1158. கொடிய வஞ்சக நெஞ்சகம் எனும்ஓர்
குரங்கிற் கென்உறு குறைபல உரைத்தும்
கடிய தாதலின் கசிந்தில தினிஇக்
கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
அடிய னேன்பிழை உளத்திடை நினையேல்
அருளல் வேண்டும்என் ஆருயிர்த் துணையே
செடிகள் நீக்கிய ஒற்றிஎம் உறவே
செல்வ மேபர சிவம்பரம் பொருளே.
உரை: எனது அருமை யுயிர்க்குத் துணையானவனே, குற்றமில்லாத ஒற்றியூர்க்கண் எழுந்தருளும் எம் உறவினனே, அருட் செல்வமே, பரசிவமாகிய பரம் பொருளே, கொடுமைத் தன்மையும் வஞ்சகச் செய்கையு முடைய நெஞ்சமென்னும் ஒரு குரங்கிற்கு எனக்குற்ற குறை பலவும் எடுத்துரைத்தும், கடுமையானதாதலால் இரங்காமல் உளது; அதனால் கடையனாகிய யான் இப்பொழுது செய்யத் தக்கது ஒன்றும் அறியாமலிருக்கின்றேன்; அடியேனாகிய என் பிழைகளை உள்ளத்திற் கொள்ளாமல் அருள் புரிய வேண்டும். எ.று.
பெறற் கருமையால் உயிரை “ஆரூயிர்” எனவும், அதற்குத் துணையாய் அவ்வப் போது அறிவு தந்தருள்பவ னாதலால், “துணையே” எனவும் இயம்புகின்றார். செடி - குற்றம். “செடியாய வுடல்” (புள்ளிருக்கு) என ஞானசம்பந்தர் குறிப்பது அறிக. கொடுமை - நேர்மையில்லாமை. கடியது - கடுமையானது. “உணர்வுடையது போல்” நெஞ்சை யுரைப்பது மரபாதலால், “கடியதாகலின் கசிந்திலது” என்று கூறுகின்றார். “அன்பினராய அடியவர் பிழைப்பு நீக்குவர்” (பேரெயில்) எனப் பெரியோர் உரைத்தலால், “அடியனேன் பிழை உளத்திடை நினையேல்” என்று வேண்டுகிறார்.
இதனால், மனத்தின் கொடுமையாலும் எய்தும் பிழை பொறுத்தருள்க என விண்ணப்பித்தவாறு. (9)
|