பக்கம் எண் :

1136.

     புல்ல னேன்புவி நடையிடை அலையும்
          புலைய நெஞ்சினால் பொருந்திடும் கொடிய
     அல்லல் என்பதற் கெல்லைஒன் றறியேன்
          அருந்து கின்றனன் விருத்தினன் ஆகி
     ஒல்லை உன்திருக் கோயில்முன் அடுத்தேன்
          உத்த மாஉன்தன் உள்ளம்இங் கறியேன்
     செல்லல் நீக்கிய ஒற்றியம் பொருளே
          தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.

உரை:

      காலதேச மாற்றத்தால் உளவாகும் துன்பத்தைப் போக்கிய திருவொற்றியூர் உறையும் பரம்பொருளே, தில்லையம்பலத்தின்கண் ஓங்கி நின்று நடம்புரிந் தின்புறுத்தும் சிவானந்தமாகிய தேனே, புல்லியோனாகிய யான் உலக நடையின்கண் ஒன்றை விட்டொன்றுபற்றி அலைந்தோடும் புலைத்தன்மையுடைய நெஞ்சினோடு பொருந்தும் கொடிய துன்பங்கட்கு எல்லையொன்றும் அறியேனாய் அவற்றிற்கு விருந்தாயிருந்து நுகர்கின்றேன்; உன்னுடைய திருக்கோயில் திருமுன் விரைந்து வந்தடைந்தேனாயினும், உத்தமனாகிய உன் திருவுள்ளம் இவ்விடத்து அறியேனாகின்றேன். எ.று.

     புன்னைத் தன்மையுடைய யான் என்பது “புல்லனேன்” என வந்தது. புவி நடை - உலக நடை. கணந்தோறும் நிலையுதலின்றி மாறுதலை யியல்பாக வுடைமைபற்றிப் “புவிநடை யிடை யலையும் நெஞ்சு” என்கின்றார். கீழ்மைச் செயல் புரிவது பற்றிப் “புலைய நெஞ்சு” என்று இழித்துரைக்கின்றார். புலை, புலைச்செயல் மேனின்றது. “வார்சடைய வள்ளல்” (சீவக) என்றாற்போலப் புலைய நெஞ்சு என வந்ததென்க. நேரிய வழியின் வாராத துன்பத்தைக் “கொடிய அல்லல்” என்று குறிக்கின்றார். முடிவின்றி வந்துகொண்டே யிருப்பதால் “கொடிய அல்லல் என்பதற் கெல்லை யொன்றறியேன்” எனவும், ஒவ்வொன்றும் புதிது புதிதாய் வந்து வருத்துவதும், வருத்தும் துன்பங்களை ஏற்ற வண்ணமிருப்பதும் இனிது புலப்பட, “அருந்துகின்றனன் விருந்தினனாகி” எனவும் எடுத்து உரைக்கின்றார். எல்லையின்றி வரும் துன்பங்களைப் பொறுக்க மாட்டாமையின் விரைந்து இறைவன் திருக்கோயில் திருமுன் அடைந்த செய்தியை, “ஒல்லை யுன் திருக்கோயில் திருமுன் அடுத்தேன்” என்று கூறுகின்றவர், இறைவன் திருவுள்ளம் தெரியாமை நினைந்து, “உத்தமா வுன்றன் திருவுள்ளம் இங்கறியேன்” என்று இயம்புகின்றார். ஒற்றியூர் கடற்கரைக் கண்ணதாகலின், காலந்தோறும் நிலக்கூறு வேறுபட்டுத் தன்கண் வாழ்வார்க்கு வருத்தம் எய்துவித்தலுண்மை நினைந்து, “செல்லல் நீக்கிய ஒற்றியம் பொருளே” என்று பரவுகின்றார்.

     இதன்கண், புவி நடையில் அலையும் நெஞ்சோடு கூடி எல்லையில்லாத துன்பங்கட் கிரையாகி வருந்துவதும், அதுகுறித்து ஒற்றித் திருக்கோயில் அடைந்து வழிபட்டதும் உரைத்தவாறாம்.

     (8)