1113. வெருட்சி யேதரும் மலஇரா இன்னும்
விடியக் கண்டிலேன் வினையினேன் உள்ளம்
மருட்சி மேவிய தென்செய்கேன் உன்பால்
வருவ தற்கொரு வழியும்இங் கறியேன்
தெருட்சி யேதரும் நின்அருள் ஒளிதான்
சேரில் உய்குவேன் சேர்ந்தில தானால்
உருட்சி ஆழிஒத் துழல்வது மெய்காண்
ஒற்றி மேவிய உலகுடை யோனே.
உரை: திருவொற்றியூரில் மேவும் உலகுடைய பெருமானே, வெருட்சியை யுண்டுபண்ணும் மலவிருள் இன்னும் என்னை விட்டு நீங்க வில்லையாதலால் வினையையுடையனாகிய எனது உள்ளம் மருண்டுள்ளது; அதனால் செய்வது அறிய மாட்டாதவனாயுள்ளேன்; உன்னிடம் அடைவதற்கு ஒரு வழியும் இவ்விடத்தில் எனக்குத் தெரியவில்லை; தெருட்சியை நல்கும் நின்னுடைய அருளொளி எனக்கு எய்துமாயின் உய்தி பெறுவேன்; எய்தாதாயின் உருண்டோடுதலை யுடைய சக்கரம் போன்ற பிறவிச் சூழலிற் பட்டு நான் சுழல்வது உண்மை. எ.று.
வெருட்சி - மறப்பும், மறைப்பும் பயக்கும் கலக்க நிலை; ஐயம் திரிபுகளாகிய உணர்வுகட்கும் இதுவே காரணம். உயிரின்கட் கிடந்து இவ் வெருட்சியை நல்குவது மலம். மாயா மலம், கன்மமலம் என்ற இரண்டினின்றும் வேறுபடுத்தற்கு ஆணவமலம் என்றும், மூல மலம் என்றும், இயற்கை மலம் என்றும், சகசமலம் என்றும் பலர் பல பெயர்களாற் கூறுவர். எனினும் மலம் எனப் பொதுப்படக் குறிப்பது பெரும்பான்மை என அறிக. அறிவுருவாகிய ஆன்மாவுக்கு அறியாமையை விளைவித்தலின், அறியாமை நிலவும் இருள் நிலையை “மலவிரா” எனவும், அது நீங்காமையை “இன்னும் விடியக் கண்டிலேன்” எனவும் உரைக்கின்றார். இம்மலம் நீங்குதல் வேண்டி உடம்பொடு கூடி அறிவதும் செய்வதும் ஆகிய வினைகள் செய்யப்படுதலின், செய்கின்ற தன்னை “வினையினேன்” என்று கூறுகின்றார். மலமறைப்பால் உயிரின்கண் அறியாமையும் உள்ளத்தின்கண் ஒளியின்மையும் அமைதலால், “உள்ளம் மருட்சி மேவியது” என்றும், செய்வகை விளங்காமை பற்றி ”என் செய்கேன்” என்றும் இயம்புகின்றார். மெய்யுணர்வும் சிவவொளியும் சிவத்தின்பாற் கொள்ளக் கிடத்திலின், அதனை யடைவதற்குரிய நெறி புலப்படாமை தோன்ற, “உன்பால் வருவதற் கொரு வழியுமிங்கறியேன்” என்று விளம்புகின்றார். பிறவிடத்துப் பெறப்படும் பிற பொருள் போலாது, சிவத்தின் திருவருளாலன்றி எய்தப்படாமையால், “தெருட்சியே தரும் நின் அருள் ஒளிதான் சேரில் உய்குவேன்” என்றும் எய்தாவிடில், பிறவிப் பெருஞ் சூழலிற் கிடந்து தடுமாறுவதுதான் முடிவாம் என்றற்குச் “சேர்ந்திலதானால் உருட்சி யாழி யொத்து உழல்வது மெய்காண்” என்றும் உரைக்கின்றார். தெருட்சி - விளக்கம். உருட்சி - உருளுதல். பி்றந்திறந்து தடுமாறும் உயிர்கட்கு வீடு பேறும் சிவபோகமும் சிவன் நல்குகின்றான் என்பதை, “வெய்தாய வினைக் கடலில் தடுமாறும் உயிர்க்கு மிக விரங்கி அருள் புரிந்து வீடு பேறாக்கம் பெய்தானை” (அதிகை) என்று சுந்தரர் எடுத்தோதுகின்றார்.
இதனால், மலவிருளிற் கிடந்து உய்தி பெறற்கு வழி தெரியாமையால் திருவருள் ஒளிபெற நினைந்திரங்கியவாறாம். (5)
|