பக்கம் எண் :

1101.

     வாதம் ஓதிய வஞ்சரைக் காணில்ஓர்
     காதம் ஓடும் கடியனை ஆள்வது
     நீத மோஅன்றி நேரும்அ நீதமோ
     ஓதம் ஓதொலி ஒற்றித்த லத்தனே.

உரை:

     கடலின் அலை முழக்கமிக்க திருவொற்றித் தலத்தில் வீற்றிருக்கும் பெருமானே, வீண் வாதம் பேசுகின்ற வஞ்சகர்களைக் கண்டால் ஒரு காதத்துக்கு அப்பால் ஓடும் அச்சமுடையனாகிய என்னை ஆட்கொள்வது நீதியோ அல்லது அநீதியோ, யாது நேரும்? எ.று.

     இரவு பகல் ஓயாது முழக்கமிடும் அலைமிக்க கடற்கரையதாயினும் அங்குறையும் ஒற்றிப் பெருமானுக்கு அவ்வொலி ஓதும் ஒலியாகவே விளங்குகிறது என்றற்கு, “ஓதம் ஓதொலி ஒற்றித் தலத்தானே” என உரைக்கின்றார். வீண்வாதம் புரிவதால் ஒருவர்க்கும் பயனில்லாமையோடு மனவமைதியும் சீர்குலைந்து புண்ணுறுதலின், “வாதம் ஓதிய வஞ்சரைக் காணின் ஓர் காதம் ஓடும் கடியன்” எனத் தம்மைத் தெரிவிக்கின்றார். கடியன் - அச்சமுடையவன். கடி - அச்சம். வீண்செயலுக்கு அஞ்சி நீங்குபவன் நீதியாளனாதலின், அவன் செயலை நீதமெனவும், அஞ்சாது நேர்நின்று வீண்வாதம் புரிந்து பூசல் விளைவிப்பது அநீதமெனவும் கொள்ளப்படும். நேரும் என்றவிடத்து ‘யாது’ என்னும் வினாச்சொல் வருவிக்கப்பட்டது.

     இதனால், வீண்வாதம் புரியும் வஞ்சகரைக் காணினும் நில்லாமல் விலகிச் செல்வது நீதியாம் என்பது தெரிவித்தவாறு.

     (4)