பக்கம் எண் :

1133.

     எண்பெ றாவினைக் கேதுசெய் உடலை
          எடுத்த நாள்முதல் இந்தநாள் வரைக்கும்
     நண்பு றாப்பவம் இயற்றினன் அல்லால்
          நன்மை என்பதோர் நாளினும் அறியேன்
     வண்பெ றாவெனக் குன்திரு அருளாம்
          வாழ்வு நேர்ந்திடும் வகைஎந்த வகையோ
     திண்பெ றாநிற்க அருள்ஒற்றி அமுதே
          தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.

உரை:

      திருவொற்றியூரில் கோயில் கொண்டிருக்கும் அமுதமாகிய பெருமானே, தில்லையில் ஓங்கித் திகழும் சிவானந்தமாகிய தேனை யருள்பவனே, எண்ணற் கடங்காத வினைகட் கேதுவாகிய நினைவு சொற் செயல்களைப் புரியும் உடம்பை எடுத்த நாள்முதல் இந்நாள் வரைக்கும் துணையாகாத பவகன்மங்களைச் செய்ததே யன்றி நல்லதெனப்படுவதொரு செயலை ஒருநாளும் செய்தறியேன்; வளவிய நலம் பெறாத எனக்கு உனது திருவருள் வாழ்வு வரும் வகை எவ்வகையோ அறியேன்; எனக்குத் திண்ணமாக அமையுமாறு அருள் புரிக. எ,று.

     எண்ணுதற்கு அடங்காமல் பெருகிய வினைகள் என்றற்கு “எண்பெறாவினை” என உரைக்கின்றார். வினை நிகழ்ச்சிக்கு மனமும் மொழியும் உடலும் காரணமாதல் பற்றி, “வினைக்கு ஏதுசெய் யுடலை” என்கின்றார். “இருவினை யென்ப தென்னைகொல் அருளிய மனமே காயம் வாக்கெனு மூன்றின், இதமேயகிதம் எனும் இவை” (இருபா. 14) என அருணந்தி சிவனார் அறிவிப்பது காண்க. பவம், பவத்துக் கேதுவாகிய கன்மங்களின் மேல் நின்றது. செயப்படுபொருளை விளைத்த வினை கன்மமாகும். பவம் துன்பத்துக்குரியதாகலின், “நண்புறாப் பவம்” எனச் சிறப்பிக்கின்றார், வளமை பெறா எனக்கென்பது “வண்பெறா என”க்கென வந்தது. திருவருள் ஞானநெறி காட்டக்கண்டு இனிது வாழ்வது திருவருள் வாழ்வு. திண்மைபெறா நிற்க அருள் என்றவிடத்துத் திண்மை ஈறு கெட்டுத் திண்ணெண நின்றது. அமுது போல்வானை அமுது என்பது வழக்கு.

     இதன்கண், திருவருள் வாழ்வினைத் திண்ணமாகத் தந்தருள்க என வேண்டியவாறாம்.

     (5)