1180. கல்வி வேண்டிய மகன்தனைப் பெற்றோர்
கடுத்தல் ஓர்சிறு கதையிலும் இலைகாண்
செல்வம் வேண்டிலேன் திருவருள் விழைந்தேன்
சிறிய னேனைநீர் தியக்குதல் அழகோ
பல்வி தங்களால் பணிசெயும் உரிமைப்
பாங்கு நல்கும்அப் பரம்உமக் கன்றே
நல்வி தத்தினர் புகழ்ஒற்றி உடையீர்
ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
உரை: நன்னெறியாளர் புகழ்ந்தோதும் திருவொற்றியூரை யுடையவரே, கல்வி கற்கவேண்டும் என்று விரும்புகின்ற மகனை ஐயுற்றுக் கைவிடுதல் சிறுகதையிலும் கூடப் பேசப்படுவதில்லை. யானோ நும்பால் செல்வம் யாதும் வேண்டாம். நுமது திருவருள் ஒன்றே வேண்டுமென ஆசைப்படுகின்றேன். சிறுமையுடையவனாகிய என்னை அறிவு தியங்கச் செய்வது உமக்கு அழகாகாது. அன்றியும் பல வகையாலும் உமக்குப் பணிபுரியும் உரிமைத் திறங்களை எனக்கு நல்குவது கடமையாகும். எ.று.
நல்விதத்தினர் - நல்வகையில் வாழ்க்கையை நடத்துவோர். ஏனையெல்லார் புகழிலும் நல்லவர் புகழ்நிலை பெறுவது பற்றி, “நல்விதத்தினர் புகழ் ஒற்றியுடையீர்” என்கின்றார். பெற்ற மக்களில் கல்வியை விரும்பும் மகனைப் பெற்றோர் பெரிதும் விரும்புவர் ஆதலின், அவர் சொற் செயல்களில் ஐயுற்றுத் தடை செய்வதில்லை யென்பதுபற்றிப் “பெற்றோர் கல்வி வேண்டிய மகன்தனைக் கடுத்தல் ஓர் சிறு கதையினும் இல்லை” என்கின்றார். உலகியலில் நன்மனமுடைய செல்வரிடத்துப் பெறற்கெளிதாகும் செல்வம் போலத் திருவருட் செல்வம் அருமை யுடையதாதலால், “செல்வம் வேண்டிலேன் திருவருள் விழைந்தேன்” எனவும், அது திருவருள் ஞானப் பெருமையுடைய பெரியோர்க்கன்றி எய்தலாகாமையின் “சிறியனேன்” எனவும் தெரிவிக்கின்றார். செல்வம் பூரியார் கண்ணும் இருப்பதாகலின், அதனை வேண்டாராயினர் எனினும் அமையும். சிறுமையால் வருந்துதல் மேலும், அருள் செய்யத் தாழ்த்து மயக்குதல் முறையன் றென்பாராய்ச், “சிறியனேனை நீர் தியக்குதல் அழகோ” எனச் செப்புகின்றார். பல்வகையாலும் பணி புரிவார்க்கே திருவருட்செல்வம் எய்தும் பாங்கமையும் என்றும், அது தானும் இறைவன் அருளாலன்றி யமையா தென்றும் பெரியோர் கூறுதலின், “பலவிதங்களால் பணி செய்யும் உரிமைப் பாங்கு நல்கும் அப் பரம்
உமக்கன்றே” எனப் பகர்கின்றார். “கண்டெந்தை யென்றிறைஞ்சிக் கைப்பணி யான் செய்யேனேல், அண்டம் பெறினும் அது வேண்டேன்” (அந்) என்று காரைக்காலம்மையார் ஓதுவது காண்க.
இதனால், பணி புரிந்த திருவருள் பெறுதற்கு வாய்ப்பளித்தல் வேண்டுமென முறையிட்டவாறாம். (10)
|