1099. பாலின் நீற்றுப் பரஞ்சுட ரேமலர்க்
காலின் ஈற்றுக் கதிபெற ஏழையேன்
மாலின் ஈற்று மயக்கறல் என்றுகல்
ஆலின் ஈற்றுப் பொருள்அருள் ஆதியே.
உரை: பால் போன்ற வெண்ணிற முடைய திருநீறணிந்த பரஞ்சுடரே, தாமரை மலர் போன்ற நின் திருவடி நீழலிற் பெறும் சிவகதி பெறுதற்கு உலகநடையாகிய மாலுக்கு ஈறு செய்வதாகிய மலமயக்கம் நீங்குக என்று, ஆதியாகிய முதல்வனே, நீ கல்லாலின் கீழிருந்து நல்கிய ஞானத்தை அருளுக. எ.று.
பரஞ்சுடரே, ஆதியே, ஏழையேன் கதி பெற, மயக்கறல் என்று பொருள் அருள என இயைக்க, திருநீற்றில் பால்போல் வெண்ணிறத்தது சிறப்புடைய தென்பவாகலின் “பாலின் நீற்றுப் பரஞ்சுடரே” என்று கூறுகின்றார். ஞாயிறு திங்கள் நெருப்பு என்ற சுடர் மூன்றனுள் சிவம் மேலாய சுடராதல் பற்றிப் “பரஞ்சுடரே” என்று இயம்புகின்றார். திருவடி நீழலின் இருப்பு, “மலர்க்காலின் ஈற்றுக் கதி” என்று மொழிகின்றார். “அண்ணலார் சேவடிக் கீழ் ஆண்டவரசு அமர்ந்திருந்தார்” (பெரிய-பு) என்று சேக்கிழார் தெரிவிப்பது காண்க. மால் - உடலூழாய் மாயையினின்றும் உளதாவது; மயக்கு - அனாதி தொடர்பாகிய மலத்தினது மயக்கம், மலத் தொடர்பு நீங்கிய வழி மாயை கன்மங்களின் தொடர்பும் மயக்கமும் இற்றொழிதலின், “மாலின் ஈற்று மயக்கறல்” எனக் கல்லாலீன் கீழ்ச் சீகண்ட முதல்வர் அறிவுறுத்தருளினார் என்பது வரலாறு, “நூலடைந்த கொள்கையாலே நுன்னடி கூடுதற்கு, மால் அடைந்த நால்வர் கேட்க நல்கிய நல்லறத்தை ஆலடைந்த நீழல் மேவி அருமறை சொன்ன தென்னே” (சேய்ஞ்) என ஞானசம்பந்தர் கூறுவது காண்க. அருமறை - சிவதருமம். “ஈற்றுப் பொருள்” என்றதற்கு “வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தச் செம்பொருள்” என்று கொள்க.
இதன்கண், ஏழையேன் கதி பெறற்கு வேதாந்தப் பொருளை அருள்க என வேண்டியவாறு. (2)
|