1084. ஞால வாழ்க்கையை நம்பிநின் றுழலும்
நாய்க ளுக்கெலாம் நாயர சானேன்
சீலம் ஒன்றிலேன் திகைக்கின்றேன் சிவனே
செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
ஏல நின்அருள் ஈதியேல் உய்வேன்
இல்லை யேல்எனக் கில்லைஉய் திறமே
போல என்றுரை யாஒற்றி அரசே
போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
உரை: தனக்குவமை யில்லாத திருவொற்றியூர் அருளரசே, போற்றுவோர் பலர்க்கும் நடுநின்றருளுபவனே, நிலவுலக வாழ்க்கையை நிலையானதென்று விரும்பியலையும் நாயனையார்க் கெல்லாம் தலைநாயாக விருக்கும் யான், நல்லொழுக்க மொன்று மில்லாதவனாய் மனம் மருளுகின்றேன்; சிவனே, யான் செய்யக் கூடியது என்னையோ? நானும் சிறியருட் சிறியவன்; நின்னுடைய திருவருளை எனக்குப் பொருந்துமளவில் நல்குவாயாயின் யான் கடைத்தேறுவேன்; இல்லையாயின் எனக்கு உய்தி இல்லையாம். எ,று.
சிவனுக்கு ஒப்புவமை யில்லாமையால், “போல வென்றுரையா ஒற்றியரசே” என்று புகல்கின்றார். “சதாசிவன் காண் தன்னொப்பார் இல்லாதான் காண்” (வீழி) என்று பெரியோர் உரைப்பது காண்க. ஞாலம் - நிலவுலகம். உலக வாழ்க்கையின் நிலையின்மை தோன்ற “ஞால வாழ்க்கையை நம்பி நின்றுழலும்” எனக் குறிக்கின்றார். “நிற்பார் நிற்க நில்லாவுலகில் நில்லோம் இனிநாம் செல்வோமே” (யாத்தி) என்று வாதவூரடிகள் கூறுவதறிக. நிலையாமையைப் பலபடியாய்க் கண்டறிந்தும், அதனை நம்புவோரை நாய் என இகழ்பவர், தாம் அவர்களில் மிக்கிருப்பது புலப்பட, “நாய்களுக்கெல்லாம் நாயர சானேன்” என்று எள்ளுகின்றார். சீலம் - நல்லொழுக்கம். ஒழுக்கமில்லார்க்கு உணர்வின்மை நோக்கி “சீலம் ஒன்றிலேன் திகைக்கின்றேன்” என்றும், உணர்வின் சிறுமையால் செய்வகை விளங்காமைபற்றி, “செய்வதென்னை நான் சிறியருட் சிறியோன்” என்றும் செப்புகின்றார். அருள் ஞானமாதலால், அருள் நல்குவாயாயின் உய்வழி யறிந்து செய்வன செய்து கடைத் தேறுவேனென்பார். “நின்னருள் ஈதியேல் உய்வேன்” என்றும், இக்கருத்தை வலியுறுத்தற்கு “இல்லையேல் எனக்கு இல்லை உய்திறமே” என்றும் இயம்புகின்றார்.
இதன்கண், வாழ்க்கையின் நிலையாமையை நிலையென நம்பிச் சீலமின்றிச் திகைக்கின்றே னாதலால் திருவருள் வழங்குக என்று முறையிடுகின்றார். (8)
|