பக்கம் எண் :

1131.

     மடிகொள் நெஞ்சில் வள்ளல்உன் மலர்த்தாள்
          மறந்து வஞ்சக வாழ்க்கையை மதித்தேன்
     துடிகொள் நேர்இடை மடவியர்க் குருகிச்
          சுழல்கின் றேன்அருள் சுகம்பெறு வேனோ
     வடிகொள் வேல்கரத் தண்ணலை ஈன்ற
          வள்ள லேஎன வாழ்த்துகின் றவர்தம்
     செடிகள் நீக்கிய ஒற்றியம் பரனே
          தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.

உரை:

      கூர்மை கொண்ட வேற்படையைக் கையிற் கொண்ட தலைவராகிய முருகவேளை மகனாகப் பெற்ற வள்ளலே என, வாழ்த்தி வணங்குவோருடைய குற்றங்களை நீக்கியருளிய திருவொற்றியூரில் கோயில் கொண்டருளும் பரமனே, தில்லையம்பலத்தில் ஓங்கி விளங்குகின்ற சிவானந்தம் நல்கும் தேன்போன்ற பெருமானே, சோம்பல் பொருந்திய நெஞ்சுடையே னாதலால் வள்ளலாகிய உன்னுடைய தாமரை மலர் போன்ற திருவடியை மறந்து வஞ்சனை பொருந்திய உலகியல் வாழ்க்கையைப் பொருளாக மதித்து, உடுக்கை போன்ற இடையையுடைய இளமகளிர் பொருட்டு மனமுருகி அலமருகின்றேன்; உன் திருவருளாற் பெறலாகும் சுக வாழ்வைப் பெறுவேனோ? எ.று.

     வடிகொள் வேல்-கூர்மைகொண்ட வேல். முருகப் பெருமான் ஏந்தும் வேற்படை, கூர்மை தேய்வதும் வடிக்கப்படுவதுமாகிய சிறுமையுடையதன்று என அறிக, தேவர்கட்கு வாழ்வருளும் பொருட்டு முருகனை ஈன்றமை பற்றி, “வேல் கரத்து அண்ணலை யீன்ற வள்ளலே” என்கின்றார். முருகப்பெருமான் சிவனுக்கு அன்பு மகனாதலால், “வேல்கரத் தண்ணலை யீன்ற வள்ளலே” என்பது கேட்கும் சிவபெருமான் மகிழ்ச்சி மீதூர்ந்து அவ்வாறு சொல்பவர்க்குத் துன்பம் தரும் குற்றங்களைப் போக்குகிறார் என்பது தோன்ற, “வாழ்த்து கின்றவர்தம் செடிகள் நீக்கிய பரனே” என்று உரைக்கின்றார். வள்ளலாகிய சிவபெருமானுடைய திருவடிகளை வணங்காது மறந்தமைக்குக் காரணம் கூறலுற்றவர், “மடிகொள் நெஞ்சினால் வள்ளலுன் மலர்த்தாள் மறந்து” என்றும், உலகியல் வாழ்க்கையின் வஞ்சகத் தன்மையை மெய்யாக மதித்து வீழ்ச்சி யுற்றதை “வஞ்சக வாழ்க்கையை மதித்தேன்” என்றும் உரைக்கின்றார். மடவியர் - இளமகளிர். அவர்பாற் பெறலாகும் காமவின்பத்துக்காக மனம் உருகி வருந்திய திறத்தை, “மடவியர்க்குருகிச் சுழல்கின்றேன்” என்றும், இக்குற்றத்தால் திருவருள் நல்கும் பெருவாழ்வு எய்தாமை நினைந்து “அருள் சுகம் பெறுவேனோ” என்றும் கூறுகின்றார்.

     இதனால், மகளிர் இன்பத்தை நயந்து மலர்த்தாள் மறந்த யான் சிவனது அருள் வாழ்வு பெறுவேனோ என ஏங்கியவாறாம்.

     (3)