122. கன்னியர்தம் மார்பிடங் கொண்டலைக்கும் புன்சீழ்க்
கட்டிகளைக் கருதிமனம் சுலங்கி வீணே
அன்னியனா யலைகின்றேன் மயக்கம் நீக்கி
அடிமைகொள லாகாதோ அருட்பொற் குன்றே
சென்னிமிசைக் கங்கைவைத்தோ னரிதிற் பெற்ற
செல்வமே யென்புருக்கும் தேனே யெங்கும்
தன்னியல்கொண் டுறுந்தணிகை மணியே சீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
உரை: செயற்கைகளாற் பொற் பழியாமல் எவ்விடத்தும் தன் இயற்கை யெழில் கொண்டு மேன்மை யுறும் தணிகை மணியே, சீவ சாட்சியாய் எங்கும் நிறைந்தருளும் சகச வாழ்வே, அருட் குணமாகிய அழகிய குன்றமே, முடிமேற் கங்கையை வைத்துள்ள சிவபிரான் அருமையாகப் பெற்ற செல்வ மகனே, எலும்பையுருக்கும் தேன் போன்றவனே, கன்னிமை நீங்காத இளமகளிரின் மார்பை யிடமாகக் கொண்டெழுந்து பருமை யுற்று உள்ளே புல்லிய சீழ் கொண்டு வருத்தும் கட்டி போன்ற கொங்கைகளைப் பார்த்து இன்பப் பொருளென மனநிலை கலங்கி வீணாசை யுற்று நல்லவர்க்கு அன்னியனாய் அலைந்து திரிகின்ற எனது மயக்கத்தைப் போக்கி என்னை உனக்கு அடிமை கொள்வது நன்றாகாதோ, உரைத்தருள்க, எ. று.
தாம் வாழும் இடங்களையும் பயன் கொள்ளும் பொருள்களையும் அழகமையச் செய்து கொள்வது மக்களியல்பாயினும், செயற்கை வகையால் அமைவன பொற்புக் குன்றிக் கெடுவதும், இயற்கையாய் அமையும் அழகு நிலை பெறுவதும் நோக்கி, “எங்கும் தன்னியல் கொண்டு உறும் தணிகை” எனச் சிறப்பிக்கின்றார். அருளே யுருவாகிய முருகப் பெருமான் செம்மை நிறமுடையனாவது பற்றி, “அருட் பொற் குன்றே” என்று புகழ்கின்றார். பகீரதன் பொருட்டு வந்த கங்கையாற்றுப் பெருக்கைத் தன் முடிச் சடையில் அடக்கி யாண்ட திறம் குறித்துச் சிவபிரானைச் “சென்னி மிசைக் கங்கைவைத்தோன்” என்றும், தீவிழியில் நெருப்புப் பொறியாய்த் தோற்றுவித்து வானத்திலும் காற்றிலும் நிலவுவித்துச் சரவணப் பொய்கை நீரில் தவழ்வித்து அறுமுகக் கடவுளாய் நிலத்தில் விளங்கச் செய்தமையின் சிவன் “அரிதிற் பெற்ற செல்வமே” என்றும் தெரிவிக்கின்றார். மக்கட் பேறும் செல்வ வகைகளில் ஒன்றென்ப. அன்பிருத்தி என்புருக்கி இன்பளிக்கும் தேன் எனப் பரவப்படும் பான்மை பற்றி, “என்பு உருக்கும் தேனே” எனப் போற்றுகின்றார். கன்னித் தன்மை நீங்காத மகளிரைக் கன்னியர் என்பர். கன்னிமை கனியும் பருவத்தே அவர்தம் மார்பின்கண் எழுந்து சிறக்கும் கொங்கைகள் புறத்தே பொலிவும் ஒளியும் உருவும் திருவுமுற்று விளங்கினும் உள்ளே இளகிய வெண்டசையும் குருதியும் மென்னரம்பும் நிறைந்து புல்லிய சீழ் பொருந்திய கட்டி போலத் தோன்றுதலை எண்ணிக் “கன்னியர் தம் மார்பிடங் கொண்டு அலைக்கும் புன்சீழ்க் கட்டிகள்” என்று கூறுகின்றார். உள்ளுறை நோக்காது புறக்காட்சியில் தோய்ந்து அறிவு அறை போவதை யுணர்த்துதற்குப் “புன்சீழ்க் கட்டிகளைக்கருதி” எனவும், ஆசை மேலிட்டு மனத்திண்மை யிழந்து வீணாசை கொண்டமை புலப்பட, “மனம் கலங்கி வீணே” எனவும், என் நிலை கண்ட நன்மக்கள் வெறுப்புற்று விலக யான் வேறாய் நாய் போல் அலைந்தேன் என்பாராய், “அன்னியனாய் அலைகின்றேன்” எனவும் இயம்புகின்றார். இதற்கெல்லாம் காரணம் என் அறிவிற் படிந்துள்ள மயக்கமாகும்; அதனை நீக்கித் தெளிவிக்கின், யான் தெளிவுற்றுத் திருவடிக் கன்பனாவேன்; அது செய்து என்னை அடிமை கொள்ளல் வேண்டும் என முறையிடுவாராய், “மயக்கம் நீக்கி அடிமை கொளல் ஆகாதோ” என்று வேண்டுகின்றார். “திருத்தித் திருத்தி வந்தென் சிந்தை யிடங்கொள் கயிலாயா” எனச் சுந்தரமூர்த்திகள் உரைப்பதால், மயக்கம் நீக்கி யடிமை கொள்ளல் இறைவனுக்கு இயல்பெனக் காணலாம்.
இதனாற் காம வேட்கையால் மயக்குற்று மனநிலை கலங்கி வீணில் அலையும் என்னை மயக்கம் நீக்கித் தெளிவித்து அடிமை கொள்ளல் வேண்டுமென முறையிடுமாறு காணலாம். (20)
|