பக்கம் எண் :

1245.

     மாயா மனம்எவ் வகைஉரைத் தாலும் மடந்தையர்பால்
     ஓயாது செல்கின்ற தென்னைசெய் கேன்தமை உற்றதொரு
     நாயாகி னும்கை விடார்உல கோர்உனை நான்அடுத்தேன்
     நீயாகி லுஞ்சற் றிரங்குகண் டாய்ஒற்றி நின்மலனே.

உரை:

      திருவொற்றியூரில் கோயில் கொண்டருளும் தூயவனே, மாயா காரியப் பொருளான மனமென்ற என் உட்கரணம் எவ்வகையால் யாது சொன்னாலும் நிற்ப நில்லாமல் மகளிரை நாடியே ஓய்வின்றி ஓடிய வண்ணமிருக்கிறது; இதனைத் தடுத்து நிறுத்தும் வன்மை யில்லாமையால் யான் என்ன செயவேன்? தம்மையடைந்தது ஒரு நாய் என்றாலும், உலகோர் அதனைக் கைவிடுவதில்லை; அவ்வாறே நான் உன் திருவடியைச் சேர்ந்துள்ளேனாதலால், நீயேனும் என்பால் இரக்கம் கொண்டு அருள் செய்க. எ.று.

     நின்மலன் - மலத்தாற் பற்றப்படாத தூயவன்; இதனைச் சிவாகமங்கள், “இயல்பாகவே பாசங்களின் நீங்கினவன்” என இறைவன் இயல்பை எடுத்துரைக்கின்றன. மாயா மனம் - மாயையினின்று ஆக்கப்பட்ட மனம்; தன்னை யுடையவனுக்கு உள்ள நாளும் துன்ப நினைவுகளைத் தந்து வருத்தியும் கெடாத மனம் எனினும் பொருந்தும். இன்சொற் கூறியும் வன்சொற்களாற் கடிந்துரைத்தும் கேளாமை தோன்ற, “எவ்வகை யுரைத்தாலும்” என இயம்புகின்றார். மடந்தை - இளமங்கையர்; பெண்பாற் பெயர் என்பர் அடியார்க்கு நல்லார் (சிலப். 16 : 2). ஓயாமை, ஈண்டு ஒழியாமை குறித்தது. மனம் தம் வயமின்றி ஓடுதலாற் கையறவு படுமாறு புலப்பட, “என்னை செய்கேன்” என இரங்குகின்றார். உசாத் துணையாகாமையின், நாய் இங்கே இழித்துரைக்கப்படுகிறது. “தம் காலைச் சுற்றிய நாயைக் கைவிடலாகாது” என்ற உலகுரையை யுட்கொண்டு, “உற்றது ஒரு நாயாகிலும் கைவிடார் உலகோர்” என உரைக்கின்றார். என்னைக் கைவிடாமல் பற்றி என் மனம் என் வயமே நிற்க அருளுதல் வேண்டும் மென்பது கருத்தாதலால், நீயாகிலும் சற்று இரங்கு கண்டாய்” என இயம்புகின்றார்.

     இதனால், உலக முறைப்படி என்பால் இறங்கி என் மனம் என் வசம் நிற்க அருள் புரிக என முறையிட்டவாறாம்.

     (3)