பக்கம் எண் :

1137.

     எளிய னேன்பிழை இயற்றிய எல்லாம்
          எண்ணி னுட்பா வேனும்மற் றவையை
     அளிய நல்லருள் ஈந்திடும் பொருட்டால்
          ஆய்தல் நன்றல ஆதலின் ஈண்டே
     களிய நெஞ்சமாம் கருங்கலைக் கரைத்துக்
          கருணை ஈகுதல் கடன்உனக் கையா
     தெளிய ஓங்கிய ஒற்றிஎன் அமுதே
          தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.

உரை:

     இல்லென்பாரும் உண்டெனத் தெளியுமாறு உயர்ந்த திருவொற்றியூர்க்கண் எழுந்தருளும் அமுது போல்பவனே, தில்லையம்பலத்தில் ஓங்கிய திருக்கூத்தால் சிவானந்தமாகிய தேனாய் விளங்குபவனே, எளியவனாகிய யான் செய்த பிழைகள் எல்லாம் எண்ணில் அடங்காதவையாகும்; ஆயினும், அவற்றை அளித்தலையுடைய நல்ல திருவருளை எனக்கு ஈயும் பொருட்டு எத்தகையன என ஆராய்தல் நின் பெருந்தன்மைக்கு நல்ல செயலாகாது; ஆதலால், இப்பொழுது பிளப்பின்றிக் களிப்பேறிய எனது நெஞ்சமாகிய கருங்கல்லைக் கரைத்து, நின் கருணையைச் சொரிவது, ஐயனே உனக்குக் கடனாகும். எ.று.

     பரம்பொருள் ஒன்று உண்டு என்று பரவுவோர் உளராகியபோதே இல்லையென்போரும், அவர் சொற்களைக் கேட்டு ஐயுற்று மயங்குவோரும் இன்றும் உளராயினமையின், அவர்கள் இனிது தெளியுமாறு ஒற்றியூர்க்கண் ஓங்கிக் காட்சி தருகின்றமை விளங்க, “தெளியவோங்கிய ஒற்றியென்னமுதே” என்று கூறுகின்றார். யானை போல்பவனை யானை என்பது போல அமுதுபோன்ற இறைவனை “அமுதே” என உபசரிக்கின்றார். தேன் என்றதற்கும் இதுவே கூறிக் கொள்க. இயற்றிய பிழை யென மாறுக. பிழைகளுள் அறிந்து செய்தனவும் அறியாமற் செய்தனவும் ஆகிய எல்லாம் அடங்க “பிழை இயற்றிய எல்லாம்” என்று கூறுகின்றார் என்றுமாம். எண்ணினுட்படா என்றதனால் எண்ணாது செய்த பிழைகள் வருவிக்கப்பட்டன. அருளெல்லாம் அளித்தற் குரியவையாதலின், “அளிய நல்லருள்” என்றும், அளிக்கப்படுவோர் தகுதியும் பிறவும் நோக்கா தளித்தலே தலையாய அருளாதல் பற்றி, “ஆய்தல் நன்றல” என்றும், அருளப்படற் கொத்த தகுதி யென்பால் இன்றாயினும், மனம் கனிந்தல தெனினும், கனிவித்துக் கருணை செய்தல் தலைவனான நினக்குக் கடன் என்பாராய், “களிய நெஞ்சமாம் கருங்கல்லைக் கரைத்துக் கருணை யீகுதல் கடன் உனக்கு ஐயா” என்றும் கூறுகின்றார். களிப்பால் இறுகிய நெஞ்சென்றற்குக் களிய நெஞ்சம் என்கின்றார். களி, களிமண் போல நின்றது.

     இதன்கண், நல்லருள் செய்தற் பொருட்டு எளியேன் கன்னெஞ்சினைக் கரைத்துக் கருணை செய்தல் கடன் என்று கட்டுரைக்கின்றார்.

     (9)