1146. மாலொடு நான்கு வதனனும் காணா
மலரடிக் கடிமைசெய் தினிப்பாம்
பாலொடு கலந்த தேன்என உன்சீர்
பாடும்நாள் எந்தநாள் அறியேன்
வேலொடு மயிலும் கொண்டிடுஞ் சுடரை
விளைவித்த வித்தக விளக்கே
காலொடு பூதம் ஐந்துமாம் ஒற்றிக்
கடவுளே கருணையங் கடலே.
உரை: காற்றோடு விண் முதலாகிய பூதமைந்தினையும் தனக்கு உருவாகக் கொண்ட ஒற்றியூரின்கண் எழுந்தருளும் கடவுளாகிய கருணைக் கடலே, வேலும் மயிலும் கொண்ட முருகனாகிய சுடரைத் தோற்றுவித்த ஞானவிளக்காகத் திகழ்பவனே, திருமாலும் நான்முகனும் காணாத தாமரை மலர் போலும் திருவடிக்கு அடித்தொண்டு செய்து, இனிப்புச் சுவையுடையதாகிய பாலொடு கலந்த தேன் போன்ற உன்னுடைய புகழை நான் பாடும் நாள் எந்த நாளோ, என்னால் அறிய முடியவில்லை. எ.று.
வேலைப் படையாகவும் மயிலை ஊர்தியாகவும் உடைய முருகப் பெருமானும் சிவனைப் போல இளஞாயிறு போலும் ஒளி யுடையவனாதலால் “சுடர்” என்றும், சிவபெருமான் திருவிழியிற் றோன்றியது பற்றிச் சிவனைச் “சுடரை விளைவித்த விளக்கே” என்றும், சிவன் ஞானமே யுருவாயவன் எனபது பற்றி “வித்தக விளக்கு” என்றும் சிறப்பிக்கின்றார். விளக்கிடத்தே விளங்குவது சுடராதலால், “சுடரை விளைவித்த விளக்கே” என விளம்புகிறார். பூதமைந்தும் விண் முதல் நில மீறாகவோ, நில முதல் விண்ணீறாகவோ கூறப்படுவது மரபாயினும் ஈண்டு எதுகை நோக்கிக் “காலொடு பூதம் ஐந்துமாம்” என வுரைக்கின்றார். வதனம் - முகம்; அதனால், நான்கு முகமுடைய பிரமனை, “நான்கு வதனன்” என இசைக்கின்றார். திருமாலும் பிரமனும் முறையே பரமனுடைய அதிகாரம் பெற்றுக் காத்தற் றொழிலையும் படைத்தற் றொழிலையும் புரியும் அதிகார தெய்வங்களாயினும், பரமசிவனுடைய திருவடிகளின் மாண்பினை அறிந்திலர் எனப் புராணம் கூறுதலால், அத்துணைப் பெருமை யமைந்த திருவடிகளை நினைந்து தொண்டு செய்வதல்லது செயல் வேறில்லை யாதலால் “மலரடிக் கடிமை செய்து” என்றும், பாடுமிடத்து நினைவில் திருவடிச் சிறப்பும், நாவில் அதன் புகழுரைக்கும் சொல்லும் நின்று மிக்க இன்பம் செய்வது உண்ர்ந்திருத்தலின், வள்ளற் பெருமான் “இனிப்பாம் பாலொடு கலந்த தேன் என உன்சீர் பாடும் நாள் எந்த நாள்” என்றும் வேண்டுகிறார். தேன் கலந்த பால் போல் இனிக்கும் பாடல் அமைய வேண்டின் இறைவன் திருவருள் இன்றியமையாமையால் பாடும் நாள் எந்த நாள் என்று இறைஞ்சுகின்றார்.
இதனால், இறைவனது இனிய சீர்களைச் சுவை மிக்க மாட்டுக்களில் பாடற் கேற்ற அருள் வழங்க வேண்டுமென விண்ணப்பித்தவாறாம். (8)
|