பக்கம் எண் :

1197.

     காமம் என்னும்ஓர் காவலில் உழன்றே
          கலுழ்கின் றேன்ஒரு களைகணும் அறியேன்
     சேம நல்லருட் பதம்பெறுந் தொண்டர்
          சேர்ந்த நாட்டகம் சேர்வுற விழைந்தேன்
     ஏமம் உற்றிடும் எனைவிடு விப்பார்
          இல்லை என்செய்வன் யாரினும் சிறியேன்
     வாம மாதராள் மருவொற்றி உடையீர்
          வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.

உரை:

      அழகிய காதல் மடந்தையாகிய உமாதேவியோடு கூடியிருக்கும் திருவொற்றியூரை யுடையவரே, அருட் கொடையால் வளவிய கையை யுடையவரே, எனக்குக் கண்மணி போன்றவரே, காம விச்சையெனப்படும் காவலகத்திற் சிறைப்பட்டு வருந்திப் புலம்புகின்றேனாதலால், வேறு களைகணாவாரைக் காணேனாகின்றேன்; சேமம் தருவதாகிய நல்ல திருவருள் பெற்ற தொண்டர்கள் வாழும் நாட்டைச் சென்று சேர்தற்கு விரும்பி மயங்கித் தவிக்கும் என்னை, மீட்பித்து விடுதலை வழங்குபவர் இங்கில்லை; யாவரினும் சிறுமையுடையவனாதலால், யான் என்ன செய்வேன்? இம் மருட்சி நீங்க அருள் புரிக. எ.று.

     வாம மாதராள் - இடப்பக்கத் துறையும் உமைநங்கை, வாமம் - அழகுமாம். காமம் மீதூர்கின்ற காலையில், வேறெங்கணும் செல்லாமல், கருத்துத் தடைப்பட்டு, அக்காம உணர்வெல்லைக் குள்ளேயே கட்டுண்டு நிற்றலின், “காமமென்னும் ஓர் காவல் இல்” என்று உரைக்கின்றார். காவல் இல் - காவலையுடைய. சிறை வீடு. சிறைப்பட்டவர், புறம் போக வழியின்றி அதற்குள்ளேயே அலமந்து வருந்துவது பற்றிக், “காவல் இல் உழந்து கலுழ்கின்றேன்” எனவும், சிறையின் நீக்கித் திருவருள் இன்பவாழ்வில் எய்துவிக்கும் துணையாவார் ஒருவரையும் பெற்றிலேன் என்று வருந்துவாராய், “ஒரு களைகணும் அறியேன்” எனவும் கூறுகின்றார். கலுழ்தல் - கண்ணீர் விட்டழுதல். களைகண் - கண்ணீரைத் துடைத்து ஆதரவும் துணையும் புரிபவர். சேமம் - நற்காப்பு. சேமமாகிய பதம் நல்லருட் பதம் என இயையும். அருட்பதம்-திருவருள் இன்பநிலை. இந்த அருள் இன்ப நிலை பொருந்திய நாடு மெய்த் தொண்டர்களாகிய ஞானவான்கள் உறையும் ஞான இன்பத் திருநாடாதலின், அதனை “அருட் பதம் பெறுந் தொண்டர் சேர்ந்த நாடு” என்றும், அதன்கட் சென்று சேர்தல் வேண்டுமென விழைகின்றாராதலால், “நாட்டகம் சேர்வுற விழைந்தேன்” என்றும் செப்புகின்றார். ஏமம் - ஈண்டு விருப்பத்தாலுளதாகும் மயக்கத்தின் மேற்று. மயங்கி வருந்தும் எனக்கு சிவஞானம் நல்கிக் காமச்சிறையினின்றும் விடுவித்துக் கைகொடுக்கும் பெருமக்கள் யாருமில்லை யென்பாராய், “ஏமம் உற்றிடும் எனை விடுவிப்பார் இல்லை” எனவும், அதற்குக் காரணம் தம்பால் உள்ள சிறுமை என்றற்கு, “யாரினும் சிறியேன்” எனவும், வேறு செயற்குரியது இல்லாமை புலப்பட “என் செய்வேன்” எனவும் தெரிவித்துக் கொள்கின்றார்.

     இதனால், காமக் காவலகத்தினின்றும் தன்னை விடுவிக்குமாறு விண்ணப்பஞ் செய்தவாறாம்.

     (5)