பக்கம் எண் :

1117.

     அளிய நெஞ்சம்ஓர் அறிவுரு வாகும்
          அன்பர் தம்புடை அணுகிய அருள்போல்
     எளிய நெஞ்சினேற் கெய்திடா தேனும்
          எள்ளில் பாதிமட் டீந்தருள் வாயேல்
     களிய மாமயல் காடற எறிந்தாங்
          கார வேரினைக் களைந்துமெய்ப் போத
     ஒளிய வித்தினால் போகமும் விளைப்பேன்
          ஒற்றி மேவிய உலகுடை யோனே.

உரை:

     திருவொற்றியூரில் மேவிய உலகெலா முடைய பெருமானே, அளிக்கத்தக்க நெஞ்சமாகிய கருவி அறிவுருவாயமைந்தது; மெய்யன்பர்பால் பெருக எய்திய திருவருள்போல எளிமைத் தன்மை பொருந்திய நெஞ்சமுடைய எனக்கு எய்தாதாயினும் எள்ளிற் பாதி யளவாகிலும் கிடைக்குமாயின் களிப்பினையுடைய பெரிய மயக்கமாகிய காட்டை முற்ற வழித்து, ஆங்காரத்தின் வேரைக் களைந்தெறிந்து, மெய்ஞ்ஞானமாகிய ஒளி பொருந்திய விதையைக் கொண்டு சிவபோகம் என்னும் கனியை விளைவித்துக் கொள்வேன். எ.று.

     உயிர் சேதன மென்றும், நெஞ்சமாகிய கருவி மாயா காரியமான அசேதன மென்றும் அறிவு நூல்கள் கூறும்; ஆயினும் அக்கருவி உயிராகிய சைதன்னியத்தின் முன்னர் நெருப்பின்முன் பட்ட இரும்பு அந்நெருப்பின் குணமும் செய்கையும் பெறுவதுபோலச் சித்தின் தன்மையும் செய்கையும் உடையதாதலால், “நெஞ்சம் ஓர் அறிவுருவாகும்” என்றும், எனினும் அதன் சிந்தாந்தன்மை இயற்கை யன்றாதல் பற்றி “அளிய” என்றும் கூறுகின்றார். மெய்ம்மையன்பால் திருவருள் நிரம்பப் பெற்றுடைய பெருமக்களை, ஈண்டு “அன்பர்” என்று குறிக்கின்றார். அவர்கள் அருள் பெறுவது இயல்பாதலை “மெய்யன்பரானார்க்கு அருளும் கண்டேன்” (வாய்மூர்) எனத் திருநாவுக்கரசர் கூறுவதா லறிக. வள்ளலாதலால் சிவனது திருவருள் நிறைவுடைய தென்பது தோன்ற “அன்பர் தம்புடை அணுகிய அருள் போல்” என உரைக்கின்றார். எளிமைத் தன்மை பற்றித் திருவருள் பெரிது எய்தா தொழியலாம் என்பார், “எளிய நெஞ்சினேற் கெய்திடாது” என்றும், மிகச் சிறிது எய்தினும் பெரும் பயன் விளைவித்துக் கொள்வேன் என்பாராய், “எள்ளிற் பாதிமட் டீந்தருள் வாயேல்” என்றும் கூறுகின்றார். திருவருள் பெற்றவிடத்துப் பயன் விளைத்துக் கொள்ளும் திறம் இது என்பார், “களிய மாமயற் காடுஅற எறிந்து ஆங்கார வேரினைக் களைந்து மெய்ப் போத ஒளிய வித்தினால் போகமும் விளைப்பேன்” என்று விளம்புகிறார். களி - கள்ளுண்டார்க் கெய்தும் மயக்கம். களி மயக்குற்றார்க்கு எத்துணை காரண காரிய விளக்கம் கூறினும் பயன்படாது; “களித்தானைக் காரணம் காட்டுதல் நீருட் குளித்தானைத் தீத்துரீஇ யற்று” (குறள்) என்பர் திருவள்ளுவர். மண்ணியல் வாழ்வு தரும் மயக்கம் கள் மயக்கினும் பரந்து விரிந்த தென்றற்குக் “களிய மாமயற் காடு” என்று கூறுகிறார். “மண்டலஞ்சேர் மயக்கறுக்கும் மருந்து கண்டாய்” (கோடிகா) என நாவுக்கரசர் உரைப்பது காண்க. ஆங்காரம் - அகங்காரம்; இதனை அகந்தை யெனவும் வழங்குவர்; காமம், வெகுளி முதலிய குற்றங்கட்கு மூல காரணமாதலின் அதனை வேரறக் கெடுப்பதை “ஆங்கார வேரினைக் களைந்து” என்று கூறுகின்றார். குமரகுருபரரும், “அகந்தைக் கிழங்கை அகழ்ந் தெடுக்கும் தொழும்பர்” (மீனா.பிள்.) என்பது காண்க. குற்ற வேர் அற்ற விடத்துக் குணமே நிறைதலும் ஞானம் எய்துதலும் உடனிகழ்ச்சி யாதலின் “மெய்ப்போத வித்தினால்” எனக் கூறுகின்றார். மெய்யுணர்வாகிய ஞான மெய்திய வழிச் சிவபரம்பொருள் உள்ளத்தைக் கோயிலாகக் கொள்வதால் சிவபோகம் தானே யுளதாகலின் “போகமும் விளைப்பேன்” என மொழிகின்றார். “அகனமர்ந்த அன்பினராய் அறுபகை செற் றைம்புலனும் அடக்கி ஞானம் புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத் துள்ளுறையும் புராணர்” (வீழிமிழலை) என ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. ஞானமுதிர்ச்சியில் சிவன் தன்னைக் காணச் செய்து இன்புறுவிப்பதைச் சிவபோகம் என்பர்; “புகுந்தென் சிந்தை தன்னுருவைத் தந்தவனை” (ஆரூர்) என நாவுக்கரசரும், “பரம்பொருள் சேர்வார் தாமே தானகச் செயுமவன்” (கழுமலம்) என ஞானசம்பந்தரும் பிறரும் கூறுவர்.

     இதனால், திருவருள் சிறிது கிடைக்குமாயின் மயக்ககன்று குற்ற மறுத்து ஞானம் பெற்றுச் சிவபோகம் எய்துவித்துக் கொள்ளலாம் என்பதாம்.

     (9)