46. சிறுமை விண்ணப்பம்
திருவொற்றியூர்
அஃதாவது, அறிவாற்றல்களில் சிறுமையுடையோர் எல்லோரிலும் மிக்க
சிறுமையுடையனாதலால் மனத்தில் தெளிவின்றிச் செய்வகையறியாமை சொல்லித் திருவருள் ஞானம்
நல்க வேண்டுமெனச் சிவபெருமான்பால் முறையிடுவதாகும். தன் சிறுமைகூறி வேண்டிக் கோடலின் சிறுமை
விண்ணப்பம் என்னும் பெயர்த்தாயிற்று.
இம் முறையீட்டின்கண் உலக வாழ்வின் நிலையாமையையும், அதனை நிலையாக நம்பிச் சீலமன்றிச்
சிந்தை திகைப்புறுவதையும், பிறவாகிய குழியில் வீழ்ந்து மேலேறவும் கீழ் இறங்கவும் மாட்டாமல்
நடுநின்று வருந்துவதையும், இவ் வாழ்க்கையில் பிறந்து வளர்பவன் பின்பு முதுமையுற்றுத் தண்டூன்றி
இறந்தபின் மீளப் பிறப்புக்குள்ளாவதையும் எடுத்துரைக்கின்றார்; மேலும் தம்மைச் சூழ இருப்பவர்
நல்லவரும் தீயவருமாதலைக் கண்டு இவரிடையே வாழவேண்டுமென்பது திருவுளப் பாங்கு என்றும், இச்
சூழலின் நீங்கித் திருவொற்றியூரை அடுத்து நிற்றற்கோ, தில்லைப்புலியூரை மேவுதற்கோ வழி
தெரியவில்லையென்றும் உரைத்து, இத் தொல்லைகள் நீங்குதற்குத் துணையாவது சிவபரம்பொருளின்
திருவருள் நோக்கம் எனவும், திருவருள் வாழ்வு பெறற்குரிய நெறியை சிறுமையால் அறியவியலவில்லை
எனவும், அறிந்தவர் சிவன் உலகில் மலரும் மணமும்போல் இருப்பதை உணர்த்தினும் அதனை யறியும்
நெறியறியாமல், தடுக்கும் பந்தபாசத்தை நீக்கும் வகையின்றி மனம் அன்புகொண்டு சிவனைச்
சார்கின்றதெனவும் விண்ணப்பிக்கின்றார்.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய
விருத்தம் 1077. இன்று நின்றவர் நாளைநின் றிலரே
என்செய் வோம்இதற் கென்றுளம் பதைத்துச்
சென்று நின்றுசோர் கின்றனன் சிவனே
செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
நன்று நின்துணை நாடக மலர்த்தாள்
நண்ண என்றுநீ நயந்தருள் வாயோ
பொன்றல் இன்றிய எழில்ஒற்றி அரசே
போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
உரை: அழிவில்லாத எழில் படைத்த ஒற்றியூர் அருளரசே, போற்றுகின்றவர் யாராயினும் அவர்க்குப் பொதுவாய் நிற்கும் பெருமானே, இன்றிருப்பவர் நாளை இலராய் மறைகின்றார்களே, இதற்கு நாம் என்ன செய்வது என நினைந்து மனம் திடுக்கிட்டு இங்கும் அங்கும் சென்றும் நின்றும் தளர்கின்றேன்; நான் சிறியவருட் சிறியனாதலால் செய்யக்கூடியது யாது உளது? நன்மைதரும் நின்னுடைய நாடகமாடும் இரண்டு மலர்போலும் திருவடிகளை அடைதற்கு நீ விரும்பி அருள் செய்வாயாக. எ.று.
என்றும் நின்று நிலவும் இயற்கையழகு பொருந்திய திருவொற்றியூர் என்றற்குப் “பொன்ற லின்றிய எழில் ஒற்றி” என வுரைக்கின்றார். போற்றுவோர் தூற்றுவோர் அனைவர்க்கும் பொதுவாகிய கடவுளாதலால், “போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே” என்று புகல்கின்றார். “பரவுவாரையும் உடையார் பழித் திகழ்வாரையும் உடையார்” (வாழ்கொளி) என்று ஞானசம்பந்தர் நவில்வது காண்க. “நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே” (அருள்விள) எனப் பிறாண்டும் கூறுவர். இன்றுள்ளவர் நாளை இறந்து மறைவது உலகத் தியற்கை; இதனை யெண்ணுமிடத்து எத்தகையவரும் மனம் துணுக்குறுவது இயல்பாதலின், வள்ளலார் உளம் பதைத்து வருந்துகின்றமை தோன்ற, “இன்று நின்றவர் நாளை நின்றிலரே என்செய்வோம் இதற்கென்று உளம் பதைத்துச் சென்றும் நின்றும் சோர்கின்றனன்” என்றும் தெரிவிக்கின்றார். “இன்றுளேன் நாளையில்லேன் என் செய்வான் தோன்றினேனே” (தனி. நேரிசை) என்று சொல்லி நாவுக்கரசரும் வருந்துகின்றார். இந்த நிலையில்லாத வாழ்க்கையினின்றும் நீங்கி, என்றும் பொன்றாத வாழ்க்கை பெறும் வழி தெரிந்திலது என்பார். “நான் செய்வது என்னை” என்றும், அதனை அறிந்தொழுகும் பெருமை என்பால் இல்லை என்பாராய், “நான் சிறியருட் சிறியேன்” என்றும் தெரிவிக்கின்றார். சிவனுடைய திருவடிக்கீழ் இருப்பது நிலைத்த இன்பவாழ்வு; அதனைப் பெறுவது நன்றாதலால் அதனை யடைந்துறைதற்கு வேண்டும் அருள்ஞானத்தை நல்குக என வேண்டலுற்று “நன்று நின்றுணை நாடக மலர்த்தாள் நண்ண என்று நீ நயந்தருள் வாயோ” என்று முறையிடுகின்றார். நன்மை, நன்றென வந்தது.
இதனால், நிலைத்த வாழ்வளிக்கும் திருவடி யடைதற்கு நீ விரும்பி அருள் புரிதல் வேண்டும் என முறையிட்டவாறாம். (1)
|