பக்கம் எண் :

1170.

     விதிஇழந்த வெண்தலைகொள் வித்தகனே வேதியனே
     மதிஇழந்தோர்க் கேலா வளர்ஒற்றி வானவனே
     நிதிஇழந்தோர் போல்அயர்ந்து நின்னுடைய வாழ்க்கைப்
     பதிவிரும்பி வாடும்இந்தப் பாவிமுகம் பாராயோ.

உரை:

      பிரமதேவன் துறந்த தலையோட்டைப் பலிகொள் கலமாகக் கைக்கொண்ட வித்தகனே, வேதமோதிய பொருளாகியவனே, நல்லறிவு இல்லாதவர்க்கு இடமாகாத திருவொற்றியூரில் எழுந்தருளும் தேவனே, செல்வத்தை யிழந்தவர் போல மனம் சோர்ந்து, நினது வாழிடமாகிய திருவொற்றியூரை விரும்பி வருந்துகின்ற பாவியாகிய எனது முகத்தைப் பார்த்தருள்வாயாக. எ.று.

     விதி - பிரமதேவன். படைக்குந் தெய்வமாதல் பற்றிப் பிரமனுக்கு விதியென்பது பெயராயிற்று. வெண்டலை - தலையில் உள்ள மண்டையோடு. வித்தகன் - ஞானவான். வேதியன் - வேதத்தின் பொருளாகியவன்; வேதத்தை இன்னிசையோடு ஓதுபவன் எனினுமாம். நல்லறி வில்லாதவர்க்கு வாழிடமாகாத ஞான நிலையம் என்றற்கு, “மதி யிழந்தார்க்கு ஏலா வளர் ஒற்றி” எனப் புகழ்கின்றார். பொருளை விரும்பிப் பாதுகாத்தோர் அதனை யிழந்தவழிப் பெருந்துயருற்று வருந்துவது போல, ஒற்றித் தலத்துத் திருமூலட்டானத்தைக் காணக் காதலித்து வந்து, காண மாட்டாது கலங்கினமை புலப்பட, “நிதியிழந்தோர் போலயர்ந்து நின்னுடைய வாழ்க்கைப் பதி விரும்பி வாடும் இந்தப் பாவி” என ஏங்குகின்றார்.

     இதனால், ஒற்றியூர் இறைவனைக் காணாமையால் ஏங்கிய கலக்கம் தெரிவித்தவாறு.

     (12)