பக்கம் எண் :

1194.

     எனக்கு நீர்இங்கோர் ஆண்டைஅல் லீரோ
          என்னை வஞ்சகர் யாவருங் கூடிக்
     கனக்கும் வன்பவக் கடலிடை வீழ்த்தக்
          கண்டி ருத்தலோ கடன்உமக் கெளியேன்
     தனக்கு மற்றொரு சார்பிருந் திடுமேல்
          தயவு செய்திடத் தக்கதன் றிலைகாண்
     மனக்கு நல்லவர் வாழ்ஒற்றி உடையீர்
          வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.

உரை:

      மனத்தால் நல்லவர் வாழ்கின்ற திருவொற்றியூரை யுடையவரே, கொடையால் வளமான கையையுடைய பெருமானே, இவ்வுலகில் எனக்கு நீர் ஆண்டவனன்றோ? வஞ்சம் புரிவோர் பலரும் தம்மிற் கூடிக் கொண்டு மிகுகின்ற வலிய பிறவிக் கடலில் வீழ்த்த முயல்வது கண்டும் வாளா இருத்தல் உமக்கு முறையாகுமா? எளியனாகிய எனக்கு நின்னினும் வேறு துணையிருக்கு மாயின், நீ அருள்புரிவது தக்கது அன்று; ஆனால் எனக்கு வேறு சார்பில்லை. எ.று.

      மனத்துக்கு, மனக்கு எனச் சாரியை யின்றி வந்தது. ஆண்ட ஐ என்பது “ஆண்டை” யென வந்தது. ஐ - தலைவன் என்னும் பொருட்டு. வஞ்சம் புரியும் பொறிபுலக் குற்றங்களை “வஞ்சகர்” என உருவகம் செய்கின்றார். அவை உயிர்க்கு அறிவும் செயலும் உதவுவன போல, மேலும் பிறவிக் கேதுவாவனவற்றையும் உண்டுபண்ணி வஞ்சம் புரிதலின், “வஞ்சகர் யாவரும் கூடி வன்பவக் கடலில் வீழ்த்துகின்றனர்” என உரைக்கின்றார். பவம் - பிறப்பு. பிறவிக் கேதுவாவன மேன்மேலும் பெருகிய வண்ணமிருத்தலின் “கனக்கும்பவக் கடல்” எனவும், அவை தமது காரியமாகிய பிறவியைக் கூட்டாது கழிதல் இன்மையின், “வன்பவம்” எனவும், உரைக்கின்றார். இவை யாவும் இறைவன் திருவருளறிய நிகழ்வதனால், “வீழ்த்தக் கண்டிருத்தலோ கடன்” என விளம்புகின்றார். தமக்கு அத் திருவருட் சார்பு தவிரப் பிறிதொரு சார்பு மில்லை யென்பதுணர்த்துதற்கு, “எளியேன் தனக்கு மற்றொரு சார்பிருந்திடுமேல் தயவு செய்திடல் தக்கது அன்று” எனவும், அது தான் இல்லையென வற்புறுத்தற்கு “இலை” எனவும் இசைக்கின்றார். வேறு சார்பு என்பது அவாய் நிலை.

      இதனால், வேறு சார்பின்மை கண்டு மருண்டு விண்ணப்பித்தவாறாம்.

     (2)