121. பாவவினைக் கோரிடமா மடவார் தங்கள்
பாழ்ங் குழிக்கண் வீழமனம் பற்றி யந்தோ
மாவல் வினையுடன் மெலிந்திங் குழல்கின்றே னின்
மலரடியைப் போற்றே னென்மதிதான் என்னே
தேவர் தொழும் பொருளேயென் குலத்துக் கெல்லாம்
தெய்வமே யடியருளம் செழிக்குந் தேனே
தாவகன்றோர் புகழ் தணிகை மணியே சீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
உரை: குற்றம் நீங்கிய சான்றோர் புகழும் தணிகை மணியே, சீவ சாட்சியாய் எங்கும் நிறைந்தருளும் சகச வாழ்வே, பாவச் செயல்கட்கு ஒப்பரிய இடமாகவுள்ள மகளிரின் இன்பமாகிய பாழ்த்த குழியின்கண் வீழ்த்தும் மனத்தைத் தடுத்து நிறுத்தி வேறு உள்ள வல்வினைகளைச் செய்து உடம்பு மெலிந்து வருந்துகின்றேனாதலால் உனது பூ நிகர்க்கும் திருவடியைப் போற்றா தொழிந்தேன்; எனது அறிவை என்னென்பது? மக்களோடு தேவர்கள் தொழுகின்ற பரம்பொருளே, என் குலத்தோர்க்கெல்லாம் தெய்வமாய்த் திகழ்கின்றவனே, திருவடி பரவும் உயர்ந்தோர் உள்ளம் ஞானவளம் பெருகுமாறு ஊறும் தேனாயவனே, உரைத்தருள்க. எ. று.
தாவு - குற்றம். “தாவில் கொள்கைத் தந்தொழில் முடிமார்” (முருகு) எனச் சான்றோர் வழங்குவது காண்க. குற்றமும் குணமும் ஒருங்குடையவர் மக்களாதலால், குற்றத்தின் நீங்கிய சான்றோரைத் “தாவகன்றோர்” என்று குறிக்கின்றார். காம வின்பம் காரணமாகக் கொலையும் புலையும் பிறவுமாகிய மாபாவங்கள் உண்டாதல் பற்றிப் “பாவவினைக் கோரிடமாம் மகளிர் தங்கள் பாழ்ங்குழி” என்கின்றார். மகளிர் கூட்டத்தால் பெறப்படும் காம வின்ப நுகர்ச்சியை, “மகளிர் தங்கள் பாழ்ங்குழி” எனப் பழிக்கின்றார். பாழ் செய்யும் குழி, பாழ்ங்குழி. பாழ் செய்யும் குழியாயினும் இன்பம் சுரந்து மக்கட் பெருக்கத்துக்கு ஏதுவாதலின், மனம் மக்களறிவை மயக்கி அதன்கண் வீழ்த்துவது பற்றி, “மனம் வீழ” என்றும், அறிவு நலத்தால் அம்மனத்தைப் பற்றி நிறுத்தினமை புலப்பட, “மனம் பற்றி” என்றும், ஏனை நினைவு சொல் செயல் வகைகளால் வினை பல செய்தமையின், “மாவல்வினை” என்றும் இசைக்கின்றார். பயன் நுகர்ந்து கழியுமளவும் செய்த வுயிரை விடாத இயல்பினையுடைய தாகையால் “வல்வினை” எனக் குறிக்கின்றார். வினை செய்தற்கும், வினைப்பயனை நுகர்தற்கும் கருவியாய் நின்று நாளடைவில் தேய்ந்து மெலிவதால் “உடல் மெலிந்து” எனவும், மெலிவு போக்கற்கு ஆவன நினைந்து தேடி வருந்துவது தோன்ற “இங்கு உடல் மெலிந்து உழல்கின்றேன்” எனவும், அதனால் நினைந்து போற்றி வழிபடுதற்குரிய நினது திருவடியைப் போற்றாமல் ஒழிந்தேன் என்பாராய், “நின் மலரடியைப் போற்றேன்” எனவும், உடல் மெலிவு ஓம்புதற்குச் சென்ற அறிவு, உயிர்க்கு உறுதி நல்கும் திருவடியை நினையா தொழிந்தமைக்கு யான் என்ன செய்வேன் என்பாராய், “என் மதிதான் என்னே” எனவும் விளம்புகின்றார். நல்வினை செய்து தேவராயினோரும் தொழுகின்றாரெனின், நல்லறிவுடைய மக்கள் தொழுவது சொல்லாமலே விளங்குதலால், “தேவர் தொழும் பொருளே” என்றதற்கு மக்களுடன் தேவர் தொழும் பொருளே என்று பொருள் கூறினாம். தேவர்களும் மக்களும் உணர்ந்து தொழ நிற்பது பரம்பொருளாதல் பற்றித் தொழப்படும் பொருள் பரம்பொரு ளெனக் கொண்டாம். குலத்துக் கெல்லாம் தெய்வம், குலதெய்வம். குலம்-குடி; ஒரு சாதியிற் பிறந்தோருள் நிலவும் குடிவகை. அடியவர்-இறைவன் திருவடியை மனத்தகத்தே கொண்டு நினைந்து வழிபடும் பெரியவர்கள். நினைக்குந் தோறும் நினைப்பவர் நெஞ்சினுள் தேனூறி உடற்கும் வலிமை யூட்டுதலின், “அடியர் உளம் செழிக்கும் தேன்” என வுரைக்கின்றார்.
இதனால் காமவிச்சை யுற்றோடும் மனத்தைத் திருப்பி வேறு நெறியில் செலுத்தினும் வேறாய வினைகளைச் செய்துற்ற மெலிவால் இறைவன் திருவடியை நினையா தொழிந்தமைக்கு வருந்தி முறையிடுமாறு காணலாம். (19)
|