48. சந்நிதி முறையீடு
திருவொற்றியூர்
முன்னைய பத்தின்கண் யான் உற்ற அல்லலுக் கெல்லையில்லை; பல்வகை
அல்லல்கட்கும் விருந்தினனாகி அவை தந்த துன்பங்களை நுகர்ந்தேன்; ஆற்றாமை தோன்றியபோது,
பெருமானே, உன் திருக்கோயிலை விரைந்து அடுத்தேன்; அங்கே எழுந்தருளும் உனது திருவுள்ளம்
அறியேனாய் நின்றேன் என்று முறையிட்ட வள்ளற்பெருமான் சந்நிதி முறையீடு என்ற இப்பத்தின்கண்
பல கருத்துக்களைக் கலிவிருத்தத்துள் வைத்துப் பாடுகின்றார். பாட்டுக்களும் அந்தாதித்
தொடையில் அழகுற அமைந்துள்ளன.
இதன்கண், ஒற்றியிலும் தில்லையிலும் எழுந்தருளிய ஒரு பரம்பொருளே, எளியேன் மனம் உன்னை
எண்ணிய மாத்திரையே உன்பாலதாய்விட்டது; என்னைப் பற்றியிருக்கும் மயக்கத்தை நீதான்
போக்கியருளல் வேண்டும். மலத்தால் உளதாய அம்மயக்கத்தை நீக்கி அடியேனை அருளொளியில்
வாழ்விப்பது உனக்கு மாண்பு தருவதாம்; உடலூழாய் நின்று வருத்தும் மாயா மயக்கம், சென்ற எழுவகை
பிறப்புக்களால் சேர்ந்தது; மல மறைப்பு, சிந்தை வழியாகத் தெளிவில்லாமை செய்கின்றது.
இவ்வாற்றால் உலகில் வருந்த வைத்தது அருளுருவாகிய உனக்கு அழகன்றே; யான் நின்னை ஏத்தாக்
கொடுநெறியிற் சென்றது உண்மை; எனக்கு உய்வுண்டோ என எண்ணி ஏங்குவேன்; உனது இனிய திருவருள்
எனக்கு எய்தும் நாள் என்றோ என நினைந்து இனைவேன். வஞ்சரோடு கலந்து ஒழுகினால் உனது அருள்
கிடைக்காதென அஞ்சி அவர்களை விட்டு விலகித் தூரத்தே சென்றேன்; இந்நிலையில் என்னை
யாள்வது நீதியாகும்; என்பாற் போந்து கலவாதது உனக்கு நீதியாகாது. புண்ணியப் பொருளே,
ஒற்றிமேவி யுண்மை தெளியவும், அன்பை நின்பால் ஊன்றவும், நின் புகழைச் சாற்றவும் போற்றவும்
வைத்தனை; ஆதலால் பொய்ச்சிந்தை விட்டு உன்னைப் போற்ற அருள் வைத்த நீ வாழ்க வாழ்க என
வாழ்த்தி மகிழ்கின்றார்.
கலி விருத்தம் 1098. ஒற்றி மேவிய உத்தம னேமணித்
தெற்றி மேவிய தில்லைஅப் பாவிழி
நெற்றி மேவிய நின்மல னேஉனைப்
பற்றி மேவிய நெஞ்சம்உன் பாலதே.
உரை: திருவொற்றியூர்க்கண் எழுந்தருளும் உத்தமனே, மணிகள் பதித்த திண்ணைகள் பொருந்திய தில்லைப் பதிக்குத் தலைவனே, நெற்றியில் கண்படைத்த நின்மலனே, உன்னைத் தெளிந்து உன்னை யடைந்த எனது நெஞ்சம் உன்னிடத்தே ஒன்றிவிட்டது, காண். எ.று.
‘உத்தமன்’ என்ற வடசொல், இருளைத் தாவிக் கடந்தவன் என்னும் பொருளது. “உத்தமன் அத்தன் உடையான்” (சதக. 3) எனத் திருவாசகம் உரைப்பது காண்க. செல்வர் மனைக்கண் திண்ணைகளில் பன்னிற மணிகளைக் கோலமிட்டதுபோலப் பதிப்பது பண்டையோர் மரபாதலால், “மணித் தெற்றி மேவிய தில்லை” என உரைக்கின்றார். தெற்றி - மேடையுமாம். அப்பன் - தலைவன், நின்மலன் - மலமில்லாதவன். ஆன்மாக்கள் மலமுடையவை யாதலின், சிவன் நின்மலன் எனப்படுகின்றான், பற்றுதலாவது - சிவனே பரம்பொருளெனத் தெளிதல்; தெளிந்தவழிப் பற்றுத் தோற்றி நீங்காது நிலையுமென அறிக. ஆன்மாவாகிய சேதனத்துக்குப் பற்றாவன அசித்தாய பிரபஞ்சமும் சைதன்யமாகிய சிவமுமல்லது இல்லை; பிரபஞ்சமும் அசேதனமாய்த் துன்பமயமானது எனத் தெளிந்து நீங்கியவழிப் பற்றாவது ஆன்மாவுக்குச் சிவமே என்று நெஞ்சு தேர்ந்து அதன் வயமாதல் விளங்க, “உனைப் பற்றி மேவிய நெஞ்சம் உன் பாலதே” என உரைக்கின்றார்.
இதன்கண், சிவனை மேவிய நெஞ்சம் அவன் பாலதாமென்றுரைக்கப்பட்டது. (1)
|