1075. வாடு கின்றனன் என்றனை இன்னும்
வருந்த வைக்கினும் மறந்திடேன் உன்னைப்
பாடு கின்றனன் பாவியேன் என்னைப்
பாது காப்பதுன் பரம்அது கண்டாய்
தேடு கின்றமால் நான்முகன் முதலாம்
தேவர் யாவரும் தெரிவரும் பொருளே
சேடு நின்றநல் ஒற்றியூர் வாழ்வே
திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே.
உரை: திருமுடியும் திருவடியும் முறையே தேடியும் காணாதொழிந்த பிரமன் திருமால் முதலாகிய தேவர்கள் அனைவரும் தெரிதற்கரியதாகிய சிவபரம் பொருளே, பெருமை தங்கிய நல்ல ஒற்றியூரவர்க்கு வாழ் முதலே, திருச்சிற்றம்பலத்தில் விளங்கும் ஞானவொளி விளக்கே, திருவருள் வேண்டி நாளும் வாடி வருந்துகின்ற என்னை மேலும் வருந்த வைத்தாலும் நான் உன்னை மறக்க மாட்டேன்; மறவாமல் உன்னைப் பாடுகின்றேன்; பாவியாகிய என்னை அருளிப் பாதுகாப்பது உனக்குக் கடன். எ.று.
தேவர்கள் உலகில் திருமாலும் நான்முகனும் தலைவர்களாதலால், “மால் நான்முகன் முதலாம் தேவர்” என்றும், திருமாலும் நான்முகனும் சிவனுடைய அடிமுடி காணா தொழிந்த செய்தி நினைக்கப்படுதலால், “தேடுகின்ற மால் நான்முகன் முதலாம் தேவர் யாவரும் தெரிவரும் பொருளே” என்றும் சிறப்பிக்கின்றார். சேடு - பெருமை. சிவபரம் பொருளின் திருவருட்பேறு நினைந்து வருந்துகின்றாராதலின் “வாடுகின்றனன்” என்றும், அது தீராமல் மேலும் தொடர்தலின், “என்றனையின்னும் வருந்த வைக்கினும்” என்றும், அதனால் மனம் மாறாமை புலப்பட “மறந்திடேன்” என்றும், மறவாமற் செய்வது கூறுவார். “உன்னைப் பாடுகின்றனன்” என்றும் கூறுகின்றார். இடர்வரினும் தளர்ச்சி யெய்தினும் சிவனை மறத்தல் கூடாது என்ற கருத்துத் தோன்ற, ”இடரினும் தளரினும் எனதுறு நோய் தொடரினும் உன்கழல் தொழு தெழுவேன்” (ஆவடு) என ஞானசம்பந்தர் பணித்தலால், வள்ளலார் இவ்வாறு உரைக்கின்றார் என அறிக. வேண்டுவோர் வேண்டுவதீயும் சிவபெருமான் ஈயாது தாழ்த்தற்குக் காரணம் தாம் செய்த பாவம் என்று எண்ணுகின்றமையின், “பாவியேன்” என்று தம்மைப்பற்றி நொந்துரைத்து, எவ்வண்ணம் இருப்பினும் தாம் வேண்டும் அருளை நல்கிப் பாதுகாப்பது சிவனுக்குக் கடன் என்பார். “என்னைப் பாதுகாப்பது உன் பரம் கண்டாய்” என வுரைக்கின்றார். “தன் கடன் அடியேனையும் தாங்குதல்” என்று நாவுக்கரசர் கூறுவர். பரம் - கடன்; பொறுப்புமாம் அது, பகுதிப் பொருள் விகுதி, கண்டாய், முன்னிலை அசை.
இதனால், எத்துணைக் காலம் வருத்துவிக்கினும் பாதுகாப்பது பரமன் கடன் என விண்ணப்பித்தவாறாம். (9)
|