1145. ஞாலவாழ் வனைத்தும் கானல்நீர் எனவே
நன்கறிந் துன்திரு அருளாம்
சீலவாழ் வடையும் செல்வம்இப் பொல்லாச்
சிறியனும் பெறுகுவ தேயோ
நீலமா மிடற்றுப் பவளமா மலையே
நின்மல ஆனந்த நிலையே
காலன்நாண் அவிழ்க்கும் காலனே ஒற்றிக்
கடவுளே கருணையங் கடலே.
உரை: கால பாசத்தைக் கட்டறுக்கும் காலனும் திருவொற்றியூரில் எழுந்தருளும் கடவுளுமாகிய கருணைக் கடலே, நீல நிறமுடைய அழகிய கழுத்தையுடைய பவள நிறங் கொண்ட பெரிய மலை போன்றவனே, மலவிருள் இல்லாத ஆனந்த நிலையமே, உலகியல் வாழ்வனைத்தும் கானலில் தோன்றும் நீர் போற் பொய்யான தென்று நன்றாக அறிந்து உனது திருவருள் வாழ்வாகிய ஒழுக்கமிக்க வாழ்வை அடைதற் கேற்ற அருட் செல்வம் இந்தப் பொல்லாத சிறுமையுடைய யானும் பெறுதற்கமையுமோ, உரைத்தருள்க. எ.று.
நஞ்சுண்டமையின் திருக்கழுத்து நீல நிறம் பெற்றதாயினும் பொலிவு மாறாமையால் “நீலமா மிடறு” என்றும், செம்மேனியும் சலியா நிலைமையும் கொண்டமையின் “பவள மாமலையே” என்றும், உயிரினும் நுகரும் ஆனந்தம் மலவிருள் கலந்து சிறிது போதில் துன்பமாய் மாறுதலால் சிவானந்தம் அன்னதன் றென்றற்கு “நின்மல வானந்த நிலையே” என்றும் சிறப்பித்துரைக்கின்றார். கால பாசம் இறுதி நாளில் உயிரைப் பிணித்துக் கொண்டு செல்வதால், காலனுக்கும் காலனாய் அவனது பாசப் பிணிப்பை அறுத்து உயிர்கட்கு வீடு நல்குவது பற்றி, “காலன் நாண் அவிழ்க்கும் காலனே” என்று கூறுகின்றார். உடலோடு ஒன்றித் தோன்றி நிலவும் உயிரை, உரிய கால மறிந்து அவ்வுடம்பினின்றும் பிரித்துப் பிணித்துச் செல்வது பற்றி இயமனைப் புராணங்கள் காலன் என்றலின் காலன் என வள்ளலாரும் உரைக்கின்றார். ஞாலவாழ்வு - மண்ணுலக வாழ்வு. வாழ்வோருடைய சிறுமை பெருமை, செல்வ வறுமை முதலியவற்றிற் கேற்ப வாழ்வுகளும் பலவாதலின், “ஞால வாழ்வனைத்தும்” என்று குறிக்கின்றார். நிலையுடையன போலத் தோன்றிக் கடிதின் மறைந்து கெடுதலின் “கானல்நீர் எனவே நன்கறிந்து” என்றும், அளவைகளாலும் பொருந்துமாற்றாலும் தெளிவுற அறிந்தாலன்றி ஞால வாழ்வின் பொய்ம்மை அறியப்படாமையால் “நன்கறிந்து” என்றும் உரைக்கின்றார். பொய்ம்மை யுணர்ந்து உவர்த்த விடத்து மெய்ம்மை சான்றது திருவருட் செல்வ வாழ்வாதல் தெளியப்படுதலால், “உன் திருவருளாம் சீல வாழ்வடையும் செல்வம்” என்றும், சீலத்தாற் பெருமை மிக்க அவ்வருள் வாழ்வையும் அதனை அடைய விழையும் தம்மையும் சீர்தூக்கி எண்ணுகின்றவர், தம்மிடத்துள்ள பொல்லாங்கும் சிறுமையும் நன்கு தோன்றக்கண்டு தமக்கு அச் செல்வ வாழ்வு எய்துமோ என்ற ஏக்கம் எய்தி, “இப்பொல்லாச் சிறியனும் பெறுகுவ தேயோ” என்றும் வருந்துகின்றார். திருவருள் வாழ்வுற்றார்பால் பொய்தீர் ஒழுக்கமாகிய சீலம் சிறந்து விளங்குவது பற்றி, “திருவருளாம் சீல வாழ்வு” எனத் தெரிவிக்கின்றார்.
இதனால், திருவருள் வாழ்வினைத் தாம் பெற விரும்பும் திறத்தை வள்ளலார் விளம்புதல் காண்கின்றோம். (7)
|