49. இரங்கல் விண்ணப்பம்
திருவொற்றியூர்
அஃதாவது சிவத்தின் திருவருளைப் பெறற்குரிய நலங்கள் இல்லாத குறைபாட்டை நினைந்து, மனம்
இரங்கி முறையிடுவதாம்.
இதன்கண் சிவத்தின் திருவருள் நிலையமாகிய திருவடிகளை அறிந்து அவற்றைச் சிவபரம்பொருள்
நல்காமையும், அதற்குத் தான் அடியனாவது இன்றியமையாதென வுணர்ந்து அதன் அருமை நினைதலும், அருள்
பெற்ற பெரியோர் பெறாத தன்னைக் கண்டு இகழ்வரென நினைவதும் குறிக்கப்படுகின்றன. ஒருபால்
மலவிருள் மறைப்பதனால் தடுமாற்ற மெய்தி அருளொளியை நினைக்கின்றார். மலங் காரணமாகத்
தோன்றிய வாழ்வில் நிற்பதும் மறைவதும், எண்ணிய எண்ணம் நிறைவுறாதொழிவதும், வள்ளற்
பெருமானை வருத்துகின்றன; யாதும் சிவன் செயலாவதென்பது தெரியாமல் வருந்துவதுடன், தெரியாமைக்கு
ஏதுவாவது பிறவி மயக்க மென்றுணர்ந்து, பிறவிக் கடலைக் கடத்தற்கு அருளின் துணை நாடி
யிரங்குகின்றார்; பிறப்பிடைத் தோன்றும் புலவேட்கை தணிதற்குத் திருவருளாகிய நீரை
வேண்டுகிறார். வேண்டி, திருவருளின் பெருமையை நினைப்பவர், அது சிறிது கிடைக்குமாயின் தேவ
தேவர்களிற் பெரியவனாவ னென்றும், சிவபோகம் விளைத்துக் கொள்வே னென்றும் சொல்லி
இரங்குகின்றார்.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1109. பற்று நோக்கிய பாவியேன் தனக்குப்
பரிந்து நீஅருட் பதம்அளித் திலையே
மற்று நோக்கிய வல்வினை அதனால்
வஞ்ச மாயையின் வாழ்க்கையின் மனத்தின்
அற்று நோக்கிய நோய்களின் மூப்பின்
அலைதந் திவ்வுல கம்படும் பாட்டை
உற்று நோக்கினால் உருகுதென் உள்ளம்
ஒற்றி மேவிய உலகுடை யோனே.
உரை: திருவொற்றியூரில் எழுந்தருளும் உலகெலாமுடைய பெருமானே, திருவருளை பற்றாகக் கருதிய எனக்கு ஆதரவோடு அவ்வருட் பதத்தை நல்குகின்றாயில்லை; வேறாயவற்றைக் கருதுகிறவல்வினையாலும், பிரபஞ்சத்தின் மூல காரணமாகிய மாயையாலும், பிரபஞ்ச வாழ்க்கையாலும், மனத்தாலும், திருவருள் நினைவற்று உடலையே நோக்குகிற நோய்களாலும், முதுமையாலும் அலைப்புண்டு இவ்வுலகவர் படும் துன்பத்தை உற்று நோக்கும்போது என் உள்ளம் உருகுகின்றது, காண். எ.று.
உலகனைத்தையும் படைத்து நிறுத்தி ஒடுக்குபவனாதலால் சிவனை, “உலகுடையோனே” என்று சிறப்பிக்கின்றார். உலகியற்குரிய பொருள் மேலும், திருவடிப் பேற்றுக்குரிய அருள் மேலும் நிற்கும் பற்று இரண்டினுள் உலகு படும்பாட்டைக் கண்டு, திருவருளே பற்றாவதுணர்ந்து அதனை உறுதியாகக் கொண்டேன் என்பார், “பற்று நோக்கிய பாவியேன்” என்றும், வேண்டுவதீயும் வள்ளலாகிய நீ அருட் பேற்றுக்குரிய திருவடி ஞானத்தை அன்புகூர்ந்து அருளாதிருக்கின்றாய் என்பது தோன்ற, “பரிந்து நீ அருட்பதம் அளித்திலையே” என்றும் உரைக்கின்றார். திருவருளே பற்றாவதென்பதை, “அருளிலார்க் கவ்வுலகமில்லை” (குறள்) என்று திருவள்ளுவரும், “பாரொடு விண்ணாய்ப் பரந்த வெம்பரனே பற்று நான் மற்றிலேன் கண்டாய்” (வாழாப்) என்று மணிவாசகனாரும் கூறுவது காண்க. அருட்பதம் - திருவருளை எய்துவிக்கும் சிவஞானம். திருவருளே பற்றாக நோக்கி வாழினும் சிவஞானம் பெறாதவாறு தான் செய்த பாவம் தடை செய்வதாக நினைக்கின்றாராகலின், தன்னைப் “பாவியேன்” என்று குறிக்கின்றார். பாவம் தடுப்பினும் நீ என்பாற் பரிவுகொள்வாயாயின் திருவருளை யளித்திருப்பாய்; அது கொண்டிலை என்றற்குப் “பரிந்து நீ அளித்திலை” என்று கூறுகின்றார். பற்று - ஈண்டு உலகியலாய பொருட்பற்றின் மேற்று. பொருட் பற்று நோக்கியதற்குக் காரணம் வல்வினையாதல் பற்றி “வல்வினை யதனால்” என்று இசைக்கின்றார். பயனை நுகர்வித்தன்றிக் கழியாத வன்மையுடைமை பற்றி “வல்வினை” என்று தெரிவிக்கின்றார். வஞ்சம் - பிரபஞ்சம்; அது மயக்கும் தன்மையுடைய மாயையின் காரியமாவது புலப்பட “வஞ்ச மாயை” எனக் கூறுகிறார். “மாயையின் உள்ள வஞ்சம் வருவது போவதாகும்” (35) எனச் சிவஞான சித்தியார் உரைப்பது காண்க. வாழ்க்கை - உடலொடு கூடி உலகில் உண்டிக்கும் உடைக்கும் உறையுட்கும் உழைத்து வருந்துவது. மனம் - யான் எனதெனவெழும் அறிவு செயல்கட்குக் கருவியாவது. வாழ்வு தந்த சிவத்தையும், வாழ்வுக்கிடமாகிய உலகத்தையும், துணை புரியும் உறவுகளையும் மறந்து தம்மையும் நோக்கச் செய்வதனால் நோய்களை “அற்று நோக்கிய நோய்கள்” என்றும், அறிவும் நினைவும் தெளிவுற அமையினும் உடல் வலியிழந்து செயல்புரிய மாட்டாமையின் “மூப்பின்” என்றும், இவற்றால் உலகவர் படும் துன்பம் எண்ணத்தின் எல்லைக்கடங்காது பெருகுதலை யுணர்ந்து, “இவ்வுலகம் அலைதந்து படும்பாட்டை யுற்று நோக்கினால்” என்றும், இப்பெற்றித்தாய நோக்குடையார்க்கு உள்ளம் அருள் நிறைந்து நீராய் உருகுமாதலால், “உருகுதென் உள்ளம்” என்றும் உரைத்தருளுகின்றார், உருகுகிறதென்பது, உலக வழக்குப்பற்றி “உருகுது” என வந்தது.
இதனால், உலகம் படும்பாட்டை நோக்கி அருட்பற்றுடையனாகிய தனக்கு அருட்பதம் நல்காமைக்குத் தான் இரங்குதலைத் தெரிவித்த வாறாம். (1)
|