1142. மண்ணினுள் மயங்கி வஞ்சக வினையால்
மனந்தளர்ந் தழுங்கிநாள் தோறும்
எண்ணினுள் அடங்காத் துயரொடும் புலையர்
இல்லிடை மல்லிடு கின்றேன்
விண்ணினுள் இலங்கும் சுடர்நிகர் உனது
மெல்அடிக் கடிமைசெய் வேனோ
கண்ணினுள் மணியே ஒற்றியங் கனியே
கடவுளே கருணையங் கடலே.
உரை: கருணைக் கடவுளாகிய கடவுளே, கண்ணின் மணி போல்பவனே, திருவொற்றியூரில் எழுந்தருளும் கனி போல்பவனே, மண்ணக வாழ்வால் அறிவு மயங்கி வஞ்சனைபொருந்திய வினைகளால் மனவலி குன்றி மெலிந்து, நாடோறும் எண்ண முடியாத துயரத்துடன், புலால் கமழும் உடம்பின்கண் இருந்து அது நல்கும் பசி நோய் முதலியவற்றோடு போராடுகின்ற யான், விண்ணின்கண் உலவும் சுடர்களைப் போன்ற உன்னுடைய மெல்லிய திருவடிகட்கும் தொண்டு செய்யமாட்டா தொழிகின்றேன்; இதற்கு யான் செய்யக்கடவது யாது? எ.று.
மண்ணுலகும், அதன்கண் வாழும் உயிர்கட்கு அமைந்த உடம்பும் கருவி கரணங்களும் மாயையால் ஆயவை யாதலின், “மண்ணினுள் மயங்கி” என்று இசைக்கின்றார். தன்னைச் செய்பவனுக்குத் தான் பின்பு விளைவிக்கும் நலம் தீங்குகளைக் காட்டாமல் மறைத்து இயலுதலால் செய்வினையை, “வஞ்சக வினை” என்றும், தடைப்பட்ட போதும் தீப்பயனை விளைவிக்கும் போதும் மனம் வன்மையிழந்து தளர்ந்து கெடுமாறு தோன்ற, “மனம் தளர்ந்தழுங்கி” என்றும், நாளும் வினையைச் செய்யும் போதும் அதன் பயனை நுகரும்போதும், பசியும் பிணியும் தாக்கும்போதும் மிக்க துன்ப முண்டாதலால், “நாடோறும் எண்ணினுள் அடங்காத் துயரொடும்” என்றும், வினை செய்தலும் பயன் நுகர்தலும் உடம்பின்கண் இருந்தே உயிர்செய்தலால், “புலையர் இல்லிடை மல்லிடுகின்றேன்” என்றும் கூறுகின்றார். புலையார் இல் - புலானாறும் உடம்பு. புலையார் இல், புலையர் இல் என வந்தது. மல்லிடுதல் - போராடுதல். வாழ்க்கையே போராட்டம் என்பது உலகியலுரை. விண்ணினுள் இலங்கும் சுடர் - சூரிய சந்திரர். இறைவனை நினைந்து செய்யும் நற்பணிகளைத் திருவடித் தொண்டென்னும் வழக்குப்பற்றி, “உனது மெல்லடிக் கடிமை செய்வேனோ” என உரைக்கின்றார். திருவடிக்கு அடிமை செய்தற்கு மாறாக வஞ்சக வினையால் மனம் தளர்ந்து புலையர் இல்லிடை மல்லிடுகின்றேனாதலால் நின் திருவடித் தொண்டு புரிய மாட்டேனாகின்றேன் என்பது குறிப்பு.
இதனால், இறைவன் திருவடிக்குத் தொண்டு புரிய மாட்டாமைக் கமைந்த காரணம் தெரிவித்தவாறாம். (4)
|