1056. முறைப்படி நினது முன்புநின் றேத்தி
முன்னிய பின்னர்உண் ணாமல்
சிறைப்படி வயிற்றில் பொறைப்பட ஒதிபோல்
சென்றுநின் முன்னர்உற் றதனால்
கறைப்பட ஓங்கும் கண்டனே எவர்க்கும்
கருத்தனே ஒருத்தனே மிகுசீர்
தறைப்படர்ந் தோங்கும் ஒற்றியில் உன்னால்
தண்டிக்கப் பட்டனன் அன்றே.
உரை: விடக்கறையால் சிறப்புமிகும் கழுத்தையுடையவனே, எத்தகைய மேலோர்க்கும் தலைவனே, ஒருத்தனை, நினது திருமுன்பு நின்று முறையாகத் தொழுது வணங்கி நீலகண்டத்தை நினைந்தோதிய பின்பு உண்ணாமல், அடிப்பக்கத்தில் குடரின்மேல் படிந்து கிடக்கும் வயிறு பொறுக்குமளவு பட உண்டு திருக்கோயிற்குச் சென்று நின் திருமுன்னர் ஒதிமரம்போல் நின்றேனாதலால், நிலவுலகில் மிக்க புகழ் கொண்டு ஓங்கிய ஒற்றியூரின்கண் உன்னால் நன்றாக தண்டிக்கப்பட்டேன். எ.று.
முறைப்பட ஏத்துதலாவது, இரு கையும் கூப்பி மார்பிலும் தலையிலும் வைத்துப் பின் தரையில் வீழ்ந்து வணங்கி வழிபடுதல், கையும் மெய்யும் தொழுது வணங்க மனம் சிவன் புகழை நினைத்தலும் வாய் ஓதுதலும் முறையாகும். இம்முறையில் உணவு கொள்ளச் செல்லுமுன் இறைவனை வழிபட்டு நீலகண்டம் என்ற மறைமொழியை மனத்தால் நினைந்து வாயால் ஓதுதலைச் செய்யாதொழிந்த திறத்தை “முறைப்படி நினது முன்பு நின்றேத்தி முன்னிய பின்னர் உண்ணாமல்” என்று உரைக்கின்றார். முன்னுதல் - முற்பட நினைத்தல். சிறை - பக்கம். படிவயிறு - குடரின் மேற் படிந்திருக்கும் வயிறு. பொறை - பொறுக்குமளவு. வயிறார உணவுண்டு பின்னர்த் திருமுன் வந்தமை தோன்ற, “வயிற்றில் பொறைபட உண்டு சென்று நின் முன்னர் உற்றதனால்” என்று கூறுகிறார். உண்டு என்பது, அவாய் நிலை. மேலோர்க்கெல்லாம் மேலாய தலைவனாதல் விளங்க, “எவர்க்கும் கருத்தனே” என்றும், ஒப்பாரு மிக்காருமில்லாத தனித்தலைவன் என்றற்கு “ஒருத்தனே” என்றும் இயம்புகின்றார். “ஒப்பில் ஒருத்தனே போற்றி” (சதக) என்று மணிவாசகப் பெருமான் உரைப்பது காண்க. தறை - நிலம்.
இதனால், நீலகண்டம் ஓதாமுன் வயறாரவுண்டு திருமுன் சென்று நின்ற குற்றம்பற்றித் தண்டிக்கப்பட்டது கூறியவாறாம். (10)
|