பக்கம் எண் :

62. நெஞ்சு நிலைக்கிரங்கல்

திருவொற்றியூர்

    அஃதாவது வன்மையின்றி உறுதிப்பொருளின் நினைவின்றிக் காம வேட்கைக்கு இரையாகிய நெஞ்சின் நிலைமையை இறைவன்பால் எடுத்தோதி இரங்குவதாம். இதன்கண், காம விச்சையால் விளைகின்ற தீமைகளை நினைந்து அதன்கண் வீழ்ந்தழுந்தும் மன நிலையை எண்ணிச் செய்தற்கொன்றும் இயலாதமைக்கு வருந்துவது காணலாம்.

கட்டளைக் கலித்துறை

1243.

     ஆளாக நின்பொன் அடிக்கன்பு செய்திட ஐயநெடு
     நாளாக இச்சைஉண் டென்னைசெய் கேன்கொடு நங்கையர்தம்
     மாளா மயல்சண்ட மாருதத் தால்மன வாசிஎன்சொல்
     கேளா தலைகின்ற தால்ஒற்றி மேவும் கிளர்ஒளியே.

உரை:

      திருவொற்றியூரில் எழுந்தருளும் அருளொளி திகழும் சோதியே, ஐயனே, நினது அழகிய திருவடிக்கு அன்புத் தொண்டு புரிய வேண்டுமென நெடுநாட்களாக நெஞ்சில் ஆர்வம் எழுவதுண்டு; எனினும் கொடிய நினைவுகளையுடைய மகளிரால் உளதாய் என்னின் நீங்காமல் உறையும் மயக்கமாகிய சுழற்காற்றினால் மனமாகிய குதிரை என் சொல்லைக் காதில் வாங்காமல் பலவழியால் அலைகின்றது; இதற்கு யான் செய்யக்கடவது யாது? எ.று.

     சிவபரம்பொருளைச் சான்றோர் ஒளியுருவாகவே போற்றிப் புகழ்வது பற்றி, “ஒற்றி மேவும் கிளர் ஒளியே” என்று கிளந்துரைக்கின்றார். “பாதி பெண்ணுருவாகிப் பரஞ்சுடர்ச் சோதியுட் சோதியாய் நின்ற சோதியே” (சித்தந்) என நாவுக்கரசரும், “சுடர் விட்டுளன் எங்கள் சோதி” (பாசு) என ஞானசம்பந்தரும், “சோதியிற் சோதி யெம்மான்” (ஆருர்) என நம்பியாரூரரும், “மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச் சுடரே” (சிவபு) என மணிவாசகரும் கூறுவன காண்க. இந்நெறி பற்றியே வடலூர் வள்ளலும் சிவபிரானை “அருட் பெருஞ் சோதி” எனப் பராவுகின்றார். பொன்னடி - பொன்னிறத் திருவடி; அழகிய திருவடி யெனினுமாம். அறிவறிந்த நாள் முதலே உன் திருவடிக் கன்பு செய்யும் விருப்புடையேன் என்பார், “அடிக்கு அன்பு செய்திட நெடுநாட்களாக இச்சையுண்டு” என்றும், அவ்விச்சை காளைப் பருவம் எய்தியதும் மங்கையர் மயக்கத்தால் பிறழ்ந்தொழிந்தது என்பாராய், “என்னை செய்கேன்” என்றும் வருந்துகிறார். சேவடிக் கன்பு செய்யும் செந்நெறிக்கண் சென்ற இச்சை மகளிர் விளைவிக்கும் காம மயக்கம் என்னும் குறைக்காற்றால் அலைப்புண்டு நெறி பிறழ்ந்து கோடிற்றென்பார், “மங்கையர்தம் மயற் சண்ட மாருதத்தால்” நெறி மாறியது என்கின்றார். நன்னெறியினின்றும் பிறழ்விக்கும் காமவேட்கையைத் தோற்றுவிக்கும் மகளிரை, “கொடும் நங்கையர்” எனவும், அவரது வேட்கை முற்றவும் அழிக்கப்படும் பான்மைத்தன்று என்பார், “மாளா மயல்” எனவும், அதனது பேராற்றலைப் புலப்படுத்தற்கு, “மயற் சண்டமாருதம்” எனவும், இயம்புகின்றார். சண்டமாருதம் - சூறாவளி. சூறை வாய்ப்பட்ட குதிரை வாதுவன் சொல்வழி நில்லாது அவனையும் வீழ்த்திவிட்டோடுவது போல, மனமாகிய குதிரை காமவேட்கையாகிய குறைக்காற்றால் என் வழி நில்லாது புலன் வழியோடி யலைந்து துன்பக் குழியில் வீழ்த்துகிறது என்பாராய், “மனவாசி என் சொல் கேளா தலைகின்றது” என வுரைக்கின்றார். வாசி - குதிரை. ஆல் - அசை.

     இதனால், செம்மை நெறி செல்ல விருப்பெழினும் காமவிச்சை மனத்தை மயக்கி அலைக்கும் திறம் தெரிவித்தவாறாம்.

     (1)