1095. கடம்பொழி ஓங்கல் உரிஉடை உடுக்கும்
கடவுளே கடவுளர் கோவே
மடம்பொழி மனத்தேன் மலஞ்செறிந் தூறும்
வாயில்ஓர் ஒன்பதில் வரும்இவ்
உடம்பொழிந் திடுமேல் மீண்டுமீண் டெந்த
உடம்புகொண் டுழல்வனோ என்று
நடம்பொழி பதத்தாய் நடுங்குகின் றனன்காண்
நான்செயும் வகைஎது நவிலே.
உரை: மதம் பொழிகின்ற யானையின் தோலை உடையாக உடுக்கும் கடவுளாகிய சிவபெருமானே, தேவர்கள் தலைவனே, கூத்தாடுகின்ற திருவடியை யுடையவனே, மடமை நிறைந்த மனமுடைய யான் மலம் நிறைந்தொழுகும் ஒன்பது துவாரங்களோடு கூடிவரும் இவ்வுடம்பு இறந்து மறையுமாயின் மீண்டும் எவ்வகை யுடம்பு பெற்று வருந்துவேனோ என்று நினைந்து மனம் நடுங்கின்றேனாதலால், அது தவிர்த்தற் பொருட்டு நான் எத்தகைய செயலை மேற்கொள்ள வேண்டுமெனத் தெரிவித்தருள் வாயாக. எ.று.
கடம் -மதநீர், உயர்ந்த மலை போன்ற உடம்புடைமை பற்றி, யானை, “கடம் பொழி ஓங்கல்" எனப்படுகிறது. இங்கே யானை யென்பது யானையுருவிற் போந்த கயாசுரனை என அறிக. உரி - தோல், மனமொழிகளின் எல்லையைக் கடந்து அப்பாலுள்ளமையால், கடவுள் என்று குறிக்கின்றார். கடவுட் சொல்லின் கருத்தை நோக்காமல் பிற்காலத்தார் தேவர்களையும் மக்களில் முனிவர்களையும் கடவுள் எனவும், கடவுளர் எனவும் வழங்கலுற்றனர். அவ்வழக்கைப் பின்பற்றி வள்ளலாரும் தேவர்களைக் “கடவுளர்” என்று இசைக்கின்றார். இது பௌராணிக சமயம் புணர்த்த பல இழுக்குகளில் ஒன்று. மடம் - அறியாமை. ஒன்பது வாயில், கண்ணிரண்டு, காது இரண்டு, மூக்குத்துளை இரண்டு, வாய்ஒன்று, சிறுநீர் வாய், எருவாய் என்பன. “மலஞ் சோரும் ஒன்பது வாயிற் குடிலை” (சிவபு) என்று மணிவாசகரும் கூறுவது காண்க. இறந்த வுயிர் மீளப் பிறக்குமிடத்து அதன்பாற் கிடக்கும் வினைக்கேற்ப வேறுவேறு உடம்பெடுத்துப் பிறக்குமென நூலோர் கூறுதலால், “இவ்வுடம் பொழிந்திடுமேல் மீண்டு மீண்டு எந்த உடம்பு கொண்டுழல்வானோ என்று நடுங்குகின்றனன் காண்” என்றும், இதனை விலக்கற்கு முத்திப் பேறன்றி வேறு செயல்வகை யில்லாமையால், “நான் செய்யும் வகை எது நவிலே” என்றும் இயம்புகின்றார்.
இதனால், மாறிப் பிறக்குமிடத்து உடம்பு வேறுபடுமாறு கூறித் தவிர்த்தற்குரிய செய்வகை யறியாமையால் ஆற்றாமை தோற்றுவித்தவாறு. (5)
|