1249. மாணாத என்நெஞ்சம் வல்நஞ் சனைய மடந்தையர்பால்
நாணாது செல்கின்ற தென்னைசெய் கேன்சிவ ஞானியர்தம்
கோணாத உள்ளத் திருக்கோயில் மேவிக் குலவும்ஒற்றி
வாணாஎன் கண்ணினுண் மாமணி யேஎன்றன் வாழ்முதலே.
உரை: சிவஞானச் செல்வர்களின் நேர்மையான மனமாகிய திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் திருவொற்றியூர்ப் பெருமானே, என் கண்ணின் கருமணியே, என் வாழ்முதலாகிய மெய்ப்பொருளே, மாண்பில்லாத எனது மனம் கொடிய நஞ்சு போன்ற மகளிரிடத்தே நாணுதலின்றிச் சென்று சேர்கின்றமைக்கு நான் என்ன செய்வேன்! எ.று. சிவனடியையே சிந்தித்தல் ஞானம் சிவஞானம் எனவும், அதனை, இடையறாது செய்தொழுகும் பெருமக்களின் திருவுள்ளத்தில் சிவபெருமான் எழுந்தருளுதலின், “சிவஞானியர் தம் கோணாத உள்ளத் திருக்கோயில் மேவிக் குலவும் ஒற்றி வாணா” எனவும் மொழிகின்றார். “சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்” (ஞானசம்) எனச் சேக்கிழார் கூறுவது காண்க. சிவன் திருவடியல்லது பிறிது யாதும் சிந்திக்கப்படாமையின், “கோணாத உள்ளம்” என்கின்றார். வாழ்நன் என்பது வாணன் என வந்து “வாணா” என விளியேற்றது. கண்ணிற்கு ஒளியும் பொலிவும் தரும் மணிபோல, உயிர்கட்கு ஞானமும் பொலிவும் தருதலின் “கண்ணினுள் மாமணியே” என்கின்றார். மண்ணுலகில் உடல் கருவிகளைத் தந்து வாழச் செய்தலின், “வாழ் முதலே” என்கின்றார். “மண்ணகத்தே வந்து வாழச் செய்தானை” (பள்ளி) என்பது திருவாசகம். திருவருட் செந்நெறிக்கண் செல்லுதற்குரிய மாண்பினை விடுத்தமைபற்றி, “மாணாத என் நெஞ்சம்” என்றும், மகளிரது காமக் கூட்டத்தைப் பன்முறையும் நாடிச்சென்று இளிவரல் எய்துவதுபற்றி, “மடந்தையர்பால் நாணாது செல்கின்றது” என்றும், மடக்கி நிறுத்த மாட்டாமை வெளிப்பட, “என்னை செய்கேன்” என்றும் கூறுகின்றார். ஒருமுறை சென்றவர் பின்முறை செல்லுமிடத்து, முன்னைய மதிப்பிழத்தலின், “நாணாது” என்றும், நஞ்சுண்டான் ஒரு கால் உய்தி பெறினும் காம நுகர்ச்சி பெற்றான் பல்காலும் அதனையே நச்சி உய்தியின்றிக் கிடத்தலின், “வன்னஞ்சனைய மங்கையர்” என்றும் உரைக்கின்றார்.
இதனால், மனத்தின் கொடுமை விளக்கியவாறு. (7)
|