு செய்வான் ஆதரிக்கின்றது உள்ளம்; ஆயமாய காயந் தன்னுள் ஐவர் நின்று ஒன்றலொட்டார், மாயமே என்றஞ்சுகின்றேன்” (வலிவலம்) என ஞானசம்பந்தரும் முறையிடுவது காண்க.

     இதனால் முருகப்பெருமான் திருவடிப் புகழைச் சிந்தையால் நினைக்க உதவ வேண்டுமாறு காண்க.

     (10)