1096. வகைஎது தெரிந்தேன் ஏழையேன் உய்வான்
வள்ளலே வலிந்தெனை ஆளும்
தகைஅது இன்றேல் என்செய்வேன் உலகர்
சழக்குடைத் தமியன் நீ நின்ற
திகைஎது என்றால் சொலஅறி யாது
திகைத்திடும் சிறியனேன் தன்னைப்
பகைஅது கருதா தாள்வதுன் பரங்காண்
பவளமா நிறத்தகற் பகமே.
உரை: பவளத்தின் நிறத்தை யுடைய கற்பக மரத்தைப் போல்பவனே, நீ அடியார்களை ஆட்கொள்ளும் வகை எதுவென்று தெரிந்துள்ளேனாயினும் எளியனாகிய யான் உய்யும்பொருட்டு வள்ளலாகிய நீ வலிய வந்து என்னை ஆட்கொள்ளற்குரிய தகுதி என்பால் இல்லையாயின் யான் செய்யக் கூடியது யாது? உலக மக்களில் சழக்குடைய நிலையில் யான் தனியன்; பரம் பொருளாகிய நீ நின்றருளுகின்ற இடம் யாது என வினவினால் சொல்லத் தெரியாமல் மருளும் சிறுமையுடைய என்னைப் பகையென்று எண்ணாமல் ஆட்கொள்வது நினக்குப் பொறுப்பாகும். எ.று.
கற்பக மரம் இந்திரனுலகில் உளதாகிய தொரு மரம் என்றும், அதனையடைபவர் எதனை வேண்டினும் அதனைத் தவறாது நல்கு மென்றும் புராணிகர் கூறுவர்; அதுபோல் சிவனும் வேண்டுவார் வேண்டுவது ஈபவனாதலாலும், சிவந்த திருமேனி யுடையனாதலாலும் அவனைப் “பவளமா நிறத்த கற்பகமே” என்று கூறுகின்றார். திருத்தொண்டர் வரலாறு கூறும் நூல்களால் சிவபெருமான் அடியார்களை யாட்கொள்ளும் வகைகள் இனிது தெரிதலால், “வகையெது தெரிந்தேன்” என்றும், அறிவது போலச் செயல் வல்லவனல்லேன் என்பார் “ஏழையேன்” என்றும் கூறுகின்றார். திருவருளாகிய செல்வத்தைப் பெருக வழங்குவது பற்றி இறைவனை “வள்ளலே” என்கின்றார். அடைந்தாரை ஆட் கொள்வதும், அடியவர்களைத் தாமே வலியச் சென்று ஆட்கொள்வதும் என ஆட்கொளல் இருவகை யாதலால், நீயே வலிய வந்து என்னை ஆட்கொள்ளும் தகுதி என்பால் இல்லை, தகுதி பெறற்கும் யான் செய்யத் தக்கது அறியேன் என்பார், “வலிந்தெனை யாளும் தகையது வின்றேல் என் செய்வேன்” எனவுரைக்கின்றார். சழக்கு - குற்றம். உலகில் குற்றம் செய்பவருள் மிக்கவன் என்பது புலப்படச் “சழக்குடைத் தமியன்” எனக் கூறுகின்றார். திகை - திசை; ஈண்டு இடத்தின் மேல் நின்றது. எங்கும் எல்லாமாய் இருக்கும் பெருமானாதலால் இடம்சுட்டிக் காட்டலாகாமை பற்றி, “நீ நின்ற திகையெது வென்றால் சொலவறியாது திகைத்திடும் சிறியனேன்” என்றும், குற்ற மிக்காரைப் பகையென வெறுக்கும் உலகியல் பற்றி, “சிறியனேன் தன்னைப் பகையது கருதாது” என்றும், சிறுமை நோக்கிப் பொறுப்பது கடன் என முறையிடுவாராய், “ஆள்வதுன் பரங்காண்” என்றும் விண்ணப்பம் செய்கின்றார்.
இதனால், சிவனது பரமாந் தன்மை யுரைக்கும் திறமும் அவனால் வலிந்து ஆட்கொள்ளப்படும் தகுதியும் இல்லாமை தெரிவித்துக் கொண்டவாறாம். (9)
|