41. திருவிண்ணப்பம்
திருவொற்றியூர்
அஃதாவது தம்மிடத்துள்ள குற்றமும் விருப்பமும் எடுத்துரைத்துச்
சிவன்பால் முறையிடுவதாகும். இவ்விண்ணப்பம் பொதுவகையாய்த் தாம் கூறுவனவற்றைப் பொய்யெனத்
தள்ளிவிடலாகாது; விடின் தமக்குப் போக்கிடம் வேறில்லை என்று முறையிடுவதால் திரு விண்ணப்பம்
என்ற பெயர் பெறுகிறது.
இதன்கண், நம் வள்ளற் பெருமான் முதலில் சழக்குடைமை, அடக்கமின்றிப் பேசுந்தன்மை, ஏழைமை,
உலகியல் மயக்குடைமை ஆகிய குற்றமுடையேன்; பொழுது வெறிதே கழிதற் கஞ்சுகின்றேன்; அருள்
பெறாவிடில் என் அன்பு மாறும் இயல்பினது எனக் குற்றமும் குறையுமாகியவற்றை மொழிகின்றார்.
பின்னர், அருள் வழங்குவாயாயின் விரைந்தேற்கும் ஆர்வத் துடிப்புடையேன்; நஞ்சை அமுதாக்குவது
போலக் குற்றம் களைந்து நேர்மை யுடையனாக்கித் தொண்டர் மரபினனாக்க வேண்டும்; உள்ள
பிழைகளைப் போக்கித் திருவடிக்கீழ் இன்புற்றிருக்கும் நிலையைப் பெற விழைகின்றேன் என்று
விளம்புகின்றார்.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய
விருத்தம் 1027. சழக்கி ருந்ததென் னிடத்தில்ஆ யினும்நீர்
தந்தை ஆதலின் சார்ந்தநல் நெறியில்
பழக்கி வைப்பது தேவரீர்க் குரிய
பண்பன் றோஎனைப் பரிந்திலீர் ஆனால்
வழக்கி ருப்பதிங் குமக்குமென் றனக்கும்
வகுத்துக் கூறுதல் மரபுமற் றன்றால்
புழைக்கை மாவுரி யீர்ஒற்றி உடையீர்
பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.
உரை: உள்ளே புழை பொருந்திய கையை யுடைய யானைத் தோலைப் போர்த்தவரே, ஒற்றியூரை யுடையவரே, என்னிடத்தில் பிணங்கும் தன்மை இருக்கின்றதாயினும் நீர் எனக்குத் தந்தையாதலால் நல்லோர் சென்ற நன்னெறியில் என்னைப் பழக்கி விடுவது தேவரீர்க்குரிய பண்பன்றோ? என்மேற் பரிவில்லாமல் இருக்கின்றீராயின், உமக்கும் எனக்கும் இடையே வழக்கொன்று உளதாம்; ஆனால் அதனை வகுத்துப் பலரறிய விளம்புதல் மரபன்று; யான் சொல்வதை ஏலாமல் பொய்யன் என்று என்னைப் புறக்கணிப்பீராயின், உனக்கும் எனக்கும் இடையே வழக்கொன்று உளதாம்; ஆனால் அதனை வகுத்துப் பலரறிய விளம்புதல் மரபன்று; யான் சொல்வதை ஏலாமல் பொய்யன் என்று என்னைப் புறக்கணிப்பீராயின், எனக்குப் போம் வழி யாதாம்? கூறியருள்க, எ.று.
யானையின் துதிக்கை யுள்ளே புழையுடைய தாகலின், அதனைப் “புழைக்கைமா” என்று கூறுகின்றார்கள். “புழைக்கை வரை தொலைத்தானை” (திருவிளை) என்பர் பரஞ்சோதி முனிவர். உரி - தோல். சழக்கு - பிணங்கும் இயல்பு; முரணுதலுமாம். நல்லது கூறினும் முரணிப் பிணங்கும் இயல்பினனாதலின் எவரையும் எதிர்த்து மறுத்தொழுகுகின்றேன் என்பாராய், “சழக்கிருந்தது என்னிடத்தில்” என்றும், என்றாலும் சான்றோனாக்கும் கடமையால் என்னை நன்னெறியிற் செலச் செய்து, தவறுமிடத்துத் திருத்தி, அந்நெறிக்கண் என்னை நிறுத்துவது தேவ தேவனாகிய உனக்கு முறை யென்பாராய், “தந்தையாதலின் சார்ந்த நன்னெறியில் பழக்கி வைப்பது தேவரீர்க்குரிய பண்பன்றோ” என்றும் இயம்புகின்றார். “சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே” (புறம்) என்பர் சங்கச் சான்றோர். “தந்தையாய் உலகுக்கோர் தத்துவன் மெய்த் தவத்தோர்க்குப் பந்தமாயின பெருமான்” (ஆனைக்கா) என்றும், திருத்திப் பழக்குதல் முறை யென்பதைத் “திருத்தித் திருத்தி வந்தென் சிந்தை யிடங்கொள் கயிலாய” (ஊர்த்) என்றும் சுந்தரர் எடுத்தோதுவது காண்க. என்மேல் அன்பில்லாதவர்போல் இருக்கின்றீர்; இது கூடாது என்றற்கு “எனைப் பரிந்திலீர்” எனவுரைக்கின்றார். இதனால் உலகுடல் கருவி கரணங்களைத் தந்து வாழச்செய்த நீ வாழ்ந்து உய்தி பெறற்கு வேண்டும் ஞானமும் நன்னெறியும் காட்டுகின்றாயில்லை என உம்மைத் தொடர்ந்து வழக்காட இடமுளது; உம் திருவடியை முப்போதும் இறைஞ்சி இரந்து நின்று அருள் பெறும் நிலையிலுள்ள யான் அது செய்வது நேர்மையாகாது என்பாராய், “வழக்கிருப்பது உமக்கும் என்றனுக்கும் வகுத்துக் கூறுதல் மரபன்று” என்றும், யான் கூறுவது பொய்யென்று விலக்குவாயாயின், எனக்குப் புகல் வேறு இல்லை என்று தெரிவிப்பாராய், “பொய்யன் என்னில் யான் போம் வழி எதுவோ” என்றும் விண்ணப்பிக்கின்றார்.
இதனால், என்பால் சழக்கிருப்பது பற்றி என்மேற் பரிவு கொள்ளாமல் பொய்யன் என்று என்னைப் புறக்கணித்தால் எனக்குப் புகலிடம் இல்லை என்று விண்ணப்பித்தவாறு. (1)
|