பக்கம் எண் :

1130.

     ஐய நின்னுடை அன்பர்கள் எல்லாம்
          அழிவில் இன்பமுற் றருகிருக் கின்றார்
     வெய்ய நெஞ்சகப் பாவியேன் கொடிய
          வீண னேன்இங்கு வீழ்கதிக் கிடமாய்
     வைய வாழ்க்கையின் மயங்குகின் றனன்மேல்
          வருவ தோர்ந்திலன் வாழ்வடை வேனோ
     செய்ய வண்ணனே ஒற்றியம் பொருளே
          தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.

உரை:

     சிவந்த மேனியனாய்த் திருவொற்றியூரில் எழுந்தருளிய பரம்பொருளே, தில்லைப்பதியில் ஓங்கி விளங்குகின்ற சிவானந்தமாகிய தேனை வழங்கும் சிவ பிரானே, ஐயனே, உன்னுடைய அன்பர்கள் பலரும் கெடாத இன்பமெய்தி உனது அருகிலே இருக்கின்றார்கள்; கொடிய நெஞ்சினையுடைய பாவியும் கொடிய வீணனும் ஆகிய யான் கீழாய பிறப்புக் கிடமாய், மண்ணக வாழ்க்கையில் மயங்கிக் கிடக்கின்றேன்; அதனோடு மேலே வரக்கடவதும் அறிகிலேன்; யான் நல்வாழ்வு அடைவேனோ? எ.று.

           முன்னைப்பாட்டில் செச்சை மேனியையுடையவனே என்றாராகலின், இப்பாட்டில் “செய்ய வண்ணனே” என்று பரவுகின்றார். நின் அடியடைந்தார் யாவரும் என்றும் பொன்றாத சிவபோகம் நுகர்கின்றார்கள் என்பது புலப்பட, “நின்னுடைய யன்பர்கள் எல்லாம் அழிவில் இன்பமுற்றருகிருக்கின்றார்” என வுரைக்கின்றார். அருகிருத்தலைப் புராணிகர் “சாமீபம்” என்று கூறுவர். நெஞ்சின் வெம்மையை இழித்தற்கு “வெய்ய நெஞ்சகப் பாவியேன்” என்றும், நெறியின் நீங்கிப் பயனில் செயல்களில் ஈடுபட்டேன் என்றற்கு, “கொடிய வீணனேன்” என்றும் இயம்புகின்றார். வீழ்கதி - விரும்பும் பிறப்பு. உயிர் உடம்பின் நீங்கும் காலத்துப் பாவிக்கப்பட்டது யாதோ, அதுவாய்ப் பிறக்கும் என்று நூலோர் கூறுதலின், “வீழ்கதிக் கிடமாய்” என மொழிகின்றார். வீழ்கதியைக் கீழான பிறப்பென்றலும் உண்டு. வைய வாழ்க்கை - மண்ணக வாழ்க்கை. வேண்டுவது வேண்டி யாங்குப் பெறல் கூடாமையின், வைய வாழ்க்கை மனத்துக்கு மயக்கத்தை விளைவிக்கிறது. காரண காரியங்களை யுணரும் தன்மைத் தாயினும் ஒளியில் இருள்போல், மக்களறிவு மலவிருள் கலந்து வருவது தெளிய வுணரும் ஒட்பமின்றி யிருத்தலால் “மேல் வருவ தோர்ந்திலன்” என்றும், நல்வாழ்வு எய்துவேனோ என்றற்கு “வாழ் வடைவேனோ” என்றும், உரைக்கின்றார்.

     இதன்கண், மெய்யன்பர்கள் அழிவில் இன்பமுற்று இறைவன் அருகிருந்தின்புறும் பெருவாழ்வு பெற்றிருக்க, யான் வீழ்கதிக் கிடமாய் மண்ணக வாழ்வில் மயங்குகின்றேன், மேல் வருவதறியேன் என வருந்தியவாறாம்.

     (2)