44. ஆடலமுதப் பத்து
திருவொற்றியூரும்
திருத்தில்லையும்
திருவொற்றியூரிற் கோயில் கொண்டருளி அருளரசு புரியும்
சிவபெருமானாகிய தில்லையம்பலத்தில் ஞானத்திருக்கூத்தியற்றும் இறைவனை இப்பத்தின்கண்
வள்ளற்பிரான் பாடியருளுகின்றார். பாட்டு ஒவ்வொன்றும், “அம்பலத்தில் நின்று ஆடல் செய்
அமுதே” என்று முடிவதால், இஃது ஆடலமுதப் பத்து எனப் பெயர் பெற்றுள்ளது. ஒரு பதியத்தின்கண்
ஒன்றிற்கு மேம்பட்ட திருப்பதிகளைச் சேரவைத்துப் பாடுவது திருமுறையருளிய ஞானசம்பந்தர் முதலிய
சமய குரவர் மரபு. அப்பெருமக்கள் காட்டிய அருணெறியில் நின்று வள்ளலார் திருவருட்பாவை
வழங்குகின்றாராதலின், இப்பத்தின்கண் ஒற்றியூரும் தில்லையும் ஒருங்கு வைத்துப் பாடுகின்றார்.
உடம்பொடு கூடி உலகில் வாழும் மக்களுயிர் செய்வனவற்றைச் சீர் தூக்கி நோக்கினால், அவர்கள்
உடலிடத்துள்ள கருவி கரணங்களைக் கொண்டு உலகியற் பொருள்களை அறிவதும் செய்வதும் என்ற
இரண்டினையே செய்வது தெற்றெனத் தெரியும் அறிதற்கமைந்த அறிகருவி, மெய் முதலிய ஐந்துமாகும்;
செயற் கருவி வாய், கை முதலிய ஐந்துமாகும். இவற்றின் வாயிலாக மக்களுயிர் அறிதலும் செய்தலும்
என்ற இரண்டினையும் புரிகிறது; செய்தலும் அறிவுப் பேற்றுக்கு வாயிலாதலுண்டு. “சொன்ன சிவன்
கண்ணா உளம் வினையாற் கண்டறிந்து நிற்கும் காண்” என்று சிவஞான போதம் கூறுகிறது. இவ்வறி
கருவி செயற்கருவிகளை இயக்கி உயிர் அறிவு பெறுகிறது. அந் நெறிக்கண் அதற்கு உறுதுணையாக மனம்
என்றொரு நுண்ணிய கருவி உயிரெல்லைக்குள்ளே யுளது. இதனைத் தமிழ்நூல் நெஞ்சம் என்று உரைக்கும்.
மனமும் அறிவு செயல்கட்குரிய கருவி போல் உயிரறிவு வளம் பெறுதற்குச் சிறந்த கருவியாய், கண்
காது முதலியவற்றால் எய்திய அறிவுப் பொருள்களைத் தனக்குள் வாங்கி ஆராய்ந்து உண்மைத் தெளிவு
பெற உதவுகிறது. அதனால் மனமாகிய கருவியை ஏனைக் கருவிகளின் வேறுபடுத்த வடமொழியார் கரணம்
என்கின்றனர். கரணம் என்ற வடசொல், கருவியை யுணர்த்துவதாம். உடலின் கண், காது முதலிய
அறிகருவிகளும், கை கால் முதலிய செயற் கருவிகளும், உயிரையும் மனத்தையும் நோக்கப் புறக்
கருவிகளாம்; மனம் உயிருக்கும் கருவிகட்கும் இடையே உள்ளே இருத்தலால் அதனை வடமொழியார்
அந்தக்கரணம் என்பர். மனமாகிய அந்தக்கரணம் உடலினுள் எங்கே யுளது என ஆராய்ந்த அறிஞர்
மேனாட்டிலும் நம் நாட்டிலும் பலர். இப்போது மேனாட்டு லார்டு பிரெயின் என்னும் விஞ்ஞானி,
மனம் மக்களின் தலையிலுள்ள மூளையில் உளது என்கிறார். அதனைப் பலர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
நம் நாட்டவர், மனத்தின் உண்மை கூறினரேயன்றி உடற்குள் அதற்குரிய இடம் இஃது என இன்று காறும்
கண்டறிந்து கூறிற்றலர்.
இங்ஙனம் உயிர்கட்கும் கருவிகட்கும் இடையே மனமாகிய கரணம் இருக்கிறதெனினும், உயிரையும்
கருவிகளையும் தனக்கு அடிப்படுத்தி ஆட்டுதலும், தான் அவற்றிற்கு அடிப்பட்டொழுகுதலும் மனத்துக்கு
இயல்பு. கருவிகளின் வாயிலாக உலகியற் பொருள்களின் ஆக்க வழிவுக் கூறுகளை ஆராய்ந்தறிவதும்,
ஆவன ஆகாதனவற்றைத் தெரிந்துணர்தலும், அவற்றைச் செய்தற்கும் தவிர்தற்கும் கருவிகளை
இயக்குவதும் ஒடுக்குவதும் செய்வது மனத்தின் வேலை. உடலின் உள்ளும் புறமும் உள்ள உடலியற்
பொருள்கட்குரிய பணிபுரிவதும் மனத்துக்குரிமை. இவ்வகையில் மனம் உடற்கு அகத்தும் புறத்தும்
கருவிகளோடு கூடியும் பிரிந்தும் உயிரின் விருப்பு வெறுப்புக்கட் கியைய இயங்கியவண்ணம் உளது.
அவ்வியக்கம் மிக விரைவாக நடைபெறுதலால், அதனைப் பெருங் காற்றிற் சுழலும் வலிய காற்றாடிக்கு
ஒப்பா மென்பர். நிகழ்ச்சியனைத்துக்கும் உயிருணர்வு முதலாயினும், உடல் கருவிகளால் உருவாகும்
அறிவு செய்கையனைத்திற்கும் மனமே வினைமுதல் போலக் காணப்படும். இம் மனம் உடல்வழி நிற்கும்
கருவிகள் வழி நின்று இயங்குமாயின் தீதும், உயிருணர்வின் வழி நின்று இயங்குமாயின் நன்றும்
எய்துகிறது. புறவுலகும் உடலும் கருவிகளும் ஈர்க்கும் ஈர்ப்பு வழி நின்று, மனம் அலவுற்று உயிரைக்
கலக்குவது பெரும்பான்மை. உலக வாழ்வு துன்பமாவதற்குக் காரணமே இதுவாம். இப்பத்தின்கண் அலமரல்
பற்றி மனத்தை வள்ளலார் நொந்துரைத்து இறைவன்பால் முறையிடுவதைப் பாட்டுத் தோறும் காணலாம்.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய
விருத்தம் 1057. சிந்தை நொந்துநொந் தயர்கின்றேன் சிவனே
செய்வ தோர்ந்திலேன் தீக்குண முடையேன்
வந்து நின்னடிக் காட்செய என்றால்
வஞ்ச நெஞ்சம்என் வசம்நின்ற திலையே
எந்தை நின்னருள் உண்டெனில் உய்வேன்
இல்லை என்னில்நான் இல்லைஉய்ந் திடலே
அந்தி வான்நிறத் தொற்றியூர் அரசே
அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
உரை: அந்திப் போதில் மேலைவானம் கொள்ளும் நிறத்தையுடையனாய் ஒற்றியூர்க்கண் இருந்து ஆட்சி புரியும் அருளரசே, தில்லையம்பலத்திகண் நின்று திருக்கூத்து இயற்றும் ஞானவமுதமே, சிவனே, மனம் மிகவும் நொந்து அயர்ச்சியுறுகின்றேன்; யாது செய்வதெனத் தெளிகின்றேனில்லை; தீய குணமுடையனாயுள்ளேன்; நின்பாற் போந்து நின் திருவடிக்கு ஆட்செய்யலாம் என்றால், கருவி வழிச்சென்று வஞ்சிக்கும் மனம், என் வசம் நில்லாமல் ஓடுகிறது; எந்தையாகிய உனது திருவருள் எனக்கு உண்டாயின் யான் உய்தி பெறுவேன்; இல்லையாயின் எனக்கு உய்யும் நெறி இல்லை; ஆகவே, என்னை உய்வித்தல் நின் கடனாம். எ.று.
பொது வகையில் மனமெனவும் நெஞ்சமெனவும் வழங்கும் அந்தக் கரணத்தைச் சிறப்புவகையில் சித்தம், மனம், ஆங்காரம், புத்தி என்று நான்காகக் கூறுவர், “நாலந்தக் கரணமும் ஒரு நெறியாய்ச் சித்திக்கே யுய்த்திட்டுத் திகழ்ந்த மெய்ப் பரம்பொருள்” (பிரம) என ஞானசம்பந்தர் கூறுவர். சித்தம் கருவிகளாற் கண்டதை யாதாம் எனச் சிந்திக்கும் என்றும், மனம் பற்றும் என்றும், ஆங்காரம் தெளிவு பிறவாது எழும் என்றும், புத்தி இன்னதெனத் துணியுமென்றும் சிவஞானபோதம் கூறுகிறது. “ஐயம் துணிதல் அபிமானம் சிந்தனைகள், செய்யும் மனம் புத்தியாங்காரம் சித்தமென, மெய்யுணரில் அகக்கரணம் வினையின் வேறாதலால், வையகத்தினால் கரணமென்றே வழங்கியதால்” என்று குறுந்திரட்டு என்ற தொகை நூல் சொல்லுகிறது. இவற்றை விரித்துத் தனித்தனியே காணுமிடத்துச் சிந்திக்கும் நிலையில் மனம் சிந்தையாம் எனக் கொள்க. அகக் கரணமாகிய மனம் செய்ததைச் சிந்தையிற் கொண்டு வந்து சிந்தித்து நன்றாயின் இன்புறுதலும் தீதாயின் துன்புறதலும் அதன் செயல்வகை. சிந்தனைக்கண் தீது தோன்றக் கண்டு வருந்திய திறத்தைச் “சிந்தை நொந்து நொந்து அயர்கின்றேன்” என்றும், அதனை விடுத்து நன்று தருவதைச் செய்து இன்புறலாமெனில், சித்தத்தில் செய்வது புலப்படாமைக்கு வருந்தி, “செய்வதோர்ந்திலேன்” என்றும் மனத்தை இயக்குதற்குரிய குணவகையுள் தெளிவிற் செலுத்தும் சத்துவமின்றிக் கலக்கமும் மயக்கமும் புரியும் தீயன சூழ்தலால் “தீக்குணமுடையேன்” என்றும் சொல்லுகின்றார். உலகியற் பொருட்சூழல் இவ்வாறு கலக்குதலால் ஒளி நல்கும் நின் திருவருட் சூழலையடைந்து நின் திருவருட்குப் பணிசெய்து உய்தி பெறக் கருதும்போது, நல்லதுபோலத் தீநெறிக்கட் புகுத்த முற்பட்டு என் நெஞ்சம் என் வசம் நின்றதில்லையே” என்று வருந்துகின்றார். பொறிபுலன்கள் வழி நின்று காட்டுவன இன்பமாய்த் தோன்றித் துன்பம் பயத்தலின், நெஞ்சினை “வஞ்ச நெஞ்சம்” என்று கூறுகின்றார். என் வழி நில்லாது பன்னெறிகளிற் படர்ந்தோடும் மனத்தைப் படைத்தளித்த நின் திருவருள் துணை செய்யுமாயின் நன்னெறிக்கண் நிறுத்தி யான் உய்திபெற முடியும் என்பாராய், “எந்தை நின் அருள் உண்டெனில் உய்வேன்” என்றும், அருளிற் பெரியது பிறிது யாதுமில்லாமையின், அதன் துணை எனக்கு இல்லையாயின் உய்தில்லை என்பாராய், “இல்லை என்னில் நான் இல்லை உய்ந்திடலே” என்றும் இயம்புகின்றார். அந்திப்போதில் ஞாயிறு தன் பொற்கதிர்களை ஒடுக்கிச் சேறலால் வானம் பெறும் பொன்னிறம் சிவனது திருமேனி நிறம் போலுதலால் “அந்திவான் நிறத்து அரசே” என்று புகழ்கின்றார். ஒற்றியூர்க்கண் இருந்து வழிபடும் உயிர்கட்கு அருள் வழங்குதல்பற்றி “ஒற்றியூர் அரசே” என்றும், படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்ற ஐவகைத் தொழிலைத் தெரிவிக்கும் திருக்கூத்தைத் தில்லைச் சிற்றம்பலத்தே ஆடிக் காண்பார்க்கு இன்பம் செய்வது கொண்டு “அம்பலத்தினில் ஆடல் செய் யமுதே” என்றும் இசைக்கின்றார்.
இதன்கண், இறைவன் திருவருள் துணையின்றேல் உயிர்கட்கு உய்தி வேறில்லை என்பது வற்புறுத்தப்படுவது காண்க. (1)
|