பக்கம் எண் :

1181.

     மண்ணில் நல்லவன் நல்லவர் இடத்தோர்
          வணக்கம் இன்மையன் வணங்குவன் ஆனால்
     எண்ணி நம்புடை இருஎன உரைப்பர்
          ஏன்வ ணங்கினை என்றுரைப் பாரோ
     கண்ணின் நல்லநும் கழல்தொழ இசைந்தால்
          கலக்கம் காண்பது கடன்அன்று கண்டீர்
     நண்ணி மாதவன் தொழும்ஒற்றி உடையீர்
          ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.

உரை:

      பெரிய தவத்தையுடைய திருமால் வந்து பரவும் திருவொற்றியூரை யுடைய பெருமானே, ஞான நாடகம் ஆடுகின்ற ஐயனே, மண்ணுலகில் நல்லவன் அல்லாதான் ஒருவன் நல்லவரிடஞ் சென்று வணங்குதல் இல்லாதவனாயிருந்து ஒருகால் வணங்குவானாயின், அந் நல்லாரும் அதனைப் பொருளாக எண்ணி அவனைத் தம்பால் இருக்குமாறு சொல்லுவார்களேயன்றி, ஏன் எம்மை வணங்கினாய் என்று இகழ்ந்து விலக்க மாட்டார்கள். அங்ஙனமிருக்க, எண்ணுமிடத்து மிகவும் நல்லனவாகிய உம்முடைய திருவடியைத் தொழுது வணங்க வந்தால், வந்தவனாகிய என்னை மனங்கலங்கி வருந்தச் செய்வது முறையாகாது. எ.று.

     உலகில் நற்பண்புடையோரை நல்லவர் என்றும், அப் பண்பில்லாதோரை அல்லாதவர் என்றும், அல்லவர் என்றும் கூறும் வழக்குப் பற்றித் தீப்பண்புடையவனை, “மண்ணின் அல்லவன்” என்கின்றார். நல்லவர் பெரியராயினாரை அல்லாதவரோடு ஒப்பக்கருதி வணங்காது தருக்கித் திரிவது அல்லாதான் இயல்பாதலின், “நல்லவரிடத்தோர் வணக்கம் இன்மையன்” எனவும், அவன் வணங்குவதாகிய நற்பண்பு ஒருகால் அவன்பால் காணப்படுமாயின், அவனை விலகி நின்றோரும் விரும்பித் தம்மிடம் அருகிருக்கச் செய்வர் என்பதுபற்றி, “வணங்குவன் ஆனால் எண்ணி நம்புடை இரு என உரைப்பர்” என்றும், வணங்காதவன் வணக்கத்தில் யாதானுமொரு குறிப்பிருக்குமென்று எண்ணினும் வணங்குதல் வேண்டா என வாய்விட்டுரைத்து விலக்குவது உலகியலன்மையின், “ஏன் வணங்கினை என்றுரைப்பாரோ” என்றும் எடுத்துரைக்கின்றார். சொல் வணக்கந்தான் விலக்குதற் கிடமாகுமேயன்றி மெய்வணக்கம் மறாது ஏற்றற் கிடமாதல்பற்றி இவ்வாறு கூறுகின்றார். எண்ணுமிடத்து எத்தகைய வணக்கமும் உனக்கு ஏற்கத் தக்கதாய், நலம் பயப்பதாகலின், “கண்ணின் நல்ல நும் கழல்” என்று சிறப்பித்து, எனது வணக்கத்தையும் வழிபாட்டையும் ஆராய்தலின்றி ஏற்பது இறைவனாகிய உனக்குக் கடனாம் என்பார், “நும் கழல் தொழ இசைந்தால் கலக்கம் காண்பது கடன் அன்று கண்டீர்” என இயம்புகின்றார். மறுத்தவழி, மறுக்கப்பட்டார் மனம் கலக்கமுறுதலின், மறுப்பது நன்றன்று என்றற்குக் “கலக்கம் காண்பது கடன் அன்று” என யாப்புறுகின்றார். “மாதவன் நண்ணித் தொழும் ஒற்றி”யென இயைக்க. மாதவன் - திருமால்.

     இதனால், பொல்லாதவனாயினும் என் வழிபாட்டை ஏற்று அருளுதல் வேண்டும் என விண்ணப்பித்தவாறாம்.

     (11)