1209. சங்கர னேஅர னேபர னேநற் சராசரனே
கங்கர னேமதிக் கண்ணிய னேநுதல் கண்ணினனே
நங்கர மேவிய அங்கனி போன்றருள் நாயகனே
செங்கர னேர்வண னேஒற்றி மேவிய சின்மயனே.
உரை: சங்கரனே, பரனே, நல்ல சரமும் அசரமுமாகிய பொருளே, பிரமன் தலையோட்டைக் கையில் உடையவனே, பிறைத் திங்களைக் கண்ணியாக முடியிற் சூடுபவனே, நெற்றியிற் கண்ணையுடையவனே, நமது அகங்கையிற் கொண்ட கனிபோல அருள்புரியும் தலைவனே, சிவந்த கதிர்களையுடைய செஞ்ஞாயிறு போன்ற சிவந்த மேனியை யுடையனாய்த் திருவொற்றியூரில் எழுந்தருளும் ஞானமயமானவனே. எ.று.
சுகத்தைச் செய்வதுடன் இடையூறு செய்யும் தீமையைப் போக்குவதும் செய்தலால், சங்கரனே என்றவர், அரனே என அடுத்து மொழிகின்றார். உலகுயிர்ப் பொருள்கள் சரமும் அசரமும் என இரண்டாயடங்கினும் அவற்றின் உள்ளீடாதலால் சிவனை, “நற் சராசரனே” என வுரைக்கின்றார். கம் - தலை; ஈண்டுப் பிரமன் தலையோடு; அதனைக் கையிலேந்துதல் பற்றிக் “கங்கரனே” என்கிறார். மதிக்கண்ணி - பிறைமதியாகிய கண்ணி. கண்ணி-தலையிற் சூடுவதோர் அணிவகை. நுதல் - நெற்றி, நமது கைப் போந்த கனி உண்ணப்படுவதில் தவறாமை போல நமக்குள் நல்குவதில் தவறாமை புலப்பட, “நம் கர மேவிய அங்கனி போன்றருள் நாயகனே” என நவில்கின்றார். செங்கரன் - சிவந்த கதிர்களாகிய கையை யுடைய சூரியன். சூரியன் சிவத்தின் மேனி நிறமும் ஒளியுமுடையவன். “அருக்கனாவான் அரனுருவல்லனோ” (ஆதிபு) என நாவுக்கரசர் கூறுவர். சித்துமயம், சின்மயம் என வந்தது வட நூன் மரபு. சித்து - ஞானம்.
இதனால், சிவத்தின் இயல் நலம் கூறியவாறாம். (7)
|