1162. நாடியசீர் ஒற்றி நகர்உடையாய் நின்கோயில்
நீடியநற் சந்நிதியில் நின்றுநின்று மால்அயனும்
தேடிஅறி ஒண்ணாத் திருஉருவைக் கண்டுருகிப்
பாடிஅழு தேங்கும்இந்தப் பாவிமுகம் பாராயோ.
உரை: விரும்பப் படுகின்ற புகழையுடைய திருவொற்றியூரை யுடையவனே, திருமாலும் பிரமனும் முயன்று தேடியும் காண்டற்கு முடியாத நின் திருவுருவை நின் திருக்கோயிலிடத்து உயர்ந்த திருமுன்பு நெடிது நின்று கண்களாற் கண்டு மனமுருகி, வாயாரப்பாடியழுது ஏக்கமுடன் நிற்கும் பாவியாகிய என் முகத்தைப் பார்க்க மாட்டாயோ? எ.று.
இம்மைக்குரிய பொருட்செல்வமும் அம்மைக்குரிய அருட்செல்வமுமாகிய இரண்டாலும் புகழ்பெற்ற நகரமாதலின், “நாடிய சீர் ஒற்றி நகர்” என்று சிறப்பிக்கின்றார். நெடிது உயர்ந்த விமானத்தோடு கூடிய கோயில் என்பது தோன்ற, “நீடிய நற் சந்நிதி” என்று சிறப்பிக்கின்றார். மாலும் அயனும் அடியும் முடியும் தேடிக் காண மாட்டா தொழிந்த வரலாறு, மக்களின் இயற்கையும் செயற்கையுமாகிய இருவகையறிவும் பரம்பொருளை அறிய இயலாமையைக் குறிப்பதென்று அறிந்தோர் உரைத்தலின், அவனைப் பன்முறையும் பல பாட்டுக்களிற் பெரியோர் கூறுதலான், ஈண்டும் குறிக்கப்படுகின்றது. “அளவிடலுற்ற அயனொடு மாலும் அண்டமண் கிண்டியும் காணா முளையெரியாகிய மூர்த்தி” (வீழி) என ஞானசம்பந்தர் முதலியோர் கூறுவதனாலும் இது தெளிவாகிறது. இயற்கையறிவு பசுஞான மென்றும், செயற்கையாகிய கல்வியறிவு பாசஞான மென்றும் கொண்டு, “பாசமா ஞானத்தாலும் படர்பசு ஞானத்தாலும் ஈசனை உணர வொண்ணாது” (சிவப்பி) என உமாபதி சிவாசாரியரும் கூறுவது காட்டி, இவ்வரலாற்றுக் கருத்தை வற்புறுத்துவர். பாடுங்கால் பாட்டின் இசையும் பொருளும் மனத்தில் தோய்ந்து உருக்குதலின் பாடுதலும் அழுதலும் எடுத்துரைத்து வருந்துகிறார். அழுதால் இறைவனருளைப் பெறலாம் என்பதும் கருத்தாகும். “வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே“ என்பது திருவாசகம்.
இதனால், பாடியழுது ஏங்கும் தன் முகத்தைப் பார்த்தருள வேண்டுமென விண்ணப்பித்தவாறாம். (4)
|