பக்கம் எண் :

1211.

     புண்ணிய னேஎமைப் போல்வார்க்கும் இன்பப் பொருள்அளிக்கும்
     திண்ணிய னேநற் சிவஞான நெஞ்சில் தெளிந்த அருள்
     அண்ணிய னேகங்கை ஆறமர் வேணியில் ஆர்ந்தமதிக்
     கண்ணிய னேபற் பலவாகும் அண்டங்கள் கண்டவனே.

உரை:

      புண்ணிய வடிவானவனே, எம்மைப் போன்றவர்க்கும் இன்பமாகிய ஞானப்பொருளை நல்கும் திண்மை வாய்ந்தவனே, நல்ல சிவஞான வொளி நிறைந்த நெஞ்சின்கண் தெளிவெய்தியவர்க்கு மிக்க நெருக்கமாய் உள்ளவனே, கங்கையாறு தங்கியிருக்கின்ற சடை முடியில் பிறைத்திங்களைக் கண்ணியாகக் கொண்டவனே, பற்பலவாகவுள்ள அண்டங்கள் அத்தனையும் படைத்தருளிய பெருமானே, அருள் நல்குக. எ.று.

     புண்ணியத்தின் உருவாக விளங்குதல்பற்றிப் “புண்ணியன்” எனப் புகழ்கின்றார்; வடமொழியார் புண்ணியமூர்த்தி யென்பர். குற்றம் மிகுதியும் குணம் சிறிதுமுடைய மக்கள் என்றற்கு “எமைப் போல்வார்” எனவும், அப் பெற்றியோரும் குற்றத் தினீங்கிக் குணம் பெரிதுடையராதல் வேண்டுமென்று நினைப்பது திண்ணிய நெஞ்சமும் பேரருட் பாங்கும் உடையார்க்கே அமைவதாகலின், “இன்பப் பொருளளிக்கும் திண்ணியனே” எனவும் பராவுகின்றார். சிவபோக நுகர்ச்சிக்குரிய ஞானமுதிர்ச்சியை “நற்சிவஞான” மெனவும், அதுதானும் ஒளிமயமாய் நெஞ்சின்கண் நிலவுவதாதல் பற்றி, “நற் சிவஞான நெஞ்சின்கண்” எனவும், நெஞ்சினால் தெளிவெய்தியவர்க்கு மிகவும் அணிமையில் இருந்து அருள் வழங்கும் அன்புத்திறத்தை விதந்து, “தெளிந்த வருள் அண்ணியனே” எனவும் உரைக்கின்றார். ஒருபாற் கங்கையாறும், அதன் கரைத் தோணி போற் பிறைமதியும் இருந்து அழகு செய்தலின், “கங்கை யாறமர் வேணியில் ஆர்ந்த மதிக் கண்ணியனே” என்றும், பல்லுலகுகளைப் படைத்தளித்தழிக்கும் மும்மூர்த்திக ளாயதுபோலப் பரம்பொருளாய் நின்று எண்ணரிய பல அண்டங்களைத் தோற்றுவித்த முதன்மை விளங்கப் “பற்பல வாகும் அண்டங்கள் கண்டவனே” என்றும் இசைக்கின்றார். கண்டவன் - தோற்றுவித்தவன், “முழுவதும் கண்டவனைப் படைத்தான்” (சதக) என மணிவாசகர் உரைப்பது காண்க. ஒரு காலத்தே ஞாயிறு மாத்திரம் ஒரு பெரு நெருப்புருண்டையாய் எரிந்து கொண்டிருப்ப, அதனிடத்தே இன்று நாம் காணவும் காணாமையும் நிலவும் பலகோடி யண்டங்கள் தோன்றின என இந்நாளைய விஞ்ஞானம் கூறுமாயினும், ஏன் தோன்றின என எழும் வினாவிற்கு விடை கூறாமாட்டா தொழிகின்றது; தோன்றினதற்குக் காரணம் கண்ட தத்துவக் காட்சி பரம்பொருளின் பேரருள் என்று சொல்லாமற் சொல்லுவதை நமது நாட்டுப் பெருமக்கள் வெளிப்பட விளம்புகின்றனர்.

      இதனால், இறைவன் படைப்பிற்கேதுவாகிய பேரருட்டிறம் பேசியவாறாம்.

     (9)