1135. வஞ்ச நெஞ்சர்தம் சேர்க்கையைத் துறந்து
வள்ளல் உன்திரு மலரடி ஏத்தி
விஞ்சு நெஞ்சர்தம் அடித்துணைக் கேவல்
விரும்பி நிற்கும்அப் பெரும்பயன் பெறவே
தஞ்சம் என்றருள் நின்திருக் கோயில்
சார்ந்து நின்றனன் தருதல்மற் றின்றோ
செஞ்சொல் ஓங்கிய ஒற்றிஎம் பெருமான்
தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
உரை: செவ்விய புகழ்மிக்க திருவொற்றியூரில் எழுந்தருளும் எம் பெருமானே, தில்லையம்பலத்தில் சிறந்து விளங்கும் சிவானந்தம் நல்கும் கூத்தப்பிரானாகிய தேனே, வஞ்சனை நிறைந்த நெஞ்சையுடைய தீயவர் கூட்டத்தைக் கைவிட்டு நீங்கி, வள்ளலாகிய உன்னுடைய தாமரை மலர் போன்ற திருவடியைப் பரவி உயர்ந்த மனம்படைத்த நல்லோர் திருவடிக்கு ஏவின பணியை விரும்பிச் செய்துநிற்கும் அப்பெரிய பயன்தரும் தொண்டினைப் பெறுதற்குத் தஞ்சம் என்று அருள் வழங்கும் நினது திருக்கோயிலைச் சார்ந்துள்ளேன்; தருவதில்லையோ? எ.று.
வஞ்சம் நிறைந்த நெஞ்சமுடைய தீய மக்களை 'வஞ்ச நெஞ்சர்' என்று கூறுகின்றார். சேர்க்கை - கூட்டம்; ஈண்டு நட்பின் மேனின்றது, அவரது நட்புச் சேர்ந்தோர் பலரையும் வஞ்ச நெஞ்சராக்கு மென்பதால், “வஞ்ச நெஞ்சர்தம் சேர்க்கையைத் துறந்து” என்று சொல்லுகின்றார். வேண்டுவார் வேண்டும் அருள் புரிவது பற்றி, “வள்ளல்” என்கின்றார். சிவன் சேவடியைப் பரவிப் பெற்ற சிவஞானத்தால் உயர்ந்த தொண்டர்களை, “திருமலர் அடியேத்தி விஞ்சு நெஞ்சர்” எனப் புகழ்கின்றார். தொண்டர்க்குத் தொண்டு செய்து தொண்டராவது பெரும் புண்ணியமாம் என்றற்கு “விஞ்சு நெஞ்சர்தம் அடித்துணைக் கேவல் விரும்பி நிற்குமப் பெரும் பயன்” என்று பேசுகின்றார். “தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியம்” என்று திருநாவுக்கரசர் மொழிகின்றார். தஞ்சமென வந்தார்க்குத் தடையின்றி அருளப்படுவது குறித்து, “தஞ்சம் என்றருள் நின் திருக்கோயில் சார்ந்து நின்றனன்” என்றும், அருளுதல் எப்போதும் தடையின்றி நிகழ்வது விளங்க, “தருதல் மற்றின்றோ” என்றும் சாற்றுகின்றார்.
இதன்கண், சிவன் திருவடி யேத்தி வழிபடும் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியம் தமக்குளதாதல் வேண்டுமெனத் திருக்கோயில் சார்ந்து நிற்கின்றமை தெரிவித்தவாறு. (7)
|