1222. நீதியிலார் வாயிலிடை நின்றலைந்த நெஞ்சகனேன்
சோதிஎலாம் சூழ்ந்தபரஞ் சோதியே செஞ்சடைமேல்
பாதிநிலா ஓங்கும் பரமேநீ ஒற்றிநகர்
வீதிஉலா வந்தஎழில் மெய்குளிரக் கண்டிலனே.
உரை: நீதி யுணர்வில்லாத கீழ்மக்கள் மனைவாயிலை யடைந்து நின்று நின்றலைந்து திரிந்து வருந்திய நெஞ்சினையுடைய யான், ஒளிப் பொருள் எனப்படுவன யாவும் சூழ விளங்கும் பரவொளிப் பொருளே, சிவந்த சடைமேல் பிறைத்திங்கள் இருந்தொளிரும் பரம்பொருளே, நீ திருவொற்றி யூரின்கண் வீதியில் திருவுலா வந்த அழகை உடலும் உள்ளமும் குளிர்ச்சியுறக் காணாதொழிந்தமைக்கு வருந்துகிறேன். எ.று.
தம்பால் வந்தார் வரவின் குறிப்பையும் அவரது தகுதியையும் தமது தகுதியையும் நோக்கித் தருவன செய்வது நீதி யுணர்வுடையார் செயலாகும். அஃது இல்லாதார் மனைவாயிலை யடைவது இன்னலையே விளைவிக்கும் இயல்பிற்றாதலால், “நீதியில்லார் வாயிலிடை நின்றலைந்த நெஞ்சகனேன்” என வுரைக்கின்றார். நெஞ்சன் எனற்பாலது நெஞ்சகன் என வந்தது. வஞ்சன் வஞ்சகன் என வழங்குதல் போல. ஞாயிறு முதலிய ஒளிப்பொருள்கள் பலவும் தன்னைச் சூழவரத் தான் அவற்றுள் ஒன்றாயும் வேறாயும் அவற்றிற் கெல்லாம் பரமாயும் விளங்குதலாற் சிவனை “சோதி யெல்லாம் சூழ்ந்த பரஞ்சோதியே” எனச் சொல்லுகின்றார். ஞானசம்பந்தர், “சோதி யந்தமாயினாய் சோதி யுள்ளோர் சோதியாய்” (ஆலவா) என்பது காண்க. பிறைத் திங்களை இனிது புலப்படுத்தற்கு “பாதிநிலா” என்றும், அதனைத் தன் முடிச்சடைமேல் கொண்டமையின், “செஞ்சடை மேற் பாதி நிலா வோங்கும் பரமே” என்றும் பகர்கின்றார். திங்களை முடியிற் கொண்டானயினும் சிவன் பரம்பொருளே என வற்புறுத்தற்கு “பரமே” என்கின்றார். மனம் குளிர்ந்தாலன்றி மெய் குளிர்ப் பெய்தாகலின் மெய் குளிர என்றதற்கு, உடலேயன்றி உள்ளமும் குளிர எனப் பொருள் கூறப்பட்டது.
இதனால், திருவொற்றியூர்த் தியாகப்பெருமான் திருவீதி யுலாக் காட்சி பெறாமைக்கு வருந்தியவாறாம். (10)
|