பக்கம் எண் :

1087.

     பரிந்தி லேன்அருட் பாங்குறும் பொருட்டாய்ப்
          பந்த பாசத்தைப் பறித்திடும் வழியைத்
     தெரிந்தி லேன்திகைப் புண்டனன் சிவனே
          செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
     விரிந்த நெஞ்சமும் குவிந்தில இன்னும்
          வெய்ய மாயையில் கையற வடைந்தே
     புரிந்து சார்கின்ற தொற்றிஅம் பரனே
          போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.

உரை:

     ஒற்றியூர்ப் பரம சிவனே, போற்றுவோர் எல்லார்க்கும் பொதுவாய் நிற்பவனே, உனது திருவருட் பாங்கினைப் பெறும்பொருட்டு ஆர்வமுற்றேனில்லை; பந்த பாசத்தை அறுத்தொழிக்கும் வழியையும் அறிந்தேனில்லை; அதனால், சிவனே, திகைக்கின்றேன்; சிறியருட் சிறியனாதலால் இதுபற்றிச் செய்யலாவது என்னென்று தெரியேன்; உலகியற் பொருள்களின் மேற்சென்று விரிந்த என் மனமும் இன்னும் சுருங்கிக் குவியவில்லை; மாயா காரியமாகிய வெய்ய வாழ்க்கையில் மனம் செயலறவு பட்டு உன்னை நினைந்து திருவடியைச் சார்கின்றது, காண். எ.று.

     அருட்பாங்கு - திருவருளைப் பெறற்குரிய தகுதி. அன்பு நிறைந்தாலன்றித் திருவருளைப் பெறற்கு வேண்டும் தகுதி யுண்டாகாதாகலின் “பரிந்திலேன் அருட் பாங்குறும் பொருட்டாய்” என்று கூறுகின்றார். பெற்றோர், பெண்டு பிள்ளைகள், உறவினர், பெற்ற பொருள், அது கொண்டு வாழும் வாழ்வு முதலியவற்றின்மேல் உண்டாகும் பற்றும் ஆசையும் பந்தபாசம் எனப்படும். பந்தபாசத்தினால் பல்வகைத் துன்பங்கள் தோன்றுதல் பற்றி, அவற்றை அறவே நீக்கினாலன்றிப் பிறவியறாது என்பதனால், “பந்தபாசத்தைப் பறித்திடும் வழியை” நாடுகின்றார். பாசி படர்ந்த நீரில் அது தொட்ட வழி நீங்குவதும் விட்டவழிப் பரவுவதும் போலப் பந்த பாசங்கள் அமைந்திருத்தலால், அவற்றினின்றும் நீங்கும் நெறி தெரியவில்லை என்பார். “வழியைத் தெரிந்திலேன் திகைப்புண்டனன் சிவனே” என்று தெரிவிக்கின்றார். அறிவாற்றிலில் மிகச் சிறியனாகலின், செயல்வகை காணாமையைச் “செய்வது என்னை நான் சிறியருட் சிறியேன்” என்று சொல்லுகின்றார். சட்டி சுட்டது கை விட்டதுபோலப் பொறி புலன் வாயிலாக உலகியற் பல்வகைப் பொருள்மேல் விரிந்த ஆசைகள், துன்பம் தோன்றிச் சுட்டதும் விட்டொழிந்து குவிந்து ஒடுங்காமை தோன்ற, “விரிந்த நெஞ்சமும் குவிந்திலது இன்னும்” என்றும், ஆசை தோற்றுவித்துப் பின்பு துன்பத்தாற் சுடும் பொருள்கட்கு முதற்காரணம் மாயையாதல் பற்றி, அதனை “வெய்ய மாயை” என்றும், அதன் தொடர்பு துணையாகாமை யறிந்து கையறவுபடுவது புலப்பட, “கையற வடைந்து” என்றும் கூறுகின்றார். கையற வெய்தி மாயையை விலக்குவதாயின், வேறு பற்றுக்கோடு வேண்டுதலால், உன் திருவருளை விரும்பி நோக்குகிறது என் உள்ளம் என்பார், “புரிந்து சார்கின்றது” என்று இசைக்கின்றார்.

     இதனால், திருவருட் பாங்குறும் பொருட்டுப் பந்த பாசத்தை அறுத்துக்கொள்ளும் வழியறியாது திகைத்துக் கையற வடைந்து இறைவன்பால் நெஞ்சம் அன்புற்றுச் சார்கிறுது என விண்ணப்பித்தவாறாம்.

     (11)