பக்கம் எண் :

1122.

     அழிந்த வாழ்க்கையின் அவலமிங் கனைத்தும்
          ஐயம் இன்றிநீ அறிந்தனை நெஞ்சே
     கழிந்த எச்சிலை விழைந்திடு வார்போல்
          கலந்து மீட்டுநீ கலங்குகின் றனையே
     மொழிந்த முன்னையோர் பெறும்சிவ கதிக்கே
          முன்னு றாவகை என்னுறும் உன்னால்
     இழிந்த நாயினும் கடையனாய் நின்றேன்
          என்செய் வேன்உனை ஏன்அடுத் தேனே.

உரை:

     நெஞ்சே, திருவரு ணெறிவிட்டு அழிந்தவர் வாழ்வின்கண் உளவாய துன்பங்கள் அனைத்தையும் இவ்வுலகில் ஐயமின்றித் தெளிவுறக் கண்டறிந்துள்ளாய்; உண்ணக் கழிந்த எச்சிலை மறுபடியும் உண்ண விரும்புவாரைப் போல இவ்வவல வாழ்விற் கலந்து நீங்கியும் மறுபடியும் அதனை நினைந்து நிலை கலங்குகின்றாய்; வழிவழியாகச் சொல்லிய நம் முன்னோர் பெற்ற சிவகதியை நினையாவகை யொழுகுவதால் என்ன பயனாம்? உன்னால் இழிவான நாயினும் கடைப்பட் டொழிந்தேனாதலால் இனி யான் என் செய்வேன்; உன்னை யடுத்த நான் என்ன பயன் கண்டேன்? கூறுக. எ.று.

     திருவருணெறி பெரியதோர் ஆக்க நெறியாதலின், அதனைக் கைவிட்டவர் வாழ்விற் பெருந்துன்புறுதல் ஐயமற அனைவரும் கண்ட வுண்மையாதலால், “அழிந்த வாழ்க்கையின் அவலம் இங்கு அனைத்தும் ஐயம் இன்றி நீ அறிந்தனை” என நெஞ்சிற்குக் கூறுகின்றார். “அறத்தினூங் காக்கமுமில்லை” என்று திருவள்ளுவர் வற்புறுத்துவதறிக. உண்டு வாயினால் உமிழ்ந்த எச்சிலுணவை “கழிந்த எச்சில்” என்று குறிக்கின்றார். நுகர்ந்து கழித்த உலகியற் புலனுகர்ச்சியை மறுபடியும் நுகரக் கருதுவதன் இழிவு விளங்க, “கழிந்த எச்சிலை விழைந்திடுவார் போல் கலந்தும் மீட்டும் நீ கலங்குகின்றனை” என்று உரைக்கின்றார். முன்னோர் சிவகதி பெற்ற வரலாற்றைப் பலர் வழிவழியாக மொழிந்து வருதலால், “மொழிந்த முன்னையோர்” என்றும், அவர் சிவகதி பெற்ற நெறியும் முறையும் மொழியப்படுதலின், அவற்றை நினைந்து கைக் கொள்ளாவாறு வேறு நெறியில் நெஞ்சு செலுத்துவது பற்றி, “சிவ கதிக்கே முன்னுறாவகை என்னுறும்” என்றும் வருந்தி மொழிகின்றார். உண்டதை யுமிழ்ந்துண்ணும் நாயின் செயல் என்பாலும் நின்னால் உளதாதலின், யான் அதனினும் கடையனானேன் என்பார், “உன்னால் இழிந்த நாயினும் கடையனாய் நின்றேன்” என்றும், உனது தொடர்பு எனக்கு நலம் செய்ததில்லை என்று தெளிய உரைப்பாராய், “என் செய்வேன் உனை நான் ஏன் அடுத்தேனே” என்றும் உரைக்கின்றார்.

     இதனால், நுகர்ந்து கழித்த புலனுகர்ச்சிகளை மீள நுகர்விக்கும் மனத்தின் கொடுமை யுரைத்தவாறு.

     (4)