1025. புன்னு னிப்படும் துளியினும் சிறிய
போகம் வேட்டுநின் பொன்அடி மறந்தேன்
என்னி னிப்படும் வண்ணம்அஃ தறியேன்
என்செய் கேன்எனை என்செயப் புகுகேன்
மின்னி னில்பொலி வேணியம் பெருமான்
வேற லேன்எனை விரும்பல்உன் கடனே
தென்ன னிப்படும் சோலைசூழ்ந் தோங்கித்
திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
உரை: அழகு மிகுதிப்படும் சோலைகள் சூழ நின்றுயர்ந்து விளங்கும் திருவொற்றியூர்த் தியாகப்பெருமானே, புல்லிலையின் நுனியில் ஒட்டிய நீர்த்துளியினும் சிறிதாகிய போகத்தை விரும்பி நின்னுடைய திருவடியை மறந்தேன்; இனி யான் படவேண்டிய துன்பவண்ணம் யாதோ அறியேன்; யான் அதுபற்றி என்ன செய்வேன்; எனைக் காத்தற் பொருட்டு யான் செய்யக் கடவது யாதென நினைந்து எவ்விடம் புகுவேன்; முகிலிடைத் தோன்றும் மின்னலைப்போல் விளங்கும் சடையையுடைய பெருமானே, நின் அடியாரினும் வேறல்லேனாதலின் என்னை விரும்பி ஆட்கொள்வது நினக்குக் கடனாம். எ.று.
தென் - அழகு. நனி - மிகுதி. புல்லெனப் பொதுப்பட மொழிந்தாரேனும், அறுகம் புல்லே சிறப்பாகக் கொள்ளப்படும். நுகரப்படும் போகத்தின் சிறுமைக்குப் “புன்னுனியின் துளி” யுவமமாயிற்று. உலகியற் போகத்தின் சிறுமையை நோக்க, இறைவன் பொன்னார் திருவடிக்கண் பெறலாகும் சிவபோகம் மலையினும் மாணப்பெரிது என்ற கருத்துப் புலப்பட, “நின் பொன்னடி மறந்தேன்” என்று புகல்கின்றார். திருவடி மறந்த குற்றத்தால் வரக்கடவ துன்பத்துக்கு அஞ்சுமாறு தோன்ற, “என் இனிப்படும் வண்ணம் அஃது அறியேன்” என்றும், வந்தவிடத்து அதனை ஆற்றமாட்டாமை விளங்க, “என் செய்கேன்” என்றும், யாரை எவ்விடத்திற் புகலடைந்தால் உய்தி பெறலாம் என்றற்கு “எனை என்செயப் புகுகேன்” என்றும் முறையிடுகின்றார். அடியார்கட்கு அருளியதுபோல உடல் கருவி இடம் போகம் அறிவு முதலியன அடியேனும் நின் அருள் நல்கப் பெற்றுளேனாதலால், அவரின் வேறாதற்கு ஏதுவில்லை என்பாராய், “வேறலேன்” என்றும், அந்த அடியார்க்குச் செய்யும் அருள்நலமே அடியேனுக்கும் செய்தருள்க என்பாராய், “எனை விரும்பல் உன் கடனே” என்றும் இயம்புகின்றார். அன்பர்கட்குச் செய்யும் சிறப்பனைத்தும் அடியேனுக்கும் செய்தமையின், அன்புடைய அடியாரைத் தாங்குதல் உனக்குக் கடனாதல் போல எளியேனைத் தாங்குதலும் கடன் என்ற கருத்தால் “விரும்பல் உன் கடனே” என்றார் என்றுமாம்.
இதனால், புன்னுனித் துளியினும் சிறுமையுடைய போகம் வேட்டுச் சிவபோக மிழந்தமை நினைந்து அவலமுற்று, “இனிப்படும் வண்ணம் என்? என் செய்கேன்? என் செயப் புகுகேன்” என அழுங்கியவாறு காணலாம். (9)
|