51. சிவானந்தப் பத்து
திருவொற்றியூர் திருத்தில்லை
சிவநினைவால் சிந்தைக்கண் ஊறும் இன்பத்தை வள்ளற் பெருமான் தேனோடு உவமித்துப் பாட்டுத்
தோறும், “தில்லை யோங்கிய சிவானந்தத் தேனே” என்று மகுடமிட்டுப் பாடுதலால், இப்பத்து
சிவானந்தப் பத்து எனப்படுகிறது. இதன்கண், இறைவன் திருவடி எய்துதற்குத் தமக்கு இச்சை
மிகவுண்டெனினும், நெஞ்சம் அதற்கேற்ற குறிப்பில் நில்லாமல் துடிக்கிறது; சிவன்பால் அன்புடைய
நன்மக்கள் அழிவிலின்ப முற்றிருக்க, பாவியாகிய யான் வையக வாழ்க்கையில் மயங்கிக்
கெடுகின்றேன்; இறைவன் திருவடியை மறந்து வஞ்சக வாழ்க்கையைப் பொருளாக மதித்து மகளிர்
இன்பத்துக்குருகிச் சுழல்கின்றேன்; உலகெல்லாம் உய்ய எடுத்த சேவடிக்கு அன்பு செய்யாமல்
ஒதிபோல் பெருத்துள்ளேன்; உடலெடுத்த நாள்முதல் இன்றுவரை, பவத்துக்கேதுவாகிய செயல்களையே
செய்துள்ளேன்; பெரும் பிழை எண்ணிறந்தன செய்திருத்தலால் அவற்றை எண்ணிப் பாராமல் தண்ணளி
புரிக; வஞ்சகர் சேர்க்கையை விடுத்து, சிவத்தொண்டர்க்கு ஏவல் செய்துய்ய விரும்புகின்றேன்;
புவிநடையிற் புக்கழுந்தி எல்லையற்ற அல்லலுக் காளாயினேன்; இனி எளியேனுக்குச் சிவஞானம்
அருளல் வேண்டும் என்று முறையிடுகின்றார்.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய
விருத்தம் 1129. இச்சை உண்டெனக் குன்திரு மலர்த்தாள்
எய்தும் வண்ணம்இங் கென்செய வல்லேன்
கொச்சை நெஞ்சம்என் குறிப்பில்நில் லாது
குதிப்பில் நின்றது மதிப்பின்இவ் வுலகில்
பிச்சை உண்டெனிற் பிச்சரிற் சீறும்
பேயருண்மனை நாயென உழைத்தேன்
செச்சை மேனிஎம் திருவொற்றி அரசே
தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
உரை: சிவந்த மேனியை யுடைய திருவொற்றியூரில் எழுந்தருளும் எமது அருளரசே, தில்லைப்பதியில் ஓங்கி விளங்குகின்ற சிவானந்தமாகிய தேனை நல்கும் பரமசிவனே, உன் அழகிய மலர்போன்ற திருவடியை எய்துதற்கு அடியேனுக்கு மிக்க ஆர்வமுண்டு; அதுபற்றி இங்கே யான் செய்ய வல்லது யாது? கீழ்மையுறும் நெஞ்சம் என் குறிப்பின் வழி நிற்பதின்றி உலகு மதிப்பனவற்றை நாடிக் குதிக்கின்றது; ஓரிடத்திற் பிச்சை யிடப்படுகிற தெனின், பிச்சைக்காரர் தம்மிற்' சீறிப் பூசலிடுவது போலப் பேய்த் தன்மையுடையோரது மனைக்குச் சென்று போட்டியிட்டுக் கொண்டு நாய்போல உழைத்தேன்; என் செயல் இருந்தவாறு என்னே! எ.று.
செச்சை - சிவப்பு; செந்துளசியின் நிறம் எனக் கொள்க. திருவொற்றியூர்க்கண் கோயில் கொண்டு அருள் ஆட்சி செய்தலை யெண்ணித் திருவொற்றியரசே என்றும், தில்லைப் பொன்னம்பலத்தில் அண்டமுற நிமிர்ந்தாடும் ஆடலரசாய்க் கண்டு, பரவுவார் உள்ளத்தில் சிவபோகமாகிய இன்பத்தேன் ஊறுவித்தல் பற்றி, “தில்லை யோங்கிய சிவானந்தத் தேனே” என்றும் புகழ்கின்றார். “கூத்தப் பிரான் திருவடி சிந்திப்பவர்க்குச் சிறந்து செந்தேன் முந்திப் பொழிவன” (ஐயாறு) எனத் திருநாவுக்கரசர் உரைப்பது காண்க. இறைவன் திருவடியை யடைந்து இன்புறல் வேண்டும் என்ற ஆர்வம் தமக்கு மிகுதியு முண்டென்பார், “இச்சையுண்டு எனக்கு உன் திருமலர்த்தாள் எய்தும் வண்ணம்” என்கின்றார். மக்களிடத் தெழும் அறிவு செயல் என்ற ஆற்றல் வகை யிரண்டிற்கும் முதல் இச்சை யென்பர்; மேனாட்டறிஞரும் “Wishes are fathers to thought and action” (Aldous Huxley) என்று கூறுகின்றார்கள். இச்சையுற்றும் அறிவு செயல் தொழிற்படாமை புலப்பட, “இங்கு என் செய வல்லேன்” என மொழிகின்றார். தொழிற்படாமைக்கு ஏது, “கொச்சை நெஞ்சம் என் குறிப்பின் நில்லாது” என்றும், அதற்கும் உலகு மதிக்கும் பொருள்களின் மேல் தாவிப் படரும் தன்மைதான் காரணம் என்பாராய், “குதிப்பினின்றது மதிப்பின் இவ்வுலகில்” என்றும் இயம்புகின்றார். உலகியல் மதிப்பு நாடியும் பொருள் வேண்டியும் போட்டியிட்டு மேல்வீழ்ந்து வருந்திய செயலை, “பேயர் உண்மனை நாயென உழைத்தேன்” என்று கூறுகின்றார். பேயர் - ஆசை வடிவினராய செல்வர். அவருடைய மதிப்பு வேண்டியும், பிறரின் மேம்பட நினைந்தும், “உண்மனை நாயென வுழைத்தே” னென்றும், மனைக்குட் புகுந்து பணி புரியும் பிறரோடு தாம் போட்டியிட்டுப் பூசலிட்டரற்றியது விளக்குதற்குப் பிச்சையிடுவது கண்ட பிச்சைக்காரர் கூட்டம் போட்டியிட் டிரைச்சலிடுவதுபோல என்று உவமம் காட்டுவாராய், “பிச்சை யுண்டெனிற் பிச்சரிற் சீறும்” எனவும் மொழிகின்றார். இவ்வுண்மையைப் பேயர்க்கேற்றினும் அமையும்.
இதன்கண், இறைவன் திருவடி எய்துதற் கிச்சை கொள்ளினும் செயற்படாது பேயர் மனை நாயென உழைத்து இளைத்தமை உரைத்தவாறு. (1)
|