50. நெஞ்சொடு நேர்தல்
கோயில்
நெஞ்சொடு நேர்தல் என்பது நெஞ்சமெனத் தமிழ் கூறும் மனத்தை
உணர்வுடைய பொருள்போல நேர் நிறுத்தி உரையாடுதல்.
உயிர், இச்சை, அறிவு, செயல் என்ற மூன்று ஆற்றல்களையுடையது. உடலொடு கூடி வாழ்க்கை நடத்தும்
உயிர்க்கு மூவகை யாற்றலும் செயல்படுகின்றன. ஆற்றலுக்கு இடம் உயிராயினும் உருப்படியான வாழ்வுறு
செயற்கு உடம்பு கருவியாகும். உடம்புக்கும் உயிர்க்கும் இடையே நெஞ்சென்றும் மனமென்றும்
வழங்கும் அகக்கருவி, இச்சையறிவு முதலியன தொழிற்படற்கும் அறிதற்கும் செய்தற்குமென அமைந்த
புறக்கருவிகள் தொழில் செய்தற்கும் தலையாய கருவியாய் நடத்துகிறது. இக்கருவிகளோடு மனம்
ஒன்றாவிடின் இச்சை முதலிய மூன்றும் பயன் காணா; பொறி புலன்கள் தொழிற்படா. மனமாகிய அகக்
கருவி இருவழியும் நின்று இயங்குகிறது; உயிரறிவு வளமும் வன்மையும் எய்தும்போது உயிர் வழியிலும்,
உடம்பு வளமையும் வன்மையு முடையதாகும்போது பொறி புலன் வழியும் நிற்கிறது. மனம் பொறி வழிச்
செல்வது பெரும்பான்மையாதலின், அதற்கும், உயிரறிவு சிறப்புறுங்கால் நெறிப்பட நிறுத்தும் ஆன்ம
வுணர்வுக்கும் பிணக்கமுண்டாகிறது. மனம் இணங்காமல் வேறுபடின் துன்பமே விளைதலால் அதனை
யுணர்வுடைய ஆன்மவுணர்வு, தன்னைப்போல் உணர்வுடையது போலவும் உறுப்புடையது போலவும் எண்ணி
அறிவுரை கூறும். அதுதான் நெஞ்சோடு நேர்தல் என்ற பெயரால் இப் பத்தின்கண் வள்ளற்
பெருமானால் வகுத்துரைக்கப்படுகிறது.
இப்பாட்டுக்கள் பத்தும் தில்லைப் பெருங்கோயிலில் இருந்து பாடப் பெற்றனவாதலின், கோயில்
என இடம் குறிக்கப்பட்டுளது.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய
விருத்தம் 1119. அணிகொள் கோவணக் கந்தையே நமக்கிங்
கடுத்த ஆடைஎன் றறிமட நெஞ்சே
கணிகொள் மாமணிக் கலன்கள்நம் கடவுள்
கண்ணுன் மாமணிக் கண்டிகை கண்டாய்
பிணிகொள் வன்பவம் நீக்கும்வெண் ணீறே
பெருமைச் சாந்தமாம் பிறங்கொளி மன்றில்
திணிகொள் சங்கர சிவசிவ என்று
சென்று வாழ்த்தலே செய்தொழி லாமே.
உரை: மடமை பொருந்திய நெஞ்சமே, அழகு கொண்ட கோவணமாகிய கந்தைத் துணியே, இவ்வுலகில் நமக்குப் பொருந்திய ஆடையாம் என்று அறிக; கணக்கிடப்படுகின்ற அழகிய மணிகளாகிய பூணாவது நம் கடவுளின் கண்ணிடத்துத் தோன்றிய அழகிய மணியாகிய அக்குமணி மாலையாம் என அறிக; உயிரைப் பிணித்து வரும் வலிய பிறப்பாகிய நோயை நீக்குவதாகிய வெண்ணீறே பெருமை தரும் சந்தனப் பூச்சாம்; உயர்கின்ற ஒளி பொருந்திய அம்பலத்தில் நின்று வன்மையுற்ற சங்கர சிவசிவ என்று சொல்லிக் கொண்டு சென்று வாழ்த்துவதே நமக்கு உரிய செய்தொழிலாம் என அறிக. எ.று.
நால்விரல் அகலமும் ஐவிர லகலமும் ஏற்றவாறமைந்து இடைக்கு அழகு செய்கின்றமை விளங்க, “அணிகொள் கோவணக் கந்தை” என்றும், அதனை ஆண்டானாகிய சிவன் உடுத்தலின், அவன் அடிபேணும் அடித்தொழிலர்க்கும் அதுவே உடை என்றற்கு “நமக்கு இங்கு அடுத்த ஆடை” என்றும் அறிவிக்கின்றார். “அரையார் கோவண வாடையன்” (அதிகை) என நாவரசர் நவில்வது காண்க. உருத்திரக் கண்மணி மாலையைக் கையிற் கொண்டு சிவமந்திரம் ஓதுவது அடியார் மரபாதலின் “கணி கொள் மாமணி” என்றும், உருத்திரர் அக்கம் என்பது “கடவுள் கண்ணுள் மாமணி” என மொழி பெயர்க்கப்பட்டுளது. அக்குமணி என்பது பழைய மரபு. உருத்திராக்க மாலையைக் கண்டிகை என்பதும் வழக்கம். பிறவிப் பிணியைப் போக்குவது திருநீறு என்று பெரியோர் மொழிவதால் “பிணிகொள் வன்பவம் நீக்கும் வெண்ணீறு” என மொழிகின்றார். சந்தனத்துக்கு மணத்தாற் பெருமைே்யயன்றிப் பவம் தீர்க்கும் பெருமை திருநீற்றுக்கே என வற்புறுத்தற்கே “வெண்ணீறே பெருமைச் சாந்தமாம்” என்று பேசுகின்றார். பொன்மன்றாதலின், ஒளி திகழ்வது இயல்பாதல் விளங்கப் “பிறங்கொளி மன்று” என்றும், மன்றாடும் பெருமானைச் சென்று மன்றிற் காண்பவர், “சங்கர சிவசிவ” என்றும் வாழ்த்த வேண்டும்; அதுதான் அன்பராய்ச் சென்று காண்போர் செயத்தக்க தென்றற்குச் “சென்று வாழ்த்தலே செய்தொழிலாமே” என்று தெரிவிக்கின்றார்.
இதன்கண், சிவனுக்கு அடிமை பூண்டவர் கோவணக் கந்தை யணிவதும், அக்குமணி மாலை பூண்பதும், வெண்ணீறு பூசிக்கொள்வதும், சங்கர சிவசிவ என்று வாழ்த்துவதும் வேண்டப்படுவன என நெஞ்சினுக்கு அறிவுறுத்தவாறு. (1)
|