பக்கம் எண் :

12.

    பார்கொண்ட நடையில் வன்பசி கொண்டு வந்திரப்
        பார் முகம் பார்த்திரங்கும்
        பண்புநின் திருவடிக் கன்புநிறை யாயுளும்
        பதியு நன்னிதியு முணர்வும்
    சீர்கொண்ட நிறையுமுட் பொறையு மெய்ப்புகழும் நோய்த்
        தீமையொரு சற்று மணுகாத்
        திறமுமெய்த் திடமு நல்லிடமு நின்னடியர் புகழ்
        செப்புகின்றோ ரடைவர்காண்
    கூர்கொண்ட நெட்டிலைக் கதிர்வேலு மயிலுமொரு
        கோழியங் கொடியும் விண்ணோர்
        கோமான்றன் மகளுமொரு மாமான்றன் மகளுமால்
        கொண்ட நின் கோல மறவேன்
    தார்கொண்ட சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
        தலமோங்கு கந்த வேளே
        தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
        சண்முகத் தெய்வ மணியே.

உரை:

     பெரிய வீடுகள் நிறைந்த சென்னையிற் கந்த கோட்டத்துள் விளங்கும் கோயிலை இடமாகக் கொண்டருளும் கந்த வேளே, தண்ணிய முகத்துத் தூய மணிகளுள் சைவமணியாய்த் திகழும் ஆறுமுகங்களையுடைய தெய்வ மணியே, மண்ணக வாழ்வில் மிக்க பசியுடன் வந்து இரப்பவர் முகத்தை நோக்கி மனம் இரங்கும் பண்பும், நினது திருவடிக்கண் அன்பும், நிறைந்த வாழ்நாளும், வீடும், நன்மை செய்தற்குதவும் செல்வமும், உணர்வும், சிறப்புடைய நிறையும், உள்ளத்தால் எதையும் பொறுத்துக் கொள்ளும் பொறுமையும், நிலைத்த புகழும், நோயோ தீங்கோ ஒரு சிறிதும் அணுகாத கூறுபாடும், மெய்வன்மையும், நல்லோர் உறையும் இடமும், நினக்கு அடியார் புகழ் பேசுவோர் பெறுவார்களாக, கூரிய நீண்ட இலையையுடைய கதிர் வீசும் வேற்படையும், மயில் ஊர்தியும், ஒப்பற்ற கோழிக் கொடியும் பொருந்திய தோற்றத்தையும் தேவர் கோமான் மகளாகிய தெய்வயானையும், பெரிய மான் மகளாகிய வள்ளியும் காதல் கொண்ட நின் கோலத்தையும் நான் மறவேனாகுக. எ. று.

     தார், பெரிய மாடி வீடு. வள்ளற் பெருமான் காலத்திலேயே சென்னை நகர் உயரிய மாடங்களை யுடைய பெரிய வீடுகள் தோன்ற நின்றமை புலப்பட, “தார் கொண்ட சென்னை” என்று சிறப்பிக்கின்றார். பார் கொண்ட நடை, மண்ணியல் வாழ்வு. இதனைப் புவிநடை எனவும் வழங்குவர். இலர் பலராதலும் உடையார் சிலராதலும், வலியார் உயர்தலும் மெலியார் மெலிதலும், செல்வரைச் சிறப்பித்தலும் இல்லாரை இகழ்தலும், இல்லாதவர் உடையாரை இரத்தலும், உடையார் இல்லார்க்குதவலும் ஓரொருகால் மறுத்தலும் இவை போல்வன பிறவும் “பார் கொண்ட நடை” யாகும். வன்பசி, மிக்க பசி. பசி கொண்டு இரப்போர் முகம் பார்த்து இரங்குவது வாழும் உயிரை வாழ்விக்கும் நற்செயலாதலின் அதற்கேதுவாய பண்பை, “இரப்பார் முகம் பார்த்து இரங்கும் பண்பு” எனச் சிறப்பிக்கின்றார். உறவுடையார்பால் செய்யும் அன்பு இயல்பாய் அமைவதாகலின் அதனை விடுத்து அறிவால் தெளிந்து இறைவன் திருவடிக்கண் செய்யும் அன்பு செயற்கையாதலால் அதனை, “திருவடிக் கன்பும்” என விளங்கக் கூறுகின்றார். நிறை ஆயுள் இறையருளால் உளதாவது. மார்க்கண்டன் வரலாற்றால் இது தெளிவாகும். பதி, உறையுள்; நிதி, செல்வம். நன்னிதி என்று சிறப்பித்தது, அது நன்றியில் செல்வமாதல் கூடா தென்றற்கு. நல்லதன் நலனும் தீயதன் தீமையும் உள்ளவாறு கண்டுகொள்வது உணர்வு. புலன்கண் மேற் செல்லும் மனத்தைச் செல்லவிடாது நிறுத்தல் நிறை; அதனால் புகழும் ஞானமும் உண்டாதலின், “சீர்க்கொண்ட நிறை” எனச் சிறப்பிக்கின்றார். மிகுதியால் மிக்கது செய்யப்பட்ட விடத்து வாய் பேசாமையும் மெய்யால் ஒன்று செய்யாமையும் பொறை யாகா; உள்ளத்திற் கொள்ளாது பொறுத்தலே பொறை என்றற்கு, “உட்பொறை” எனவுரைக்கின்றார். செய்வார் மேல் நிற்பது பொய்ப் புகழ்; அவர் வாழும் உலகின்கண் நிற்பது மெய்ப் புகழ்; அதனாற்றான் “மெய்ப் புகழ்” என விளம்புகின்றார். நோயும் தீமையும் அறியாமே உறுவன வாதலின், காப்பது கருதி, “ஒரு சற்றும் அணுகாத் திறம்” என மொழிகின்றார். உடலின்கண் திடம் இல்லையாயின், நற்செயலும் நன்ஞானப் பேறும் எய்தாமை பற்றி “மெய்த்திடம்” வேண்டும் என்கின்றார். இடம், இங்கே, நல்லோர் சூழலைக் குறிக்கிறது. தம் மக்கட்கு நலம் செய்வோர்பால் பெற்றோர்க்கு உள்ளத்தில் உவகையும் உதவும் எண்ணமும் தோன்றுவது போல் இறைவன், அடியாரது புகழையோதிச் சிறப்பிப்பவர்பால் திருவுள்ளத்தில் அருளும் ஆவன நல்கும் அருட் செயலும் மேற் கொள்வானாதலால், “நின் அடியார் புகழ் செப்புகின்றார் அடைவர் காண்” என்று எடுத்துரைக்கின்றார். நின் அடியர் புகழ் பேசுவோர் பேறு அதுவாயினும், யான் நின் வேலும் மயிலும் கோழிக் கொடியும் நின் கோலமும் ஒருகாலும் மறவேன் ஆகுக என்றற்குக் “கூர்கொண்ட நெட்டிலைக் கதிர்வேலு மயிலுமொரு கோழியங்கொடியும் விண்ணோர் கோமான் மகளும் மாமான் மகளும் மால் கொண்ட நின் கோலம் மறவேன்” என்று கூறுகின்றார்.

     இதனால் முருகப் பெருமானுடைய அடியாரது புகழ் பேசுவோர் பெறும் பேறுகளைக் குறித்துரைத்தவாறாம்.

     (12)