1138. வெறிபி டிக்கினும் மகன்தனைப் பெற்றோர்
விடுத்தி டார்அந்த வெறியது தீரும்
நெறிபி டித்துநின் றாய்வரென் அரசே
நீயும் அப்படி நீசனேன் தனக்குப்
பொறிபி டித்தநல் போதகம் அருளிப்
புன்மை யாவையும் போக்கிடல் வேண்டும்
செறிபி டித்தவான் பொழில்ஒற்றி அமுதே
தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
உரை: செறிந்த வானளாவிய சோலைகள் நிறைந்த திருவொற்றியூரில் எழுந்தருளும் அமுதுபோன்ற பெருமானே, தில்லையம்பலத்தில் கூத்தாட்டால் உயர்ந்த சிவானந்தமாகிய தேனை அளிப்பவனே, பெற்ற மகனை வெறி பிடித்துக் கொண்டால், பெற்றவர்கள் அவனைக் கைவிடாராய், அந்த வெறி தீர்தற்குரிய நெறி கண்டு அவ்வழி நின்று செய்வன ஆய்ந்து செய்து காண்பர். எனக்கு அரசனாகிய பெருமானே, நீயும் நீசனாகிய எனக்கு அப்படியே என் கண் முதலிய பொறிகளால் கண்டறியத் தக்க நல்ல போதகம் செய்து என்பாலுள்ள புன்மைகள் அனைத்தையும் போக்கி யருள வேண்டுகிறேன். எ.று.
வெறி - தலையில் மூளையைத் தாக்கி அறிவு நினைவுகளைச் சிதைக்கும் நோய். வெறி பிடித்தவர்பால் அறிவும் செயலும் முறைப்படி நடவாமையின் யாவரும் அவரைக் கைவிட்டொழிவராயினும் பெற்றோர்க்கு அது செய்ய மனம் செல்லாமையின், “வெறி பிடிக்கினும் மகன்தனைப் பெற்றோர் விடுத்திடார்” என்றும், வெறி நீங்குதற்குரிய மருத்துவர் வழி நின்று தகுவன செய்வராவது தோன்ற, “வெறியது தீரும் நெறி பிடித்து நின்று ஆய்வர்” என்றும் கூறுகின்றார். நீசன் - குணஞ் செயல்களால் தாழ்ந்தவன். கண் முதலியன அறிகருவிகளாதலின், அவற்றின் வாயிலாக அறிவு திருந்துவன கண்டு செய்வது பற்றி, “பொறி பிடித்த நல்போதகம் அருளி” என்று உரைக்கின்றார். போதகம் - அறிவுரை; ஈண்டு அறிவின் மேற்றாய செயல். புன்மை - குற்றம். மரங்கள் செறிந்த பொழில்களைச் “செறி பிடித்த வான் பொழில்” என்று புகழ்கின்றார்.
இதன்கண், வெறி பிடித்தோரை யாதரித்து அறிவுடைய ராக்குதல் போலத் தமக்குக் குற்றம்போக்கி ஞான மருளல் வேண்டுமென முறையிட்டவாறு. (10)
|