1208. ஈன்றவனே அன்பர் இன்னுயிர்க் கின்புறும் இன்னமுதம்
போன்றவ னேசிவ ஞானிகள் உள்ளுறும் புண்ணியனே
ஆன்றவ னேஎம துள்ளும் புறம்பும் அறிந்துநின்ற
சான்றவ னேசிவ னேஒற்றி மேவிய சங்கரனே.
உரை: என்னை ஈன்று புறந்தருபவனே, அன்பர்களின் இனிய உயிர்க்கு இன்பம் அளிக்கும் அமுதம் போன்றவனே, சிவஞானச் செல்வர்களின் உள்ளத்தில் எழுந்தருளும் புண்ணியமூர்த்தியே, எல்லா நற்பண்புகளும் அமைந்தவனே, எங்கள் அகத்தும் புறத்தும் அறிந்தருளும் சான்றாயவனே, சிவபெருமானே, திருவொற்றியூரில் உள்ள சங்கரனே. எ.று.
தந்தையாய் அறிவு தந்து உயர்த்தலின் “ஈன்றவனே” என்கின்றார். ஈன்றவன், ஈண்டு தந்தை மேற்று. முன்னைப் பாட்டில் ஈன்றவன் என்றது பஞ்சாக்கினி முறைப்படி தாயின் தன்மை கொண்ட தந்தை மேல் நின்றது. இன்ப துன்பங்களை நுகர்வது உயிராதலினாலே, ஞான இன்பந் தரும் பரசிவத்தை, “அன்பர் இன்னுயிர்க்கு இன்புறும் இன்னமுதம் போன்றவனே” என்கின்றார். அன்பால் ஞானமும், ஞானத்தால் இன்பமும் விளைதலின், “அன்பர் இன்புறும் இன்னமுதம்” என்கிறார். அமுதம் பொருளாதலின், “அமுதம் போன்றவன்” என்கின்றார். அன்பும் ஞானமும் நிறைந்த சூழலில் இருந்து இன்பம் நுகர்தலின் “இன்னுயிர்” எனச் சிறப்பிக்கின்றார். சிவஞானிகளின் திருவுள்ளம் புண்ணிய உருவினதாதலால், புண்ணியப் பயனாகிய சிவபரம் பொருளைச் “சிவஞானிகள் உள்ளுறும் புண்ணியனே” என்றுரைக்கின்றார். நற்பண்புருவாய் அமைவதுபற்றி “ஆன்றவனே” என்றும், அகத்தும் புறத்தும் நிகழ்வனவற்றை உடனிருந்து காட்டியும் கண்டும் இலங்குவது பற்றி, “எமது உள்ளும் புறம்பும் அறிந்து நின்ற சான்றவனே” என்றும் புகல்கின்றார். சான்றவன் - நலம் நிறைந்தவன்; சான்றாயவன் என்றுமாம். சங்கரன் - சுகத்தைச் செய்பவன்.
இதனால், மெய்யன்பர்க்கும் சிவஞானிகட்கும் ஏனை யுயிர்கட்கும் அருளுந் திறம் கூறியவாறாம். (6)
|