பக்கம் எண் :

1195.

     எஞ்சல் இல்லதோர் காமமாம் கடல்ஆழ்ந்
          திளைக்கின் றேன்இனி என்செய்வன் அடியேன்
     தஞ்சம் என்றும திணைமலர் அடிக்கே
          சரண்பு குந்தனன் தயவுசெய் வீரேல்
     வஞ்ச வாழ்க்கையாம் திமிங்கிலம் எனுமீன்
          வாரிக் கொண்டெனை வாய்மடுத் திடுங்காண்
     மஞ்ச ளாவிய பொழில்ஒற்றி உடையீர்
          வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.

உரை:

      மேகம் தவழ்கின்ற சோலைகள் சூழ்ந்த திருவொற்றியூரை யுடையவரே, கொடையால் வளவிய கையை யுடைய பெருமானே, குறைதலில்லாத காம வேட்கையென்னும் கடலில் ஆழ்ந்து மனம் சோர்கின்ற யான், இப்பொழுது செய்வதறிகிலேன்; அடியவனாகிய யான் உமது இரண்டாகிய திருவடிகட்கே தஞ்சம் எனப் புகலடைந்தேனாதலால், எனக்கு அருள் செய்யாவிடின், பிரபஞ்ச வாழ்க்கையாகிய திமிங்கிலம் என்னும் மீன் என்னைத் தன் வாயிலிட்டு விழுங்கிவிடுமென மருளுகின்றேன்; அருள் விளக்கம் தந்தருள்க. எ.று.

     மஞ்சு - பனி, மேகம், முற்றவும் கடியும் குற்றமாகாமையின், “எஞ்சல் இல்லதோர் காமம்” என்றும், அது விளைவிக்கும் துன்பம் கடல் போற் பெருகித் தோன்றுதலின், “காமமாம் கடல்” என்றும் கூறுகின்றார். எதிர்த்து நீந்துதலின் அருமை கண்டு அயர்க்கின்றாராகலின், “ஆழ்ந்து இளைக்கின்றேன், இனி என் செய்தேன்” என வருந்துகிறார். இந்நிலையில் தமக்குப் புணையாய்த் துணை செய்வது இறைவனுடைய இணையார் திருவடியே எனத் தெளிகின்றாராதலின், “தஞ்ச மென்றுமது இணையடி மலர்க்கே சரண் புகுந்தனன்” எனச் சாற்றுகின்றார். வஞ்ச வாழ்க்கை -பிரபஞ்ச வாழ்க்கை. பிரபஞ்சம் வஞ்சம் என வந்தது. “மாயையின் உள்ள வஞ்சம் வருவது போவதாகும்” (சித்தி - சுபக்) என்றாற் போல. திமிங்கலம் - ஆழ்கடலில் வாழும் ஒருவகைப் பெருமீன், வாய் மடுத்தல் - விழுங்குதல். விதி விலக்கின்றி ஒருசேர உட்கொள்வதனை, “வாரி வாய் மடுத்தல்” என்கின்றார்.

     இதனால், மண்ணக வாழ்க்கைக்கு ஏதுவாகிய காம வேட்கையில் பெரிதாம் தன்மையும் அதனால் விளையும் மண்ணக வாழ்வின் கொடுமையும் எடுத்துரைத்தவாறாம்.

     (3)