1176. பிறவிக் கண்ணிலான் கைக்கொளும் கோலைப்
பிடுங்கி வீசுதல் பெரியவர்க் கறமோ
மறவிக் கையறை மனத்தினேன் உம்மேல்
வைக்கும் அன்பைநீர் மாற்றுதல் அழகோ
உறஇக் கொள்கையே உள்ளிரேல் இதனை
ஓதிக் கொள்ளிடம் ஒன்றிலை கண்டீர்
நறவிக் கோங்கிய ஒற்றியம் பதியீர்
ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
உரை: தேன் பொருந்திய கரும்பு வயல்களையுடைய திருவொற்றியூரை யுடையவரே, ஞான நாடகம் ஆடுகின்ற பெருமானே, பிறவியிலேயே கண்ணில்லாதவன் கையில் கொண்டுள்ள ஊன்றுகோலைப் பிடுங்கி எட்டாத தூரத்தே எறிந்து விடுதல் கண்ணுடையவனுக்கு அறமாகுமா? ஆகாதன்றோ! மறதியால் கையறவுபடும் மனத்தினையுடைய யான் உன்பால் கொண்டிருக்கிற அன்பை மாற்றுவது அழகாகாது. யாவரோடும் அன்புறவு கொள்ளும் நற்கொள்கையைத் திருவுள்ளத்துக் கொள்ளாது ஒழுகுவீராயின் இதனைப் படித்தறிந்து கொள்ளுதற்கு வேறிடமில்லை. எ.று.
இக்கு-கரும்பு; கரும்பின் சாறு ஈண்டு நறவு எனப்படுகிறது. இடையிற் கண்ணிழந்தவன் ஆகில் முன்னைய அறிவுகொண்டு ஓரளவு வீட்டிற்குள்ளால் இயங்க முடியும். அவ்வியைபும் இன்றென்பதற்குப் “பிறவிக் கண்ணிலான்” என விதந்துரைக்கின்றார். கைக்கோல் என்னாது “கைக்கொளும் கோல்” என்றதனால், கண்ணும் ஊன்று துணையுமாம் என்பது பெறப்படும். பெரியவர்க்குப் பெருமை கண்ணுடைமை, “கண்ணுடையார் கண்ணோட்டம் இன்மையும் இல்” (குறள். 577) என்பது ஈண்டு நினைவிற் கொள்ளற்பாலது, மலப் பிணிப்பால் மறதிக் கிரையாகி வருந்துவது எவர்க்கும் இயல்பாதல் பற்றி, “மறவிக் கையறை மனத்தினேன்” என்கின்றார். மறவி-மறதி. கையறை - செயலற்றொழிதல். கையறவு, கையறை யென வந்தது, உறுப்பறுதல் உறுப்பறை என வருதல் போல, உரியன செய்யாவிடத்து அன்பு மாறுவது பற்றி, “உம்மேல் வைக்கும் அன்பை நீர் மாற்றுதல் அழகோ” என்கின்றார். மறத்தலும் மாறுதலும் மனத்துக் கியல்பென்பதை, “மறக்கும் மனத்தினை மாற்றி யெம் ஆவியை வற்புறுத்தி” (நீலகண்) என ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. உறவு, உறவியென வந்தது, துறவு துறவி என வருதல் போல, “பிறவி யெனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத், துறவி யெனும் தோல் தோணி கண்டீர்” (ஆளுடைமும்மணி) என்று நம்பியாண்டார் நம்பிகள் உரைப்பது காண்க. உறவிக் கொள்கை - பரவுவார் பழிப்பார் யாவரொடும் அன்புறவு கொள்ளும் கொள்கை. “பரவுவாரையும் பழித்து இகழுவாரையும் உடையார்” (வாழ்கொளி) என்று ஞானசம்பந்தர் நவில்கின்றார். உள்ளுதல் - மனத்தில் நினைத்தல். “உள்ளினென் அல்லனோ யானே, உள்ளி நினைந்தன னென் அல்லனோ பெரிதே” (குறுந். 99) என்று சான்றோர் கூறுவதனாலும் அறிக. உன்னின் ஒப்பாரும் மிக்காரும், இன்மையின், உன்னை நினைப்பிப்பார் பிறர் யாருமில்லை யென்பார். “உள்ளிரேல் இதனை ஓதிக் கொள்ளிடம் ஒன்றிலை” எனப் புகல்கின்றார்.
இதனால், என் உறவை மறவற்க என உன்னை நினைப்பிப்பார் பிறரில்லையென முறையிட்டுக் கொண்டவாறு. (6)
|